தாயகம் பெயர்தல் வாழ்வும் வலியும்
(மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அதன் பதிவுகள்)
20,21,22 தாயகம் கடந்த தமிழ் அனைத்துலக கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை
‘இடப் பெயர்வு’ என்பது பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானதாக இருந்த போதிலும்கூட அதில் பறவைகளுக்குச் சுதந்திரம் இருந்தது. ஏனெனில் வானம் பறவைகளுக்குப் பொதுவானதாக இருந்தது. ஆனால், நிலம் மனிதர்களுக்குப் பொதுவானதாக இருந்ததில்லை. இருந்திருந்தால் அவர்கள் ஏன் கடல் தாண்டி, மலை தாண்டி, இந்த மலையகம் நாடி வந்து காடு அழிக்கும் கொத்தடிமையானார்கள்? இந்த இடப் பெயர்வுக்கு அரசியல், சமூக, பொருளாதார காரணங்கள் இருந்திருந்தாலும்கூட பொய்யான ஆசை வார்த்தைகளால் அவர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.
‘கூலிகள் தேவை’ என்ற தலைப்பில் 1790-களில் நாகப்பட்டினத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை, “பினாங்கு கரும்புத்தோட்டத்தில் வேலை செய்ய கை நிறைய சம்பளம், இலவசமாகத் துணிமணிகள், கப்பல் போக்குவரத்துக்கான இலவசமான பயணச்சீட்டு, சொந்தமாகக் காய்கறிகள் பயிரிட்டுக்கொள்ள நிலம், கோழி ஆடு, மாடு சொந்தமாக வளர்த்துக்கொள்ள வசதிகள் செய்து தரப்படும். உடல்நலம் பேண தமிழ் பேசும் மருத்துவர்கள், தாதியர்கள்…” என்றெல்லாம் சொல்லிற்று. இவ்வளவு ஆசை வார்த்தைகளுடன் ஏன் தமிழகத் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டார்கள் என்ற கேள்விக்கு 1887- இல் பிரிட்டிஷ் மலாயாவுக்கான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கவர்னர் சர் ஃபெரிடரிக் வெல்ட் கூறுகிறார். “தற்பொழுது இருக்கும் சீனக் கூலிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார்கள். தமிழர்கள் அமைதியானவர்கள்; அடக்கமானவர்கள். எதிர்த்துப் பேசாதவர்கள். அடங்கி ஒடுங்கி போகக் கூடியவர்கள். அவர்களை நிர்வகிப்பது மிக எளிது.”
அதேபோல ஒரு தோட்ட நிர்வாகியின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலில் ஐன்ஸ் வர்த் என்ற ஆங்கிலேயர் கூறுகிறார்… “இந்தத் தமிழர்கள் உடலாலும் உள்ளத்தாலும் அவர்களது நாட்டிலேயே ஒடுக்கப்பட்ட ஜீவன்கள். பார்க்கவே பரிதாபமாக இருக்கும் இவர்கள் அரை வயிற்று உணவோடு ஏழைகளாகவும் கோழைகளாகவும் வாழ்க்கையில் மீது எந்த நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள்….”
அடர்ந்த காடுகளும் இங்கொன்றும் அங்கொன்றுமாக சின்னஞ்சிறு மீனவ கிராமங்களாக இருந்த அன்றைய மலாயாவில் காலூன்றி அங்கிருந்த குறுநில மன்னர்களாய் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த சுல்தான்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதாய் உள் நுழைந்தது பிரிட்டிஷ் காலனித்துவ அரசு. 1790-ல் சுல்தான்களுக்குப் பாதுகாப்புக்கொடுப்பதாய் உள் நுழைந்த பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்திற்கு கூலிகளாய் உழைக்க இந்தியாவிலிருந்து காலங்காலங்கமாகத் தாழ்த்தப்பட்டுக் கிடந்த தமிழர்களும் தெலுங்கர்களும் தேவைப்பட்டார்கள். 1790களில் சூரிய ஒளி மண்ணில் படாத அடர்ந்த வனக்காடுகளை அழிக்கவும் கரும்பு, கொக்கோ, மிளகு பயிரிட தோட்டங்களை உருவாக்கவும் பின் 1870களில் சாலைகள் அமைக்கவும் இரும்பு பாதையை இடவும் நகரங்களைத் தூய்மை படுத்தவும் பாலங்கள், அரச கட்டடங்கள் கட்டவும் தமிழர்கள் சஞ்சிக்கூலிகளாக (ஒப்பந்த கூலிகள்) அலைகடல் தாண்டி அழைத்துவரப்பட்டார்கள்.
எதிர்ப்பார்ப்புகளுடனும் கனவுகளுடனும் மலாயா ‘சொர்க்க பூமி’ என்ற ஆசை வார்த்தைகளை நம்பி வந்தவர்களை மலேரியா கொசுக்களும் மலைப்பாம்புகளும் காட்டுப்பன்றிகளும் காலரா நோய்க் கிருமிகளும் வரவேற்றன. அடிமைகளைப் போல மிக மோசமாக நடத்தப்பட்ட அவர்களில் மாண்டவர்கள் போக மீண்டவர்களைக் கொண்டு, காடுகள் அழிக்கப்பட்டு நாடு, நகரங்கள் உருவாக்கப்பட்டன.
