பென்சன் Pension

முப்தைந்து வருட அரசாங்க சேவை அன்றோடு கிளாக்கர் கிட்னருக்கு முடிவடைகிறது. தனது வாழ்நாளின் பெரும் பகுதியை அரசாங்கச் சேவைக்காக அர்பணித்தவர் “கிட்னர்” எனச் செல்லமாக அழைக்கப்படும் சிதம்பரப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை. நேர்மைக்கும் , கடுமையான உழைப்புக்கும், சொன்ன வார்த்தை தவறாமைக்கும் பெயர் பெற்றவர்;. இருபது வயதில் அரசசேவையில் லிகிதராக வேலைக்குச் செர்ந்தவர். தனக்குப் பின், வரிசையில் நிற்கும் இரு சகோதரிகளுக்காக தொடர்ந்து படிக்கவசதியில்லாது வேலையில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. உள்ளூர் தபாற் கந்தோரில் தபால்காரனாக வேலைசெய்த அவரின் தந்தையான சிதம்பரப்பிள்ளையின் வருமானமும்; ஆசிரியையாக வேலை செய்த தாயின் உழைப்பும் தனது இரு சகோதரிகளுக்கும சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைக்கப் போதுமானதாக இல்லை என்று அவருக்கு தெரியும். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தும் படித்து, சர்வகலாசாலைக்கு நுலைந்து பட்டம் பெற வேண்டும் என்று அவர் கண்ட கனவு நனைவாகவில்லை. கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று தாயின் வற்புறுத்தல காரணமாக கிளரிக்கல் சேர்விஸ்சுக்கு விண்ணப்பித்த போது மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும் என்று அவர் எதிர் பார்க்கவில்லை.

நீண்ட கால அரச சேவையில் ஒரு நாளாவது அவர் நேரம் தாமதித்து வேலைக்குச் சென்றது கிடையாது. அதே போன்று மாலையிலும் அவர் தான் கடைசி ஊழியராக வேலை முடிந்து வீடு செல்வது வழக்கம். கிளரிக்கல் சேர்வீசில் சாதாரண லிகிதராக சேர்ந்து ஓய்வு பேறும் போது எவ்வளவோ போட்டிகளுக்குப் பின்னர், பரிபாலன சேவையில் பதவி உயர்வு பெற்று உதவி அரசாங்க அதிபரானார் (Assistant Government Agent ).. பாவம் அவ்வளவு நேர்மையாக வேலை செய்தும் அந்தப் பதவி; கிடைக்க அரசியல்வாதிகளின் தயவை நாட வேண்டிய நிலை அவருக்கு. அது கிடைப்பதற்கு எத்தனைத் தடவை பாராளுமன்ற ஊறுப்பினர் வீட்டு வாசலைத் அவர் தொட்டு வணங்கி வர வேண்டியிருந்தது. அவரது நல்ல காலம் அந்தப் பதவிக்கு பா.ம.உ யின் இனத்தவர்கள் ஒருவரும் போட்டிக்கு நிற்கவில்லை. தனது பாராளுமன்ற தொகுதிக்கு உதவி அரசாங்க அதிபராக கிட்னரை நியமித்ததி;ன காரணம் தனக்கு ஏற்றவாறு திட்டங்களை டெண்டரில் விட்டு தனக்கு சாதகமாக கிடைக்கத்தான என்பது கிட்னருக்குத் தெரியும். சங்கக் கடையில் மனேஜராகா இருந்து அரிசியில் மண் கலந்து விற்று திடீர் பணக்காரனாகி, அதன் பின் அரசியலில் புகுந்து பெரிய புள்ளியான அந்தப் பா.ம. உக்கு ஊழல் ஒரு புதிய விஷயமில்லை. உத்தியோகத்திற்கு கடிதம் கொடுப்பது முதல் பதவி உயர்வு வரை வேலைக்கு ஏற்றவாறு ரேட் வைத்திருந்தார். ஒரு போதும் அவர் பணத்தை நேரடியாக வாங்கியது கிடையாது. அவருக்கு உதவியாக இருந்த செல்வம் என்ற அவரது மைத்துனன்; தான் அதனைக் கவனித்துவந்தார். அவர் மூலமே பாராளுமன்ற உறுப்பினரின் தொடர்பு அவருக்கு கிடைத்தது.

