பாதங்களால் நிறையும் வீடு

அவர்கள் நகரத்துக்கு வருகிறார்கள்
இரவுப் பேருந்தில்…..பாசங்களைப் பொட்டலம் கட்டி!
பிள்ளையின் நெடுநாள் வெளியூர்ப் பயணங்களில்
மருமகளின் உடல்நலக் குறைவில்
பேரப் பிள்ளைகளின் தொடர் காய்ச்சல்களில்
இரவோடு இரவாக வந்து சேர்ந்துவிடும்
காவல் தெய்வங்கள் ..,கிராமத்து தாய் தந்தையர்கள்

குலதெய்வத்திற்கு சாத்திய குங்குமம் தருகிறார்கள
குழந்தைகளுக்கு திருஷ்டி கழித்துவிடுகிறார்கள்
ஆதிக்கதைகளைச் சித்திரங்களாக தீட்டுவார்கள்
ஆயிரம் காலங்களை ஆழ்மனதில் பயிரிடுகிறார்கள்
வறண்ட நகர நினைவுகளுக்கு
வசந்த ஊஞ்சல்கள் கட்டித்தருகிறார்கள்
பூர்வீக மண்ணின் பொன் கனவுகளை
நெஞ்சில் பூசிவிடுகிறார்கள்

வீடெங்கும் வாழ்க்கையை நிறைத்துவிட்டு
அவர்கள் விடைபெறுகிறார்கள்….
இரவுப் பேருந்தில்.. வெறுமையை ஏந்தி .

அவர்களின் துடிப்பு இங்கிருந்தாலும்
உயிர், கிராமத்தில் இருக்கிறது..!


(மீள் பதிவு )

எழுதியவர் : கவித்தாசபாபதி (13-Dec-17, 4:33 pm)
பார்வை : 88

மேலே