அன்றைய மலாயாவின் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக இருந்தது ரப்பரும் ஈயமும்தான். ஈய சுரங்கங்களில் வேலை செய்ய சீனர்களும் ரப்பர் தோட்டங்களுக்குத் தமிழர்களும் கொண்டுவரப்பட்டனர். ஈய உற்பத்தி குறைய ஆரம்பித்தபின் நாளடைவில் ரப்பர் உற்பத்தியும் அதன் ஏற்றுமதியும் பெருகியது. 1900களில் 50,000 ஏக்கர்களாக இருந்த ரப்பர் தோட்டங்கள் 1911ல் 543,000 ஏக்கர்களாகவும் 1938ல் 3,272,000 ஏக்கர்களாகவும் பல்கிப் பெருகி மலாயாவை உலகிலேயே இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மையானதாக ஆக்கியது. ஆனால் அந்த ரப்பர் மரங்களின் வேர்களில் தமிழர்கள் சிந்திய வியர்வையும் உதிரமும் அந்த ஏழைப்பாட்டாளிகளுக்கு எந்தப்பலனும் தரவில்லை. தோட்டத்து முதலாளிகளின் கஜானா நிரம்பியது. நாட்டுக்கு வருமானம் பெருகியது. ஆனால், அந்த அப்பாவித் தோட்டத் தொழிலாளிகள் அடிப்படை வசதிகள்கூட ஏதுமின்றி வாடித்தவித்தனர். மலேரியா, காலரா போன்ற வியாதிகளால் போதிய மருத்துவ வசதியின்றி மாண்டவர் பல்லாயிரம். என்னதான் ரப்பர் ஏற்றுமதி கூடினாலும் உதிரம் சிந்தி உழைத்தவர்களின் ஊதியம் உயராதவாறு முதலாளிகள் பார்த்துக்கொண்டனர். தோட்டப்புறத் தொழிலாளிகளின் கடன் சுமை அதிகரித்ததால் அவர்கள் அந்தத் தோட்டத்தில் கொத்தடிமைகளாய் காலம் காலமாக உழைக்க வேண்டியதாயிற்று. தோட்டங்கள் தோறும் கள்ளுக்கடைகளைத் திறந்து அங்கு தாராளமாக பெருகி ஓடவிட்ட கள்ளும் கூட அதன் பங்கிற்கு அவர்களை அடிமைகளாக்கியது.
பிரித்தாளும் கொள்கையின் மூலவர்களான ஆங்கிலேயர்கள், கூலிகள் தமிழர்களாய் இருந்ததால் அவர்களை மேய்க்கும் மேய்ப்பர்களாகவும் மேலாளர்களாகவும் ரயில்வேயில் யாழ்ப்பாணத்தவர்களையும் பால்மரத்தோட்டங்களில் மலையாளிகளையும் கொண்டு வந்து வேலைக்கு அமர்த்தினர். போலிஸ் வேலைக்குப் பஞ்சாபியர்கள் வந்து சேர்ந்தார்கள். முதலாளிகளையும் மேலதிகாரிகளையும் மகிழ்விக்க இந்த மேலாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு நிகராக அந்த அப்பாவி தொழிலாளர்களின் மீது ஆதிக்கம் செலுத்தினர்.
இந்தச் சோகங்கள் பலவும் மலேசிய நாட்டுப்புற பாடல்களிலும் சிறுகதைகளிலும் நாவல்களிலும் பதிவாகியுள்ளன. உதாரணமாகச் சிலவற்றைப் பார்க்கலாம்:
‘வாய்பிழந்த மலைப்பாம்பு
வளைபெயர்ந்த கருநாகம்
பேயுலவும் வெளிக்காடு
பீதியன்று மறைந்ததுண்டோ?
புதர் அடைந்த மேடு பள்ளம்
புலி உலவக் கூடு பயம்
உதர வைக்கும் பணி இருட்டு…’ – கவிஞர் வீரமான்
இதே போல மலேசியத் தமிழ்க் கவிதை களஞ்சியம் மற்றும் பேராசிரியர் தண்டாயுதம் தொகுத்த நாட்டுப்புற பாடல்களிலும் இந்த அவலம் பாடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
வந்தகத! வாழ்ந்தகத!
வந்தகத வாழ்ந்தகத – நம்ப
வயிறெரிஞ்சி போனகத
சுட்ட கருவாட்டுல
கஞ்சிய குடிச்சிக்குனு
காசு பணம் சேக்கலான்னு
கையடிச்சி கொண்டாந்தாங்க
*கொய்னாத் தண்ணிய குடிக்கவும் வச்சாங்க – வந்தகத
சஞ்சிக் கூலிங்களுக்கு
சொர்க்கம் காட்டத்தான்
*பொற மலயில் தள்ளினாங்க
சொர்க்கமும் காணலைங்க
கொசுவால குடிச்ச மிச்சம்
கொள்ளையிலும் போனாங்க – வந்தகத
பகடியான வார்த்தையில
பால்மரத்தில் பணங் காய்க்கும்
ஆவடியில் முந்திக்கிட்டா
அதிஷ்டமும் தானே வரும்
இப்படியும் ஜாலாக்கு
எப்படியும் போட்டாங்க – வந்தகத
பொய்சொல்லி கப்பல் ஏத்தி
பொழப்பெல்லாம் போச்சுதுங்க
கருங்கடல தாண்டி வந்து
கைகட்டி நின்னோமுங்க
கல்பமும் உண்டுன்னு கையேந்தி ஊமையானோம் – வந்தகத
*(கொய்னா – மலேரியா காய்ச்சலுக்கான மருந்து)
(பொற மல – (புற மலை) – தமிழகத்திலிருந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தங்க வைக்கும் இடம்) – நாட்டுப்புறப் பாடல் தொகுப்பிலிருந்து
‘கைகட்டி நின்னோமுங்க’ என்பதில் அடங்கிப் பணியும் இயலாமையும் ‘கையேந்தி ஊமையானோம்’ என்பதில் வழியும் கழிவிரக்கமும் கையாளாகத்தனமும்தான் அவர்களின் இயல்புகள் என அன்றைய மலாயாவின் பிரிட்டிஷ் கவர்னர் சர் பெட்ரிக்கும் ஐயன் வெர்த்தும் 1800களிலேயே கண்டுபிடித்து வைத்திருந்தனர் என்பதுதான் நமக்கு நம்மைப்பற்றி வரலாறு கூறும் செய்தி.
இப்படி அல்லலுற்று அவதிக்குள்ளான தமிழர்களின் வாழ்வை மேலும் கொடுமையாக்கிய மூன்று நிகழ்வுகளைப்பற்றியும் அதன் இலக்கியப் பதிவுகளைப் பற்றியும் இனி பார்ப்போம்.
ஜப்பானியர்கள் ஆட்சி காலம்
“எங்கப்பன் சப்பாங்காரன் வந்தப் பொறவுதான் இந்த பினாங்கு சீமை செழிப்படையப்போகுது. அஞ்சி காசுக்கு விக்கிற சீனி மூனு காசுக்குக் கெடைக்கும். கந்தம் அரிசி 10 காசுக்குக் கிடைக்கும். துணிமணியைக் கப்பல் கப்பலாக கொண்டாந்து இனாமா கொடுப்பான். ஆளுக சம்பளத்தையெல்லாம் ஒசத்திடுவான் பாருங்க…” என்று ‘இருண்ட உலகம்’ (சி.வடிவேல்) கதையில் வரும் முத்தாயி பாட்டி மகிழ்ச்சி பொங்க கூறுகிறாள்.