அரசசேவையில் கிட்னர் சேரும் போது பல ஊர்களில் வேலை செய்ய வேண்டிவரும் என எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஊரொடு இருக்கலாம், பெற்றோருக்கு உதவியாக இருந்து குடும்பப் பிரச்னைகளுக்கு வழி காணலாம், என நினைத்த கிட்னருக்கு முதல் முறையாக வேலை கொழும்புக் கச்சேரியில் என்றவுடன் வேலைக்குப் போவோமா விடுவோமா என்ற நிலை. ஆனால் தாயார் குடும்ப நிலையைக்காட்டி வற்புறுத்தியபடியால் அவருக்கு வேலையை ஏற்க வேண்டிவந்தது. கொழும்பில உள்ள வெள்ளவத்தை பகுதியில் தாயரின் தூரத்து சொந்தக்காரார் ஒருவர் நடத்திய சம்மரியில் தங்க இடம் கிடைத்தது கொழும்புக்கு புதிதான அவரின் அதிர்ஷ்டம். ஒரு அறையில் மூன்று பேர் முடங்கி கிடக்க வேண்டிய நிலை. காலையில் குளிப்பதற்கும், மலசலம் கழிப்பதற்கும் கியூ வேறு. காரணம் மூன்று அறையுள்ள அந்த சம்மரியில் பத்து பேர் வாழ்ந்தனர். ஹாலின் ஒரு பகுதி கூட ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. காலை போசனம் காலி வீதியல் உள்ள காந்தி லொட்ஜில்;. நண்பன் ஒருவனின் அறிமுகத்தால் கொப்பி ஒன்றில் திகதி போட்டு எழுதும் மாதக் கணக்கொன்றை அங்கு தொடங்கினார். சரியாக சம்பள நாளன்று கணக்கு பார்த்து பணத்தைக் கொடுத்துப் போடுவார். வெள்ளை நிற லோங்சும,; வெள்ளை நீண்ட கை சட்டையும் அவரது வேலைக்குப் போகும் யூனிபோர்ம்.

கொழும்பில் ஆரம்பித்த அவரது அரசாங்க சேவை, கண்டி இரத்தினபுரி , காலி , குருநாகல் போன்ற சிங்களப் பகுதிகளிலும் மட்டக்களப்பு, புத்தளம் போன்ற தமிழ் பகுதிகளிலும் தொடர்ந்தது. அரச சேவையில் கடைசி ஐந்து வருடஙகளும் தான் யாழ் குடா நாட்டில் சேவை செய்யும் சந்தர்ப்பம அவருக்கு கிட்டியது. அதிக காலம் சிங்களப் பகுதிகளில் வேலை செய்ததினால் சிங்களத்திலும் எழுதி, வாசித்து உரையாடக் கூடிய திறமையை விரைவில் அவர் பெற்றார். மும்மொழிகளிலும் வேலை செய்யக் கூடிய கிட்னருக்கு அரசசேவையில் தனி மதிப்பை மற்றைய ஊழியர்களிடம் கொடுத்தது மட்டுமன்றி நல்ல உறவையும் ஏற்படுத்தியது. மொழிபெயர்ப்பு என்று வந்தவுடன் கிட்னரைத் தான் முதலில் சக ஊழியர்கள் தேடுவார்கள். அதனால் அவர் வேலை செய்த கச்சேரிகளில் எல்லாம் அவரது பெயர் பலருக்கு தெரியவந்தது. “மும்மொழிக் கிட்னர்”; என்று கூட பகிடியாகச் அழைப்பார்கள்..

