சுமைதாங்கி எழுதிய சுயசரிதையின் சுருக்கம்

தனியோடம் தானேகவிழும் தனித்தன்மை தரமிழக்கும்
தனிச்செல்லும் தாரகைஅழும் தடம்மாறி தவம்கலையும்...
பனிமூட்டம் பாதைமறைக்கும் பன்மடங்காய் பணிகுறையும்
பாசமெல்லாம் பணமாய்மாறும் படைத்தவனுக்கே பாடம்சொல்லும்...
அருகம்புல் அறியாசுமை நறுமணமற்ற ஆவாரைசுமக்கும்
மருவியபெயரில் தேய்பிறையான தெருமலர்களும் தேரில்மணக்கும்...
மூன்றாம்சாமம் முதுமைகலைந்தால் முற்றம்வரை குற்றம்நாடும்
சான்றோன்கதையும் பதுமைகண்டால் சுற்றம்மறந்து பாதையில்விதைக்கும்...
வயிற்றுப்பிழைப்பா சதைகொண்ட கொழுப்பாயென்று திசைநான்கில் வசையுண்டு
பயிற்றகளைப்பால் வதையுண்ட மெழுகாயென்று இசைத்தவர்கள் எவருண்டு...?
வேசிகண்டவன் வேதம்கற்று காலக்கடைசியில் காசிகண்டானா
மாசுகொண்டவள் பாடம்கற்று ஓலைக்குடிசையில் மாய்ந்துமடிந்தாளா...!