ஆங்கில ஆட்சியில் அழுது தவித்த தமிழர்கள் ஜப்பானியர் வருகையை உவகையுடன் எதிர்கொண்டனர். ஆங்கிலேயரிடம் இருந்து மலாயாவை ஜப்பானியர்கள் 1941 டிசம்பரில் கைப்பற்றினார்கள். தமிழர்களின் நம்பிக்கையில் மண் விழுந்தது. பள்ளிகளெல்லாம் மூடப்பட்டன. தோட்டத்தொழிலாளிகள் வேலையின்றித் தவித்தனர். உணவுக்குக் கடுமையாகப் பஞ்சம் ஏற்பட்டது. வெளியில் வர பயந்து எல்லோரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். வயிற்றுப்பாட்டுக்கு மரவள்ளிக் கிழங்கைப் பயிரிட்டு அதனையே உண்டு வாழ்ந்தனர். ஜப்பானியர்கள் சீனர்களுக்குத்தான் பெரும் துன்பத்தை விளைவித்தனர். ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இருந்த பழைய பகைமைக்கு இங்கே வஞ்சம் தீர்த்துக்கொண்டனர். பினாங்குத் தீவில் இன்றும் உண்டு ‘தலைவெட்டி தெரு’. அந்தத் தெருவில் முச்சந்தியில்தான் சீனர்களின் தலைகள் வெட்டப்பட்டு வரிசையாக அணிவகுத்து வைக்கப்பட்டிருக்குமாம். இந்தியர்கள் நேரடியாகத் துன்புறுத்தப்படவில்லை. ஜப்பானியார்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் கொண்ட நட்பும் அவர் ஆங்கிலேயரை எதிர்க்கின்றார் என்ற தோழமையும்தான் அதற்குக் காரணம்.
நேதாஜி ஆரம்பித்த ‘இந்திய தேசிய இராணுவத்தில்’ மற்றும் ‘இந்திய சுந்ததிர முன்னணியில்’ சாரை சாரையாக அணிவகுத்து சேர்ந்தனர் மலாயாவில் அன்று வாழ்ந்த இந்தியர்கள். பாரத சுதந்திரத்துக்குப் போராடுகிறோம் என்ற உணர்வின் உந்துதலால் நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுத்தனர் அன்றைய மலாயா வாழ் இந்தியர்கள். முஷ்டி மடக்கி வானில் உயர்த்தி “ச்சலோ டில்லி” என்றும் ‘ஜெய் ஹிந்த்’ என்றும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதெல்லாம் முழக்கமிட்டுக்கொண்டனர். மொத்த பாரதமும் காந்தியின் அகிம்சையில் அடங்கி இருக்கையில் மலேசிய இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் நேதாஜியின் உற்சாகமூட்டலிலும் வீரமிக்க உரைகளிலும் உத்வேகம் பெற்றவர்களாய் ஆயுதம் ஏந்தி போராட ஆயத்தமாயினர். ‘இமையத் தியாகம்’ என்ற நாவலில் ஆ.ரெங்கசாமி இந்த வரலாற்று உண்மை குறித்து மிக விரிவாகக் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு வெளியே பாரத விடுதலைக்காக ஒரு போர் நடந்தது. இந்தியாவில் இந்தியர்கள் ‘சத்யாகிரகம்’ செய்துகொண்டிருக்கையில்.
ஜப்பானியர்கள் சயாம் வழியாக பர்மாவுக்கு ரயில் தண்டவாளம் அமைக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கான தமிழர்களை சயாமுக்குக் கொண்டு சென்றனர். தொடக்கத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கொண்டுச் சென்றவர்கள் பின்னர் இதனையே வலுக்கட்டாயமாகச் செய்தனர். தோட்டப்புறங்களில் நுழைந்து கண்ணில் பட்ட தமிழ் இளைஞர்களையெல்லாம் கதறித்துடித்த பெற்றோர் மனைவி மக்கள் முன்பாக துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றனர். தாய்லாந்தின் காஞ்சனபுரியில் இருந்து தென் பர்மாவின் மோல்மின் வரையில் (kanchana- moulmein) அவர்கள் போட்ட இருப்புப்பாதை பல்லாயிர தமிழர்களுக்கான ‘இறப்புப் பாதையாக’ இருந்தது. அங்கே கொண்டு செல்லப்பட்ட ஏறத்தாழ ஒரு லட்சம் இந்தியர்களில் சுமார் 10,000 பேர் மட்டுமே குற்றுயிரும் குலை உயிருமாகத் திரும்பினர் என்பது வரலாறு. இவ்வாறு வீட்டில் ஆண்மகன் ஒருவர் இல்லாமல் போகும்போது ஏற்படும் வெறுமையையும் வறுமையையும் ‘புதியதோர் உலகம்’ என்ற நாவலில் ஆ.ரெங்கசாமி விரிவாக எழுதியுள்ளார்.