தனது கெட்டித்தனத்தால் தன்னோடு கிளரிக்கல் சேர்வீசில் வேலை செய்த இரு நண்பர்களை தன் இரு சகோதரிமாருக்கு மாப்பிள்iளாக தேர்ந்தெடுத்து குறைந்த சீதனத்தில் கலியாணம் செய்து வைத்தவர் கிட்னர். சகோதரிகளுக்காக அவர் அவ்வளவு வயது வந்தும் திருமணமாகமலே இருந்தார். இரத்தினபுரி கச்சேரியில் வேலை செய்யும் போது அவருக்கு வயது நாற்பது. கெட்டித்தனத்தால் முதலாம் தர லிகிதராக பதவி உயர்வடைந்திருந்தார். அக்கச்சேரிக்கு காலியில் இருந்து மாற்றம் பெற்று வந்தடைந்த சில மாதஙகளில், அங்கு தனக்கு முன் கடமையாற்றிய பிரதம லிகிதர் அரசுக்கு சேர வேண்டிய சுமார் மூன்று இலட்சம் பணம் சேராமல் போனதிற்கு காரணம் என்பதையும் அவர் பல ஊழல்களை செய்ததையும் கண்டுபிடித்து அரசாங்க அதிபருக்கு அறிக்கை ஒன்று சமர்பித்தார். அந்த கண்டுபிடிப்பு மேலாதிகாரிகளிடம் பெரும் பாராட்டைமட்டும் பெறாமல் அடுத்த வருடமே பதவி உயர்வையும் அவருக்கு பெற்று கொடுத்து ஸ்பெசல் கிலாஸ் லிகிதராக கொழும்பில் உள்ள திறைச்சேறிக்கு மாற்றலாகி பென்சன் பகுதிக்கு செல்ல உதவியது.. இரத்தினபுரியில் வேலை பார்த்தபோது அவருக்கு கீழு வேலை செய்த டைபிஸட் பிரேமலதாவின் தொடர்பு ஏற்பட்டது. பதினெட்டு பக்க அறிக்கையை ஒருவரும் அறியாத விதத்தில் தட்டச்சு செய்து அவருக்கு கொடுத்ததினால் அவரின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானாள் சிஙகள இனத்தைச் சேர்ந்த பிரேமா. பெற்றோரை சிறுவயதிலேயே இழந்த பிரேமாவை வளர்த்தது பிள்ளைகள் இல்லாத அவளது தாய் மாமன் குடும்பம். இரத்தின வியாபாரியான அவர் குணத்திலும் இரத்தினம் தான். பிரேமா கிட்னர் மேல் வைத்திருந்த நம்பிக்கை நாளடைவில் காதலாக மலர்ந்தது அவளின் தாய் மாமனின் ஆசீர்வாதத்துடன் திருமணத்தில் முடிந்தது. நல்லகாலம் அவரின் கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க கிட்னரின் தாயும் தகப்பனும் உயிருடன் இருக்கவில்லை. கிட்னரின் சகோதரிமார் இருவரும் தமது தமையன் தமக்காக செய்த தியாகத்தைக் கூட பெரிதாகக் கருதி நன்றிக்காக கூட திருமணத்துக்குப் போகவில்லை. அதனால் கிட்டனர் அவர்கள் மேல் கோபப்படவில்லை.

வேலையில் கிட்னர் சற்று கண்டிப்பானவர். அரசாங்க விதிகளில் இருந்து சற்றும் விலகிச் செல்லமாட்டார். அரச சேவை பரிபாலன, நிதி சட்டப் புத்தகங்களை கரைத்து குடித்திருந்தார். அவர் கடைப்பிடித்த கடுமையான முறைகளினால் பலருக்கு பென்சன் கிடைப்பது தாமதாகியது. அரசசேவையில் பல திணைக்களஙகளில் வேiலை செய்தவர்களின் வேலை சம்பந்த அறிக்கைகள் முழுமையாக கிடைத்து, அவர்கள் அரசுக்கு ஏதாவது பணம் கொடுக்க வேண்டுமா என்று கணித்து , அவர்கள் ஊதியம் இல்லாது லீவில் இருந்த நாட்களையும் கழித்த பின்னரே அதை முற்றாக்கி மேலதிகாரியின் அனுமதிபெறுவார்.

