சமாதானம்

புதுப் புது அவதரிப்புகளாக
ஓவ்வொரு பயணமும்

கையசைக்கத் தாமதித்து
கலங்கிய கண்களைத் திருட்டுத்தனமாக
துடைத்துக் கொண்டும்
சிரிக்க முடிகிறதே சில சமயங்களில்

அழுகையை அடிமனதில்
அடக்கிக்கொண்டு வார்த்தை வராமல்
முகம் கோணி தலையசைத்து
விடைபெறும்போது
விருட்டெனச் சிந்தும்
சில கண்ணீர்த் துளிகள்

கவலையில் முகம் சோர்ந்து
கவலைபடாதே எனச் சொல்லும்
தோரணையில் ஒவ்வொன்றும்
உறவுக்குள்ளும் நட்புக்குள்ளும்
மனதை விட்டுவிட்டு
வாழ்வை கோபிக்க முடியா
பட்சமாய
தொலைவாய் சென்று
திரும்பிப் பார்க்கும் கணங்கள்

ஈரம் படாத இதழ்கள்
வறட்டுப் புன்னகையில்
கை குலுக்கி
விடை கொடுத்த முகங்கள்
அதே இடத்தில் எல்லாம்
புள்ளியாய்க் கண்ணில் கரைய

விசும்பும் இதயத்தோடு
பயண நடுவில் இமை மூடி
தூங்கும் பாவனையில்
பின் நோக்கி உருளும் நினைவுகள்

எல்லாம்
சிறு பிரிவாய் சமாதானம்

எழுதியவர் : (14-Dec-17, 3:31 pm)
Tanglish : samaathaanam
பார்வை : 2097

மேலே