ஜப்பானியர்கள் நேதாஜி போன்று வேடமணிந்த ஒருவரை அங்கே அழைத்துச் சென்று அம்மக்களிடம் பேச வைத்ததாகவும் ஒரு கதை உண்டு. ஜப்பானியர்கள் ஈவு இரக்கமற்றவர்கள் என்பதை ‘முத்துசாமி கிழவன்’ (சி.வடிவேலு) கதை பின்வருமாறு விவரிக்கின்றது. “குளிராலும் கொசுக்கடியாலும் அட்டைக்கடியாலும் வருந்துவர் ஒருபுறம். சயாமியர்கள் காய்ச்சி கொண்டு வந்து விற்கும் ஒரு வித சாராயத்தைக் குடித்துவிட்டு குடல் வெந்து அவதிப்படுபவர் ஒரு புறம். சரியாக வேகாத கல்லும் மண்ணும் கலந்த சோற்றையும் குழம்பு என்ற பெயரில் மிளகாய் தூளாகக் கொட்டி கிளறியதை தின்று வயிற்றோட்டம் கண்டு அவதிப்படுவோர் ஒரு புறம். ஜப்பானியரிடம் அடி உதை பட்டு நலிந்தவர்கள் ஒரு புறம். மலாயாவில் விட்டுவந்த குடும்பத்தாரை எண்ணி ஏங்கி மெலிந்தவர்கள் ஒரு புறம். சாலையில் சென்றுகொண்டிருக்கும் போதே லாரியில் தூக்கிக்கொண்டு போய் ரயிலில் ஏற்றி சயாம் கொண்டு வந்து தள்ளியமையால் குடும்பத்தாரிடம்கூட சொல்லிக்கொள்ளாமல் வந்து தவித்தவர்கள் ஒரு புறம். இப்படியாக எத்தனையோ ரகம். மலாயா தமிழர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த சோக மரண ரயில்வே குழியில் அகப்பட்டு தவித்தனர். தமிழர்களின் ரத்தம் வியர்வையாகவும் கண்ணீராகவும் சீழாகவும் ஓடியது…” என்ற வரிகளில் ஜப்பானியர்கள் ஆட்சியில் தமிழர்கள் அனுபவித்த துயரங்கள் பதிவாகியுள்ளன. ஜப்பானியர்கள் நன்மை செய்யப் போகிறார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நேதாஜியின் அந்த வீரமிக்க ஆளுமையால் ஆகர்ஷிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் லட்சியங்களும் தியாகங்களும் அவரது அகால மரணத்தாலும் போரில் ஜப்பானின் தோல்வியாலும் கனவாய் கலைந்து போனது.
பஞ்சம், பசி, பட்டினி, நோய் மற்றும் போர் என்பவற்றால் அன்றைய காலக்கட்டத்தில் தமிழர்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கை பல கதைகளில் பதிவாகியுள்ளது. போர்காலம் தமிழர்களின் வாழ்க்கையைச் சிதைத்து மீண்டும் அந்தச் சிதைவிலிருந்து கட்டி எழுப்பப்பட வேண்டிய ஒரு சமுதாயமாக இருந்தது.
கீழ்க்கண்ட கவிதை அதைச் சொல்லுகிறது:
“…… தாய்லாந்தின் எல்லையிலே
கப்பிச் சடக்கிட கத்தி முனையினிலே
ஈவிரக்கமில்லாமல் இழுத்துச் செல்லப்பட்டார்கள்;
பாவிகள் கொட்டத்தால் பண்டுலகே ஆடிற்று;
பெற்றோர் உளந்துடிக்க, பிள்ளை மனம் துவண்டு விழ
உற்ற மனையாளும் ஒப்பாரி வைத்தழவே
ஆட்டைப்போல மாட்டைப்போல அடித்துத்துன்புறுத்திக்
காட்டு விலங்காண்டி கசக்கிப் பிழிந்திட்டான்;
அங்கவர்கேற்பட்ட அவலத்தைக் கண்டேதான்
பொங்கி வெடித்தனவாம் பூதலத்தில் எரிமலைகள்!
உற்ற கஞ்சிதான் உணவாக வாய்த்திருக்கும்
தப்புகள் பண்ணிவிட்டால் தலையே இருக்காது;
தொற்று நோய் ஏற்பட்டு துடிக்கவே நேர்ந்திட்டால்
குற்றுயிராகவே குழிக்குள்ளே வைப்பார்கள்“
சயாம் மரண ரயில் பாதையில் வேலை செய்ய வழுக்கட்டாயமாகக் கொண்டுச் செல்லப்பட்ட மாரிமுத்துவின் வாழ்வும் தோட்டத்தில் இருக்கும் அவன் மனைவி , மகனை ஆதரிக்கும் சிங்காரத்தின் வாழ்க்கையும், ஜப்பான்காரனிடம் மாரிமுத்துவுக்கு நிகழும் துன்பங்களும் அதில் இழையோடும் கொடுமைகளையும் சொல்கிறது ‘நினைவுச் சின்னம்’ நாவல். (அ.ரெங்கசாமி)
இதுபோன்று சயாம் மரண ரயில்வேயை மையமாக வைத்து எழுதப்பட்ட மற்றொரு நாவலை எழுதியவர் ஆர்.சண்முகம். (சயாம் மரண இரயில்) ஜப்பானியர் ஆட்சி காலத்தில் தோட்டப்புறத்தில் மக்கள் உணவுக்குக் கஷ்டப்பட்ட பொழுது ‘மரவள்ளிக்கிழங்கு’ எப்படி அவர்கள் உயிரை தக்கவைத்துக்கொள்ள உணவாக உதவியது என்பதையும் அந்தக் கொடுமையான சூழலையும் மையப்படுத்தி சயாமிலும் தோட்டங்களிலும் அக்காலக்கட்டத்தில் நடந்த அவலத்தைச் சொல்லும் நாவல் சா.ஆ. அன்பானந்தன் எழுதிய மரவள்ளிக்கிழங்கு.
தோட்டத்துண்டாடல்
ஐம்பதுகளில் மலேசிய விடுதலைக்குப் பின்னர், ஆங்கிலேய ஏக போக முதலாளிகள் தங்களின் ரப்பர் தோட்டங்களை பெரும் அளவில் சீன வணிகர்களுக்கு விற்று அவர்களது தாயகம் நோக்கி திரும்பினர். வாங்கிய தோட்டங்களை இந்தப் புதிய முதலாளிகள் நான்கு அல்லது ஐந்து ஏக்கர் சிறு தோட்டங்களாக கூறு போட்டு பலமடங்கு அதிக விலைக்கு விற்றனர். சிறுமுதலாளிகளும் யூக வணிகர்களும் கொள்ளை லாபம் அடிக்க சுமார் 324,000 ஏக்கர் தோட்டங்கள் துண்டாடப்பட்டு கைமாறின. இந்தத் தோட்டங்களையே நம்பி வாழ்ந்து வந்த ஏழை இந்தியக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து படுத்திருந்த பாயை மட்டுமே சுருட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு குழந்தை குட்டிகளுடன் குடும்பம் குடும்பமாக பெரு நகரங்களை நோக்கி வந்தனர். பெரு நகரங்களுக்குள் நுழைய திராணியற்று புறநகர் பகுதிகளிலேயே புறம்போக்கு நிலங்களில் குடிசை போட்டு தங்கினர். அன்றைய இந்தியர்களைப் பிரதிநிதித்த அரசியல் தலைவர்களும் தொழிற்சங்கங்களும் தங்களுக்குள் யார் இந்த தோட்டத்தொழிலாளர்களின் காவலர்கள் என்று எந்தக் காவலும் செய்யாமல் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர். ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ என்ற எம்.குமாரனின் நாவல் இந்த தோட்டக் காவலர்களின் அலட்சியத்தை விமர்சித்தபடியே தோட்டத்துண்டாடல் நிகழ்வை நல்லதொரு இலக்கியப் பிரதியாக முன்வைக்கிறது.
