எப்படி சிரித்திருப்பாய்
எப்படி சிரித்திருப்பாய்?
============================ருத்ரா
எப்படி சிரித்திருப்பாய்?
உன் இதழ் பிரியும் முன்
நான் உன்னைக்கடந்து
வந்து விட்டேனே!
உன் சிரிப்பு
எப்படி இருக்கும்?
அதைத்தான் எல்லா இடங்களிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
"என்னடா எப்போதும்
"இளித்துக்"கொண்டே இருக்கிறாய்?
எல்லோரும் கேட்கத்தொடங்கிவிட்டார்கள்.
"ஏண்டா? என்னாச்சு?"
அப்பா கேட்கத்தொடங்கி விட்டார்.
என்னால் பொறுக்க முடியவில்லை
அவள் சிரிப்பை
தரிசனம் செய்து விடவேண்டியது தான்.
அப்போது தான்
நான் இயல்பு நிலைக்கு வருவேன்.
அவள் சிரிப்பை அவள் அறியாமல்
பார்க்கவேண்டும்.
இதற்காக
அவள் தோழிகளுடன் இருக்கும் போது
ஒரு மரத்தின் மறைவில் நின்று
உற்று உருகி கவனித்தேன்.
இன்னும் சிரிக்கவில்லை.
ஆனால் முகம் அசைத்தும்
அவள் பேசும் அழகே
என்னை எங்கோ எதிலோ
கட்டிப்போட்டு விட்டது.
அதோ அதோ அந்த சிரிப்பு
தளும்பி வரப்போகிறது...
நான் காத்திருந்தேன்.
..........
ஐயோ ...
நான் மயங்கிச்சாய்ந்தேன்.
.........
"மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர்
கண்பார்வை இழந்தார்."
டிவி யில் செய்தி ஓடுகின்றது
................
படக்கென்று கண்விழித்தேன்.
"என்னடா இது பேயறைஞ்ச மாதிரி
மலங்க மலங்க விழிக்கிறாய்"
அம்மா
என்னை கேட்டுக்கொண்டிருந்தாள்
எனக்கு நன்றாக கண்பார்வை தெரிகிறது.
அப்பாடா!
"காதல் பிசாசு காதல் பிசாசு"
எங்கோ சினிமாப்பாட்டு கேட்கிறது.
===================================