லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்

சுவர் வரைந்த சித்திரம்

அதி நவீனச் சித்திரங்கள்
அலங்கரித்தன
அரசு சுவர்களை
கண்கவர் காட்சியை
போகிற வருகிற
புன்னகைகள் கடக்கத் தொடங்கின

பிறர் மகிழ வரையப்பட்ட
ஓவியங்களால்
தன்னை இழந்த சுவர்
உள்ளூர அழத்தொடங்கியது

மெல்ல மெல்லத் தெளிவுற்று
தன் மீதிருக்கும் வண்ணங்களை
ஓவிய நளினத்தோடு
உதிர்க்கத் தொடங்கின சுவர்கள்

சித்திரங்கள் உதிர்ந்த இடத்தையும்
எஞ்சிய சித்திரத்தையும்
வைத்து
சுவர் தனக்கான
சுவடுகளை
தானே தீட்டிக் கொண்டது

அதை ஓவியமென்றும்
கூறலாம்
இதை நீங்கள் கவிதையென்று
சொல்வதைப் போல.


நீர்ப் பாறை

ஆதியில் அவள் பாறையென்றிருந்தாள்
நீலக்கடல் சூழ்ந்து நித்தம் அவளை
அலைஅலையாய்க் கொஞ்சிக் கொண்டிருந்தது

சிறிதும் இரக்கமில்லை கடல் மீது
பெருமிதம் கொண்டிருந்தாள்

கவலையற்ற கடல்
மெல்ல தின்னத் தொடங்கியது பாறையை
மேனி மெலிந்தாள்
கரடுமுரடுகள் குறைந்தன
கொடியிடையாள்
கடலாலே அழகியானோம்
என்றே மகிழ்ந்திருந்தாள்

மெல்ல நீர்ப்பாறையாய்
கூழாங்கல்லாகி
தன்னைத் தொலைத்திருந்தாள்
கடலடியில்.


உணர்வின் வண்ணம்

அடுக்கடுக்காய் ஓவியத்தின்
இழைகளை
நீக்கிப் பார்க்கிறேன்
எஞ்சியது
தூரிகைதீண்டாத
வெண்காகிதமல்ல

மேகம் நகர்ந்த
இடத்தில் மிச்சமாய்
நின்றிருந்தது
மேகத்தின் நிழலாய்
வானத்தின் வண்ணம்

மீட்கப்படுவது
அல்லது படாதிருப்பது
உணர்வின் வண்ணமோ!

எழுதியவர் : (10-Dec-17, 7:23 pm)
பார்வை : 62

மேலே