பெரும் தோட்ட முதலாளிகளிடம் காலங்காலமாக போராடிப் பெற்ற உரிமைகள், கட்டிக்கொண்ட தமிழ்ப்பள்ளிகள், பெருக்கிக்கொண்ட சில்லரை சௌகரியங்களைக் கூட இழந்து அந்தத் தோட்டப் பாட்டாளிகள் தெருவில் நின்ற துயரத்தைப் பல சிறுகதைகளும் நாவல்களும் பேசின. ‘நாடு விட்டு நாடு’ இடம்பெயர்ந்த வம்சம் நாட்டுக்குள்ளேயே தோட்டம் விட்டு புற நகர் பகுதிகளுக்கு புறம்போக்கு இடங்களுக்கும் இடம்பெயர்ந்து அனாதைகளாய் நின்ற சோகத்தைச் சொன்ன சிறுகதைகள் பல. ‘துண்டாடல் கொடுமை’என்ற தலைப்பிலேயே அமைந்த ஒரு கதை அதனால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் சோகத்தைச் சொல்கிறது.
“ஐயா… நானும் எனது மனைவியும் ஐந்து பிள்ளைகளும் ‘டேலோக்’ தோட்டத்தில் வாழ்ந்து வந்தோம். ஆறு மாசத்துக்கு முன்னால் அந்தத் தோட்டத்தைத் துண்டாக்கிட்டாங்க. நாங்க எல்லோரும் விரட்டப்பட்டோம். நாங்க ரத்த வேர்வை சிந்த நட்ட ரப்பர் மரங்களையும் கண்ணுபோல காப்பாத்துன செம்பனை மரங்களையும் எங்களுக்குச் சொந்தமான ஆடு மாடுகளையும் எல்லாத்தையும் விட்டுட்டு நிர்க்கதியா வெளியேறினோம். எங்க கண்ணீரெல்லாம் ஆறாகப் பெருகி ஓடுச்சி” என்று இந்தக் கதையில் கூறும் குடும்பத் தலைவனின் பேச்சு ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களின் குரலாகும்.
“ஒரு ரப்பர் மரம் வீழ்ந்தால் ஒரு தமிழன் வீழ்ந்தான் எனப் பொருளாகின்றதே. ஒரு தோட்டத்துண்டாடல் ஓராயிரம் தமிழர்களின் வாழ்வை அழிக்கின்ற நிலை உருவானதே” என்று இந்தக் கதையில் கூறப்படும் கருத்துகள் பலவேறு கதைகளிலும் எதிரொலிக்கச் செய்கின்றன. அன்றைய சங்கமணி இதழில் வந்த ‘எதிர்காலமா? எங்கே? ‘ என்ற கதையும் ‘பொன் புதைந்த பூமியில்’ என்ற கதையும் துண்டாடலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அவதியையும் தமிழர்களின் ஒற்றுமையின்மையால் அதை தடுக்க இயலாமல் போன சூழ்நிலைகளையும் காட்டுகிறது. (இரா.தண்டாயுதம்)
தோட்டத்துண்டாடலால் பாதிக்கப்பட்ட தோட்டங்களில் நடைமுறைக்கு வந்த குத்தகை முறையும் அதனால் தோட்டப் பாட்டாளிகள் எதிர்க்கொண்ட பல பிரச்னைகளையும் தமிழ்ச்சிறுகதைகள் உருக்கமாகச் சொல்லியிருக்கின்றன. இவ்வாறு ஒப்பந்த முறையில் கொடுக்கப்பட்ட தோட்டங்களில் அதை நிர்வகிக்கும் கிராணிமார்களும் நிர்வாகிகளும் அடையும் ஆதாயத்தைப் பற்றியும் சுரண்டல்களைப் பற்றியும் பல கதைகள் பேசுகின்றன.
இத்தகைய ஒப்பந்தக் கூலிகளுக்கு வீட்டு வசதிகள் செய்துகொடுக்கத் தேவையில்லை. அதேபோல தண்ணீர் வசதி ஆயாக்கொட்டகை வசதி என்று எதையுமே நிர்வாகம் செய்துகொடுப்பதில்லை. இந்த ஒப்பந்த கூலி திட்டத்தில் வரும் தொழிலாளிகள் மரத்தை வெட்டி பால் எடுத்து ஊற்றிக் கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். இதையுமே கிராணிமார்கள் தண்டல்மார்கள் குறைவாகக் காட்டி கொள்ளை லாபம் அடிப்பார்கள். இதில் தோட்டப் பெண் தொழிலாளிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் ஏராளம். ‘இப்படியும் நடக்குமா’ என்ற கதை இதைப் பற்றி பேசுகிறது. இப்படிப் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து ஓடிவரும் சிறுவனின் கதையே ‘தெருப்புழுதி’ (எம்.ஏ.இளஞ்செல்வன்).
சிவப்பு கார்ட்
தோட்டப்புற தமிழ் சமுதாயத்தை அடித்துப் போட்டு புரட்டி எடுக்க அடுத்து வந்த அலைகளில் ஒன்று அவர்களின் ‘குடியுரிமை’ பிரச்னை. மலாயாவில் பிறந்திருந்தாலுமே குடியுரிமை இல்லாத தமிழர்களாய் தோட்டப்புறங்களில் சுமார் 60,000 பேருக்கு மேல் இருந்தனர். குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தெரியாத அறியாமையில் மூழ்கி கிடந்தவர்கள் இவர்கள். பிறப்புப் பத்திரம் இல்லாதவர்கள் எங்கே விண்ணப்பிப்பது, எப்படிக் குடியுரிமையைப் பெருவது, அரசு இயந்திரத்தை எப்படி அணுகுவது என்பதெல்லாம் தெரியாமலேயே குடியுளரிமையற்றவர்களாக இருந்தனர்.
