இப்படியும் ஓர் கற்பனை - Ice Box
ஐந்தடி உருவம் உயிரற்று,
ஆறடி நிலத்தில் உறங்க
காத்திருக்கும் தருணம்!
ஐம்புலனும் வேரற்று..
உமிழ் நீர் சுரக்காமல்..
விழி நீர் வரண்டு..
மௌனமாய் - என்
இறுதிப் புன்னகை!
ஒற்றை நெற்றிப்பொட்டு
அழகாய் அலங்கரிக்க,
சிங்காரப்பட்டி சங்கீதமும்..
ஓலம்பட்டி ஒப்பாரியும்..
சின்ன ரோஜா கம்பெனி
மைக் செட்டும்..
வந்தோரை உபசரிக்க!
கடா வெட்டும்,
கறி விருந்தும்..
சிவகாசி பத்துச் சர
வான வேடிக்கையும்..
என் ஊர்வலத்தை
சிங்காரிக்க!
தாயும் தமயனும்..
சகோதரியும் சிநேகிதியும்..
மாமனும் மச்சின்னும்..
மனம் உமிழ்ந்து
என் புகழ் பாட!
பெற்றவனும் உற்றவனும்
தம் நினைவுகளில்
எனை ஆழ்த்த..
உணர்வுகளற்று,
உரிமைகளற்று..
ஓர் நிழலாய்
நான் உறங்குகின்றேன்!
ஜீவ நதிகள் எல்லாம்...
கடலில் ஒன்றாக கலந்திடுமாம்.,
கலகத்தில்..
கலங்கித்தான்
நிற்கின்றேன்!
என் கல்லறையில்
எழுதி வையுங்கள்..
"நான் - எடுத்துச் சென்றது ஒன்றுமில்லை,
விட்டுச் சென்றதும் ஒன்றுமில்லை.."
என் கல்லறையில் பூக்களை
நட்டுவையுங்கள்
என் நினைவுகளுடன் அதுவும்
மலர்ந்திருக்கட்டும்!