எங்கு தொலைக்கலாம்
எங்கு தொலைக்கலாம்
=====================
நிறைய சொல்லிவிட்டிருக்கலாம் தான்
சொல்லி
என்ன ஆகிவிடப்போகிறது
ஏதும் நிகழப்போவதில்லை
சொல்லிவிட்ட இரைச்சல்களுக்குப்பின்னால்
ஒரு நொண்டிமாட்டு வண்டியில்
பரிதாபித்துக்கடக்கும்
காத்திரங்களே மிஞ்சும்
வார்த்தைகளைக்
கொல்லுகிறபோதெல்லாம்
சேர்ந்தே இறந்து விழுகிறேன்
இன்றைய விழிப்பின்
முதற்கட்ட நுகர்வு அதுதான்
நெருங்கும் குரல்களிடமிருந்து தூரமாகிப் போகவேண்டும்
நிழலுள் மறைப்படும் நிழல்போல
விதையவோ புதையவோ
மறைவிடம் கிடைக்கவில்லை
""எங்கு தொலைக்கலாம்""
இரைச்சல்களை
அடிசாற்றிக் கொண்டிருக்கும் மனதிடம்
இப்போதெல்லாம்
பேசுவதற்கு ஏதுமில்லை
நிறம் காணாதக் கண்களையும்
எதையும் சட்டைச் செய்யாத செவிகளையும் போல
அருவத்தின் மீள் சக்திகள்
உறுப்புகளாகிக் கிடத்தப்பட்டிருக்கலாம் தான்
அந்த இரைச்சல்கள்
கீழேக் கீழே என அமிழும்
மீயொலிகளைக்கடந்த
ஆழமிருந்திருக்கலாம் தான்
விழுங்கியதும், எதன் மூலமாகவோ
புறம் கேட்கமுடியாதபடி
நீர் நிலையோ
அஃறிணையோ ஆகமறுக்கிறது,
இருட்டிற்குள் இருட்டாகி மறைந்துவிடலாம் என்றாலும்
அடர்க்குளிரில்
ஆண் குறியின்,
சிலிர்த்தெழும்புதல் போல
அமிழ அமிழ மேலேறுகிறது, பலவீன ஆவி,
மரணமில்லாத, கல்லறையில்லாத,
பிணத்தின்மேல்
பூக்களின் வாசனையுமில்லாத
சம்பிரதாயங்கள் இல்லாத
கூச்சலிட்டு
கதறியழும் கூட்டமில்லாத
தொலைதலுக்கு
ஒருபோதும் ஒத்துழையாத உயிர்
மக்கிப்போகும்
பண்டங்களில் ஏதேனும் ஒன்றாகியிருக்கலாம்
மது பாட்டில்,
ஒன்றோ இரண்டோ அதற்கு மேற்பட்ட
ஆங்கில முனங்கல்,
புணர்வொலி, களிலிருந்து
மீளாத மயக்கம்,
இரவு கடத்திவிட்டு
கனமான போர்வைக்குள் அடைபட்டிருக்கும்
ஒரு புலர்ச்சியில்,
அரைத்தூக்கத்தின் இதம் என
வழப்பமான
பாதைகளைத் தாண்டி துரிதம் கொண்டிருக்கும்
உயிரற்ற
நினைவுகளாவதைவிட
நினைவுகளில்லாத உயிராகி விடலாம் தான்
உணராத யாரையோக் கடக்க
அனுசரன்