அவர்களுக்கு உதவவோ வழிக்காட்டவோ கிஞ்சிற்றும் அக்கறையற்றவர்களாக இருந்தனர் அன்றைய தலைவர்களும் அரசியல் கட்சிகளும். இவர்கள் நாடற்ற பிரஜைகள் என முத்திரை குத்தப்பட்டனர். அரசு இந்தக் குடியுரிமையற்றவர்களுக்குச் சிவப்பு அடையாள அட்டை வழங்கி வேலைக்கான ஒப்பந்தச் சான்றிதழ் அவர்கள் பெற வேண்டும் என்றும் அவர்களுக்குத் தற்காலிக வேலைக்கான ஒப்பந்தம்தான் செய்து தரப்படும் என்று பயமுறுத்தியது. இனி இருண்ட எதிர்காலம்தான் தங்களுக்கு என்று அரண்டுபோய் விழிந்திருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கையில் சொற்பத்தொகையும் தமிழகம் திரும்ப இலவசப் பயணச் சீட்டும் அரசு ‘மனம் கனிந்து’ வழங்கி வழியனுப்பி வைத்தது.
அரசின் நன்றிகெட்ட மனோபாவத்தால் மீண்டும் ஓர் இடம்பெயர்வு நிகழ்ந்தது. இதை ‘அந்நியன்கள்’ என்ற கதைகூறுகிறது. எளிதாகக் குடியுரிமை கிடைத்த காலத்தில் ஏன் எடுக்கவில்லை என்பதற்கு இப்படி பதில் சொல்கிறது இந்தக் கதை. “ஆமாங்க… வரிசையா நிப்பாட்டி கைத்தூக்கச் சொல்லித்தான் கொடுத்தாங்கலாம். அப்ப நான் பொடியங்க. எங்கப்பா எடுத்திருக்கலாம்தாங்க… ஆனா என்ன பன்றதுங்க… எங்க அப்பா ஒரு வாய் பொழந்தான்ங்க… எங்க அப்பா மட்டும்தானுங்களா? சஞ்சிக்கூலியா அறிவாளிகளையா கூட்டி வந்திருந்தாங்க… நன்மை தீமைகளை அறிஞ்சி செயல்படுறதுக்கு… குடியுரிமை எடுத்தா நீ ஊருக்கு திரும்பி போக முடியாதோ என்ற பயம் வேற” இதுபோன்ற அந்த மக்களின் மன சிக்கல்களை ‘சட்டத்திற்கு’ என்ற கதையும் அழுத்தமாகச் சொல்கிறது.
கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் ஒரு சிவப்பு அடையாள அட்டை உள்ள ஒரு பெண் தொழிலாளி எதிர்கொள்ளும் போராட்டங்களை ‘இறைகள்’ (சீ.முத்துசாமி) கதை காட்டுகிறது. பெற்ற குடியுரிமையையும் தொலைத்துவிட்டு அதை வாங்கி தந்த அப்பாவி ஒருவனை ‘முனுசாமி தலைகுனிந்து நிற்கிறான்’ என்ற கதையில் சந்திக்கின்றோம். தோட்டப்புற தமிழ்ச் சமுதாயத்தின் அப்பாவித்தனம் கதையாக்கப்பட்டுள்ளது. இரண்டு மூன்று தலைமுறைகளாய் நாட்டுக்கு விசுவாசத்தோடு உழைத்த மக்களுக்கு குடியுரிமை வழங்காமல் இழுத்தடிக்கும் கதை இது. மனித உரிமை மறுக்கப்படும் வாழ்வின் ஒரு இழையை உருவி எடுத்து விவரிக்கிறது “இன்னொரு இருட்டத்தியாயம்” எனும் கோ.புண்ணியவானின் நாவல்.
காரைக்கிழாரின் ஒரு கவிதையும் இந்தச் சிவப்பு அடையாள அட்டையின் வலியைச் சொல்வதாகவே உள்ளது.
கல்லும் முள்ளும் குத்தி குத்து
காலில் வடிந்த ரத்தம் தான்
செல்லும் இடத்தில் செல்லா காசு
சிவப்பு கார்ட்டாய் சிரிக்கிறது
இருப்புப் பாதை போடும் சமயம்
இருமித்துப்பிய ரத்தம்தாம்
செருப்பை போல தேயும் உனக்கு
சிவப்பு கார்ட்டாய் சிரிக்கிறது.
– காரைக்கிழார்.
இன்றைய எழுத்துகளில்
பால்மரக்காட்டில் வேலை செய்வது கடினமாக இருந்தாலும் மரங்களின் மார்பில் உளி கொண்டு லாவகமாக குழந்தைக்குத் தலைசீவி பூச்சூடுவதுபோல இயல்பாக தமிழ்ப் பெண் தொழிலாளிகளால் மரப்பட்டைகளில் சீவி பால் கொணர தெரிந்திருந்தது. மிகவும் ஆழமாகப் போகாமலும் மேலோட்டமாகச் சீவாமலும் மரத்தைக் காயப்படுத்தாமலும் சீவும் பக்குவம் அவர்களுக்கு ஒரு தொழில் சார்ந்த ‘கைக்கு வந்த கலையாக’ இருந்தது.
சற்று உயரமான மரங்களிலும் ஏணி வைத்து ஏறியும் அவர்களால் வேலை செய்ய முடிந்திருந்தது. நிறைமாத கர்ப்பிணிகள் கூட இந்த வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். உதவிக்கு பிள்ளைகளையும் அழைத்துச்சென்று வேலை பார்த்தும் வந்தனர். இதனால் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திக்கொண்ட பிள்ளைகளும் ஏராளம். ரப்பர் மரங்களை அழித்து செம்பனைத் தோட்டங்கள் தோன்றியபோது அங்கே பெண்களால் வேலை செய்ய இயலாத நிலை தோன்றியது. செம்பனை குலை வெட்டுவது ஆண்களால் மட்டுமே செய்யக்கூடிய வேலையானது. ரப்பர் மரங்களைப் பற்றி பல நாவல்கள் பேசினாலும் செம்பனை மரங்களும் அது மலாயா வந்த வரலாரையும் பேசுவது கோ.முனியாண்டியின் ‘இராமனின் நிறங்கள்’.