பண்டகச்சாலை மேற்பார்வையாளராக பல இடங்களில் வேலை செயத ஒருவர் தனது கவனயீனம் காரணமாக பல அரிசிமூட்டைகளை களவு கொடுத்து அதிகாரிகளால் தண்டிக்கப்பட்டார். அவர் ஓய்வுபெற்றுபோது அவரி;ன் பென்சன் முற்றாக்க சுமார் இரண்டு வருடங்களாயிற்று. அறிக்கைகள்யாவும் சரியாக வந்து சேராததே அந்த தாமதத்திற்கு காரணமாகும். அரசுக்கு அவரது; கவலையீனம் காரணமாக ஏற்பட்ட இழப்பு சுமார் நாற்பதாயிரம் ரூபாய் . அதை அவரின் பென்சனில் இருந்து கழித்தால் அவருக்கு கிடைக்கும் மொத்த பணம் மிகச் சிறிது என கிட்டனருக்குத் தெரியும். நோயினால் அவதிப்படும் படும் அவ்வூழியரின் மனைவியின் மருந்துச்செலவுக்கு அந்தப் பணம். போதாது என்பதும் அவருக்குத் தெரியும். அரச சட்டப் புத்தகத்தில் உள்ள சில ஓட்டைகளைப்பாவித்து பத்தாயிரம் ரூபாய் மட்டுமே கழித்துவிட்டு மிகுதி பென்சன் பணம் கிடைக்கும்படி செய்த மனிதபிமானம் மிக்கவர் கிட்டனர். கண்டிப்போடு கலந்த இரக்க சுபாவம் படைத்தவர்.

பென்சன் திணைக்களத்தில், இறந்தவர்களுக்கும் மரண அத்தாட்சிப பத்திரமின்றி கள்ளக் கையெழுத்துடன் பென்சன் கொடுக்கப்பட்டு வந்ததை கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பித்தார் கிட்னர். அவரது திறமையை நம்பியே மேலதிகாரிகள் தங்கள் தீர்மானங்களை எடுத்தனர். பென்சன் பகுதியில் இருந்து மாற்றலாகி அவர் செய்த சேவைக்கு பதவி உதவி திடீரென்று வரவில்லை. ஒரு நாள் அவரது அதிகாரி தன் அறைக்கு வரும்படி அழைத்திருந்தார்.
கதவை தட்டிவிட்டு ஒதுங்கி நின்ற கிட்னரை “ கம் இன்” என்ற ஒரு அதிகாரக் குரல் அறைக்குள் இருந்து வரவேற்றது. அவரது அதிகாரி சோமரத்னாவுக்கு கிட்டனர் மேல் நல்ல மதிப்பு. அவரின் கீழ் வேலை செய்த சிங்கள ஊழியர்களை விட அவர் மேல் கூடிய நம்பிக்கை வைத்திருந்தார்.
சோமரத்தினா அமரும்படி அவரைக் கட்டளையிடும் வரை அவர் முன்னே பதுமையாக மரியாதையுடன் நின்றர் கிட்னர்
“ Sit down Kitnar”
“ Thank you sir”

