கோலங்கள்
கடலோரம் தனிமையில்
கடலையை சுவைத்தபடி
கடற்கரை குருகு மணலில்
நண்டுகளிடும் கோலங்களை
கண்வெட்டாது ரசித்து நின்றேன்.
பிழையான புற்றுக்குள்
அவசரத்தில் புகுந்த நண்டு
அழையாத விருந்தாளியாய்
பதட்டத்துடன் வெளியேறி
திசைமாறி அங்குமிங்கும் ஓடியதில்
தோன்றிய கோலங்களை
கடல் மண்ணில் நான் கண்டேன்
பக்கத்துவீட்டு பங்கஜம்மாள்
தலைமுழுகித் தலைசீவிக்,
கொண்டையிலே பூச்சூடி
ஆச்சாரத்துடன் ஆறுதலாய்
இட்ட தாமரைப்பூக் கோலம்
அவள் பலகாலம்
கற்றிந்திட்ட கோலம்.
இயற்கையன்னை தந்த கலைத்திறனால்
நண்டுகள் கடல் மணலில் இட்ட கோலம்..
ஓயாத அலைகள் பல
கோலத்தை இரசித்ததினால்
அழிக்காது சென்றன சில.
புதுவடிவம் தேவை என்பதால்
அவற்றை அழித்துச்சென்றன
அவ்வலைகளில் சில.
புற்றுக்குள் நீர் புகுந்ததினால்
இருக்க இடமின்றி
பரதவித்த நண்டுகள்
அங்குமிங்கும் ஓடியதினால்
தோன்றியன புதுக்கோலங்கள்.
இயற்கையின் விசித்திரத்தை
இமைகொட்டாது வியந்து நின்றேன்.
பூங்காவில் நடக்கையில்
பாதை இரு கரையோரம்
பூத்து காட்சி தரும்
பூக்களின் பல வர்ணக் கோலம்
பூரிப்போடு பார்த்து மெய்மறந்து நின்றேன்
பூக்களின் வடிவமைப்பில் தான்
எத்தனை எத்தனையோ கோலங்கள்
மிருகங்கள் உடலின் மேல்
வரிகளும் புள்ளிகளுமாய்
எத்தனையோ விதமான கோலங்கள்
பறவைகளின் சிறகினிலும்
மீன்களின் அசைவினிலும்
பார்ப்பவர் மயங்கும் கோலங்கள்
பரந்த வான்வெளி இரவுதனில்
பிரமிக்கும் நட்சத்திரக் கோலங்கள்
அவைக்கு வர்ண சேலைகள் அணிந்த
வட துருவ வானில் வர்ணக் கோலங்கள்
வாழ்கையில் எதிர்நோக்கும்
பிரச்சனைகளுக்கு மனிதன்
போடும் எத்னையோ கோலங்கள்
போதுமடா போதும்
பார்த்து ரசிக்க ஒருவரும் இல்லை
****