தோட்டப்புறங்கள் என்பது எளிய பால்மரம் வெட்டும் தொழிலில் இருந்து வலிய ‘கனரக தொழிலான செம்பனைத் தோட்ட வேலையானது.’ இத்தகைய வேலையின் தன்மை மாறியதால் வேலை இழந்தார்கள் தோட்டப்புறத் தமிழர்கள். 80களில் தோட்டப்புற நிலப்பரப்பின் முகங்கள் மேம்பாட்டுத் திட்டங்களால் வீட்டு மனைகளாக மாறியபோதும் மீண்டும் மக்கள் வேலை இழந்து நகர்புறம் நோக்கி நகர்ந்தனர். புறநகரின் புறம்போக்கு வாசிகளாகவும், குறுகிய நெரிசலான மலிவு விலையில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீட்டுக் குடியிருப்புகளிலும் குடியேறினர். இந்த வாழ்வியல் சிக்கலை ஒரு சிறுவனின் பார்வையின் குறியீட்டுச் சிறுகதையாகச் சொல்கிறது ம.நவீனின் ‘இழப்பு’.
நாட்டின் மைய நீரோட்டத்திலிருந்து விலகி ஓரங்கட்டப்பட்ட இனமாக அல்லல் படுகையில் அவர்கள் முதலில் இழப்பது அவர்களின் விழுமியங்களையும் சமூக ஒழுக்கங்களையும்தான். குண்டர் கும்பல், போதைப் பொருள், வன்முறை என்று தமிழ் இளைஞர்கள் புதிய ‘தொழில்முறைக்குத்’ தள்ளப்பட்டனர். அரசின் ஒருதலைப்பட்சமான கல்விக் கொள்கைகள், வசதி குறைந்த தமிழ்ப்பள்ளிகள், உடல் உழைப்புத்தொழிலாளர்களுக்கான உற்பத்தி ஸ்தலமானது. ஆரம்பத் தமிழ்க்கல்வியிலிருந்து ஆறாம் வகுப்புக்கு மேல் மலாய் கல்விக்குப் பயிற்று மொழியில் மாற்றம் காணும்போது போதிய மொழிவளம் இல்லாமை, தாழ்வு மனப்பான்மை, வேற்றுமொழி ஆசிரியர்கள் காட்டும் உதாசீனம் போன்ற சாதகமற்ற சூழல் போன்ற சிக்கல்களால் பல மாணவர்கள் பள்ளியிலிருந்து உதிர்ந்துவிடுகிறார்கள். அபரிதமான பொருளாதார வளர்ச்சி கண்டு வளர்ந்து செழித்து வரும் மலேசியாவின் அடித்தட்டு வர்க்கமாக அவர்கள் ஆக்கப்படுகிறார்கள். அவர்களை ஏழைகளாகவும் கூலிகளாகவுமே வைத்திருக்கும் இந்த பாராபட்சமான அரசியல் சமூக அமைப்பை அரசும் அரசியல்வாதிகளும் எந்த மாற்றமும் செய்யாமல் பாதுகாத்தும் வருகின்றனர். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில் அரசு, அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள், அரசின் கருவூலம் எல்லாமுமே மலாய் இனத்தவர்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிக சாதகமாக செயல்ப்படுகையில் தனியார் துறை ஆதிக்கம் செலுத்தும் சீன சமூகம் அச்சமூகத்தின் எல்லாத் தரப்பு வளர்ச்சிக்கும் பின்புலமாக இருந்து உதவுகையில் எந்த உதவியும் எந்தச் சமூக பொருளாதார பக்கபலமும் இன்றி தவிப்பது இந்த தமிழ்ச் சமூகம் மட்டும்தான். ‘பிள்ளையார் பந்து’ (ரெ.கார்த்திகேசு) என்ற சிறுகதையில் தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மிகவும் தாழ்ந்த தரம் கண்டு ஆத்திரம் கொள்ளும் ஆசிரியர் கண்ணனிடம் ‘இவருடைய வயிற்றுக்குப் போதிய உணவு கொடுக்காத இவருடைய தாய் நாடு, அங்கிருந்து இவர்களை ஆடு மாடுகள் போல் ஒப்பந்தக் கூலியில் இங்கு கொண்டு வந்து தள்ளிய காலனித்துவ முதலாளிமார்கள், வந்த இடத்தில் தங்களை முன்னேற்றிக்கொள்ள விருப்பமே இல்லாமல் அன்றாட வயிற்றுப்பாட்டை மட்டுமே கவனிச்சிக்கிட்டு இருந்த இவர்களது பெற்றோர், இவங்க அத்தனை பேரும் செய்த குற்றங்கள் இன்றைய தலைமுறையில் இந்த மாணவர்கள் மேல தெரியுது….’ என்று தலைமை ஆசிரியர் விளக்க ஆசிரியர் கண்ணன் உண்மையை உணரத் தொடங்குகிறார். ஆனாலும் இந்தக் கதையில் சொல்லப்படாமல் விடுபட்டவை சீனப்பள்ளி ஆசிரியர்கள் போல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படாத தமிழாசிரியர் கூட்டம், எந்தப் பொது நோக்கும் இல்லாத சுயநலமிக்க இந்திய அரசியல்வாதிகளின் பாராமுகம், சமூகம் சார்ந்த இன, மொழி உணர்விலிருந்து அந்நியப்பட்டுப்போன படித்த மேல்தட்டு வர்க்கமும்தான் இந்தத் தமிழ் மாணவர்களின் வீழ்ச்சிக்கான காரணங்களாகும். இந்தச் சமூகம் இன்னமும் வளர்ச்சி காணாமல் தேங்கி விட்டதற்கான காரணங்களும் இவைதான். இதேபோல ‘சிவப்பு விளக்கு’ என்ற சை.பீர்முகம்மதுவின் சிறுகதையும் மூன்று பிச்சைக்காரர்களை குறியீடாகக் காட்டி மூவினங்களின் நிலையை விளக்கும் முக்கியமான சிறுகதை.