“உமக்கு ஒரு நல்ல செய்தி சொல்லவே அறைக்கு அழைத்தனான். உமது கடும் உழைப்பையும் திறமையும் மதித்து உம்மை பரிபாலான சேவைக்கு மேலிடத்துக்கு சிபார்சு செய்துள்ளேன். ஆனால் உயர் பதிவிகளுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு அவசியம் வேண்டும. எனது சிபார்சை நம்பி மட்டும் இராதையும்” என்றார் ஆங்கிலத்தில் அதிகாரி சோமரத்தினா சொன்ன அறிவுரையைக் கேட்டு கிட்னருக்க என்ன பதில் சொல்வதென்ற தெரியவிலலை. பேசாமல் அவர் முகததைப் பார்த்தபடி இருந்தார்.
“ என்ன மௌனமாக இருக்கிறீர். உமக்கு மூன்ற பாஷைகளும் தெரியும், வேலையில் நல்ல திறமைசாலி. அது மட்டும் இருந்தால்; போதாது. சற்று அரசியல்வாதிகளோட ஒத்துப்போகவும்; தெரியவேண்டும். உமக்கு யாழ்ப்பாணத்தில் யாராவது எம் பியை தெரியுமே?.
“ எனக்கு யாரை சேர் தெரியும். நானும் வேலையும் என்று இருப்பவன். யாழப்பாணத்தில நான் வேலை செய்யவில்லை”
“எனக்கு உம்மைபற்றி தெரியும். உமக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அறைக்குள் அழைத்தனாhன். எனக்கு தமிழ் எம் பி ஒருவரின் பீஏயைத் தெரியும். அவரது அண்ணருக்கு நான் பென்சன் கெதியிலை கிடைக்க உதவினனான். அதுக்குப் பிறகு நாலைந்து பேருக்கு பென்சனும், கொமியூட்டட்டும் கெதியிலை கிடைக்க உதவினாhன். அவர் காசடிக்கிறவர்; என்று பிறகு தான் தெரியவந்தது. ஆனால் நான் கேட்டால் எந்த உதவியையும் செய்ய மாட்டன் என்று சொல்லமாட்டார். அவரோடை நான் கதைக்கிறன். நீர் போய் அவரைச் சந்தித்து நான் அனுப்பினதாகச்சொல்லும். அவர் பெயர் செல்வம். புரொமோஷன் ஓடர் வந்ததும் அவருக்கு 5000 ரூபாய் கொடுத்தால் போதும்.”
“கிட்னர் சிந்தித்தார். ஊழலுக்கு எதிரான போக்குள்ள தன்னை விசயம் முடிந்ததும் காசு கொடுக்கச் சொல்லுகிறரே தனது அதிகாரி. எப்படி முடியாது என்று சொல்ல முடியும். எனக்க இன்னும் ரிட்டயராக ஐந்து வருஷம் இருக்கிறது. இந்தப் புரொமோஷன் கிடைத்தால் எனக்கு கிடைக்கிற பென்சன குறைந்தது இருபது விகிதம் கூடும். அதோடை இந்த பதவியில் இருந்து ரிட்டயரானால் அதைக்காட்டி கொம்பெனிகளில் வேலை எடுக்க முடியும். மகள் மல்லிகாவின் வாழ்க்கைக்கு ஒரு வழி பார்க்கவேண்டும். ஒருத்தரும் எனக்கு உதவப் போவதில்லை. பிரேமாவும் ரிட்டையரானால் எங்கள் இரண்டு பேருடைய பென்சனிலை தான் வாழக்கை நடத்த வேண்டும்” கிட்டனர் சிந்தித்தார். அதிகாரிக்கு செல்வத்தின் கொமிஷனில் ஏதாவது பங்குண்டோ?. கிட்னருக்கு சந்தேகம் வந்தது.

“ என்ன கிட்னர் யோசிக்கிறீர். இந்த சான்சை தவர விடாதையும்”

“ சரி சார் நீஙகள் சொன்னபடி செய்கிறன். எனக்கு அவருடைய தொலைபேசி, விலாசம் ஆகியவற்றைத் தாருங்கள்.”

“ இன்று வெள்ளிக்கிழமை. வருகிற செவ்வாய் கிழமை முழு விபரததையும் தாரன். இந்த மாத முடிவுக்குள் புரொமஷன் லிஸ்ட்டை முடீவு செய்வினம். அதுக்கிடையிலை அவரோடை பேசி எம்பி யை சந்தியும் என்ன?” கிட்னர் பதிலுக்கு தலையாட்டினார்.
மூன்று மாதங்களில் கிட்னர் கையில் பதவி உயர்வுக்கான கடிதம் வந்தவுடன் அந்த கடிதத்தின பெறுமதி 5000 ரூபாய் என நினைத்து அவர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
*****
கடைசி நாளான அன்று வேலைக்கு போவது அவருக்கு என்னவோ மாதிரி இருந்தது. அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் நாளது. நாளை முதல் நான் ஒரு சாதாரண மனிதன். ஆயிரக்கணக்காக ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் பெயர் பட்டியலில் அவர் ;பெயரும் ஒன்று. இனி ரிட்டையர்ட் என்ற வார்த்தையையும் சீ ஏ எஸ் ஒபிசர் என்ற தன் பெயருக்கு அடுத்துள்ள பட்டத்துடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆபிசில் அவருக்கு பலத்த வரவேற்பு காத்திருந்தது. நேரே தன் அறைக்கு போன அவர் வெளியில் இருந்த தனது பெயர் பலகையைப் பார்த்தார். கிருஷ்ணப்பிள்ளை, உதவி அரசாங்க அதிபர், சாவகச்சேரி. நாளை வேறு ஒருவரின் பெயருடன் இந்தப் பலகை இங்கு தொங்கப் போகிறது.
“சேர் டீ கொண்டு வரட்டுமா. கலைத்துப் போய் வந்திருக்கிறியள்.” என்று பியூன் சின்னையா வந்து கேட்டான் பதிலுக்கு தலையாட்டிவிட்டு தன் அறைக்குள் சென்றார்.
என்னைப் பார்த்தால் கலைத்தவன் மாதிரியாகவா இருக்கிறது?. அரச சட்டத்தின்படி 55 வயதில் ஓய்வு பெற வேண்டும் ஆனால் அரசியல் வாதிகள் விரும்பினால் ஏதோ பிச்சை போடுகிற மாதிரி ஒவ்வொரு வருடமும் சேவையை நீடிப்பினம். அதுக்கு அவர்களிடம போய் பல் கெஞ்ச வேண்டும். இதுவும் ஒரு வாழ்க்கையா?. இன்னும் என்னால் பத்து வருஷம் வேலை செய்யக் கூடிய சக்தி இருக்கிறது. ஆனால் என் பதவி;, மந்திரி ஒருவரின் மைத்துனருக்கு ஏற்கனவே குறிக்கப்பட்டுவிட்டதாம். கடிதமும் போயாகிவிட்டதாம். ஏற்கனவே அவர் என்னிடம் ஒரு கிழமைக்கு முன் வந்து வேலையைப்பற்றி விசாரித்துப் போயிருக்கிறார். இனி எனது ரிட்டயர்n;மண்ட் ஓடரில் மாற்றம் வராது. அது எனக்கு தேவையில்லை. இவ்வளவு காலம் அரசாங்கத்துக்கு மாடாக உழைத்துக்கொடுத்தனாhன். மேலும் ஒரு வருஷம் என சேவையை நீடிக்க அவர்களால் முடியாதாம். இது தான் எனது சேவைக்கு வெகுமதி. சிந்தித்தவாறு தனது பிரத்தியோகப் பைலை புரட்டினார். சின்னையன் அறைக்குள் டீ யோடு வந்தாhன்.
சின்னையன் கொண்டு வந்த டீ யை வாங்கிக் குடித்தார் கிட்னர்.
“ சேர் இன்று மத்தியானம் உங்களுக்கு ஒபீஸ் ஆட்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சின்ன பார்ட்டி ஒழுங்கு செய்திருக்கினம். ஹெட் ஓபிசில் இருந்தும் ஆட்கள் வருகினமாhம.” சின்னையன் செய்தி சொன்னான்.”
“ அப்படியா?. நல்லது” என்றார் அமைதியாக கிட்னர். அவரது எண்ணங்கள் எல்லாம் வேறு எங்கையோ இருந்தது.
“ ரிட்டையாரன பிறகு என்ன சேர் செய்யப் போகிறியள்?”
“ முதலிலிலை என்டை பென்சன் தாமதிக்காமல் கிடைக்க கொழும்புக்கு போய் ஆட்களைக் கண்டு கெதிப்படுத்தவேண்டும. பென்சன கிடைச்சவுடன் இந்தியாவில் உள்ள கோயில் குளத்துக்கு ஒரு மாதம் போய் வர யோசித்திருக்கிறன்”
“சேர் ரிட்டயரான பிறகு எங்களையெல்லாம் மறந்திடாதையுங்கோ. நேரம் கிடைத்த நேரம் எங்களையும் வந்து பார்த்துப்போட்டு போங்கோ. உங்களிலை எல்லோருக்கும் நீஙகள் நல்லவர் என்ற மதிப்பிருக்கு”
கிட்டனர் முகத்தில் புன்னகை தெரிந்தது.
அன்று நடந்த பிரியாவிடையில் அவரது சக ஊழியர்கள் தங்கள் நினைவாக கொடுத்த சீக்கோ கைகடிகாரமும் ஆயிரம் ரூபாய் உள்ளடக்கிய கடித உரையும் அவரை உடல் சிலிர்க்க வைத்தது. எலலோருக்கும் தன் நன்றியை தெரிவித்து விட்டு கலங்கிய கண்களுடன் வேலைத்தளத்தைவிட்டு வெளியேறினார்.


*****
கிட்னர் ரிட்டயராகி ஒன்பது மாதங்களாகிவிட்டது. பிரேமா தொடர்நது வேலைக்குப் போய்வந்தாள். தனது பென்சன் விஷயமாக குறைநதது ஐந்து தடவையாவது கொழும்புக்கு போய் வந்திருப்பார். அறிக்கைகள் இன்னும் வந்து சேரவிலலை என்ற பதிலே வந்தது. அவர் வேலை செய்த போது இருந்த அதிகாரியும் ஊழியர்களும் இப்போது அஙகில்லை. அவர் வேலை செய்த இடத்தில் இருந்தவர் ஒரு சிங்களவர். அவரைப் பார்த்தால ஒரு சிடு மூஞ்சி என்பது முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. பென்சன பிரானஜ்சில அவர் வேலை செய்த போது இருந்த பியோன் நாணயக்கார இன்னும் அங்குதான் வேலையில் இருந்தான். நாணயக்கார ஒரு நாணயமான சிங்களவன். அவனைக் கண்டதும் அவருக்கு மனதுக்குள் ஒரு சந்தோஷம். அரசசேவையில பியூனைப்பிடித்தால் எந்த காரியமு; இலகுவாக நடக்கும் எனபத அவருக்கு தெரியும்.
“ மாத்தயா. இப்போ பென்சன் பிரான்ஞ்சில் ஒரு வேலை செய்து முடிப்பது சரியான கஷ்டம். ஒவ்வொருத்தருக்கும் பைலை நகாத்த காசு கொடுக்கவேண்டும். உங்கடை பைல் இன்னும் அசையாமல் கிடக்கிது. நான் கூட எனக்குத் தெரிந்த ஒருவரோடு கதைத்தனான். நீஙகள் முந்தி இங்கை வேலை செய்தனீங்கள் எண்டும் சொன்னானன்.. ஏதொ தன்னால் முடிந்ததை செய்கிறன் எண்டார். நீங்கள் முடிந்தால் சீப் கிளாக் ஜெயரத்தினாவோடை கதையுங்கள். வெளித் தோற்றத்துக்கு சீடு மூஞசியானாலும் சிங்களத்திலை நீஙகள் கதைச்சால் சில சமையம் உங்கடை பென்சன உங்களுக்கு கெதியிலை கிடைக்க உதவி செய்வார். அவரும் இரத்தினபுரிதான்.” என்றான சிஙகளத்தில் நாணயக்கார.

நாணயக்கார ஆலோசனை சொன்ன மாதரி ஜெயரத்தினாவுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கு ரிட்டடையராகி ஒன்பதுமாதங்களாகியும் பென்சன இன்னும் கிடைக்கவில்லை எனபதை எடுத்துச்சொன்னார். தான் இரத்தினபுரி கச்சேரியில் வேலை செய்ததாகவும் தனது மனைவியின் சொந்த ஊர் இரத்தினபுரி என்றம் சொன்னார். அவர் சிஙகளத்தில் உரையாடியது ஜெயரத்தினாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது என்பது அவர் முகத்தில் இருந்து தெரிந்தது. தன்னால் இயன்றளவு அவருக்குப் பென்சன் விரைவாக கிடைக்க வழிசெய்கிறேன் என்றார் ஜெயரத்தினா.
அந்த சந்திப்புக்கு பின் வீடு திரும்பி மூன்று மாதமாகியும் அவருக்குப் பென்சன் வரவில்லை. திரும்பவும் ஜெயரத்தினாவைப் போய் அவர் சந்திக்க திட்டம் போதுதான் Pension approved என்று சில படிவஙகளுடன் கடிதம் ஒன்று வந்தது. அந்த படிவங்களை நிறப்பி அதில் குறிப்பிட்டுள்ள அத்தாட்சிகளுடன் அனுப்பினால் அடுத்தமாதத்தில் இருந்து பென்சன் அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என்றிருந்தது கடிதத்தில் தாமதிக்காமல் பூர்த்தி செய்த படிவங்களையம் அத்தாட்சி பத்திரங்களையும் ஒரு கடித உறைக்குள் வைத்து ரெஜிஸ்டேர்ட் போஸ்டில் அனுப்பிப் போட்டு வீடு திரும்பினார் கிட்னர். நெஞ்சுக்குள் இறுக்கிறது என்று அன்று இரவு படுத்தவர் தான் பிறகு அவர் எழும்பவேயிலலை. பாவம் கிட்னர். கடும் உழைப்பின் பயனை அவரால் அனுபவிக்க கொடுத்துவைக்கவில்லை. அவர் உடல் அதற்கு முதல் பென்சன் எடுத்துவிட்டது.

*****

எழுதியவர் : பொன் குலேந்திரன் -கனடா (9-Dec-17, 9:05 pm)
பார்வை : 172

மேலே