தோட்டப்புற தமிழ்ப்பள்ளியில் படித்து தேசிய இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் ஒரு மாணவனின் மனநிலையையும் அவன் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் உணர்வுபூர்வமாகக் காட்டும் கதை ‘கண்ணன் ரீமூப் வகுப்பில் படிக்கிறான் ‘(சி.வடிவேல்). மேம்பாட்டுத் திட்டங்களால் தோட்டங்கள் தொழிற்சாலைகளாகவும் வீட்டு வசதி வாரியங்களாகவும் மாற்றம் காண, இடம்பெயர்ந்த ஓர் அபலையின் வாழ்வை அதன் சிதவை கூறும் கதை ‘வீடும் விழுதுகளும்’ (மா.சண்முகசிவா). விதவையான இளம் தாய் செல்லம்மாள் தன் இரு குழந்தைகளுடனும் பெருநகரின் புறநகர் பகுதிக்குத் தோட்டத்தை விட்டு தன் பழைய தோழி கோவிந்தமாளைத் தேடி வந்து தஞ்சம் அடைகிறாள். பாலியல் தொழிலாளியான அவளது தோழியைப்போல தானும் ஆகிவிடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் அவளிடமிருந்து வெளியேறுகிறாள். தன்னிடம் கடைசியாக மிச்சம் இருந்த பணத்தில் புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடொன்றை வாங்க மறுநாள் நகராண்மை கழக ஊழியர்களால் அது இடிக்கப்படுகையில், இடுப்பில் ஒரு குழந்தையும், தாயின் கைகளை பற்றியவாறு அவளது முகத்தைப் பார்க்கும் மற்றொரு குழந்தையுமாக நிர்க்கதியாக நிற்கையில், எல்லாம் இழந்து தனிமரமாக நின்று தவிக்கையில் மீண்டும் கோவிந்தமாளிடம் போவதா என்று எண்ணுகிறாள். குழந்தைகள் வளர்ந்து அந்த விழுதுகள் மண்ணைத்தொடும் வரையில் தான் இருக்க ஒரு வீடு வேண்டுமே என்று எண்ணி கலங்கியவாறு கோவிந்தமாள் வீடு நோக்கி நடக்கிறாள் அவள்.
தமிழகத்திலிருந்து இன்றும் உணவகங்களிலும் தொழிற்சாலைகளிலும் மற்றும் நகராண்மை கழகங்களில் ஒப்பந்த ஊழியர்களாகவும் வேலை செய்ய இளைஞர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். பலர் பல வகையிலும் தமிழக மற்றும் மலேசிய தரகர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். குறைந்தபட்ச ஊதியத்துடன் பனிரெண்டு மணிநேர உழைப்பை இந்த இளைஞர்களிடமிருந்து உறிஞ்சி எடுக்கும் இன்றைய மலேசிய இந்திய முதலாளிகள் ‘சுரண்டலில்’ சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்து வருகின்றார்கள். இவர்களின் கடப்பிதழ்களைப் பிடுங்கிவைத்துக்கொண்டு சம்பளமும் தராமல் கொடுமை படுத்தும் ஒரு முதலாளிக்கு எதிராக எழும் இளைஞனின் துயரத்தைச் சொல்கிறது, ‘திரை கடலோடி’ (மா.சண்முகசிவா) எனும் சிறுகதை.
இன்றைய இளம் எழுத்தாளர்களான கே.பாலமுருகன், மஹாத்மன், ம.நவீன், சு.யுவராஜன் போன்றோரின் சிறுகதைகளுமே இந்த தோட்டப்புற மக்களின் நெருக்கடியை பேசுகின்றன.
கே.பாலமுருகன்
இருள் எனும் படிமம் மூலமாகச் சொல்லிச் செல்கிறது இவரது நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் எனும் நாவல். அன்பு, உறவுகள் என்பதெல்லாம் ஒரு பாவனை. அவை எப்போது வேண்டுமானாலும் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை. சூழல் எந்த நெருக்கத்தையும் அர்த்தமற்றதாக்கிவிடும் என நிறுவுகிறார். நவீன மனிதனின் சிதிலமடைந்த மனமே இவர் கதைகளின் பொது அம்சமாக உள்ளது.
மஹாத்மன்
‘மஹாத்மன் கதைகள்’ என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட அவரது கதைகள் பெரு நகரங்களில் அலையும் மனிதனின் வாழ்வைச் சொல்கின்றன. ஒரு பரதேசியாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் மஹாத்மனின் வாழ்வுதான் இந்தக் கதைகள். நகரமும் நகர் சார்ந்த மனிதர்களும் அவரை அலைக்கழிக்கும் இந்த வாழ்வும் பற்றி பேசும் அவரது கதைகளின் பின்புலமாக இருப்பவை குற்றங்கள், குற்றங்களுக்கான தண்டனைகள், சிறைச்சாலை என நகரின் இருண்ட பகுதிகள். இக்கதைகள் மிகத்தரமானவை என விமர்சித்ததோடு அவை குறித்த நீண்ட விமர்சனத்தையும் தனது சிற்றேடு இதழிலும் எழுதியிருக்கின்றார் பேராசிரியர் தமிழவன். மஹாத்மன் சிறுகதைகள் குறித்த நீண்ட விமர்சனத்தை தனது சிற்றேடு இதழிலும் அவர் எழுதத் தவறவில்லை.
ம.நவீன்
நகரங்களில் இருக்கும் உதிரி மனிதர்களின் வாழ்வை அங்கதமாகச் சொல்லும் நவீனின் எழுத்துகளில் ஊடுபாவாய் இருப்பது நுட்பமான நடப்பு அரசியலும் அதில் இயங்கும் மனித மனங்களும்தான்.
சு.யுவராஜன்
தோட்டப்புறத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டக் கதைகளின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இவரது எழுத்துகளைச் சொல்லலாம். தோட்டப்புற சூழல் இவரது சில கதைகளில் பின்புலமாக இருந்தாலும் அதில் இயங்கும் மனிதர்களின் மனங்களை நுட்பமாகப் பேசக்கூடிய எழுத்தாக யுவராஜனின் கதைகள் இருக்கின்றன. அந்த வாழ்க்கையை வார்த்தைக்குள் வசப்படுத்த செய்யும் முயற்சி இவரது எழுத்துகள்.
மலேசிய இலக்கியம் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டிய விசயமாக கருதுவது இவர்களது எழுத்துகள் வணிக ரீதியாக இருந்தது மிகக் குறைவு. வாழ்வைப்பற்றி பேசும் நோக்கமே இதில் பிரதானமாக இருந்து வருகிறது. பயனீட்டாளரின் நுகர்வு பொருளாக இலக்கியம் ஆகிவிடாமல் பார்த்துக்கொண்டதுதான் இவர்களை யார் என்பதை உங்களுக்குக் காட்டும். ஆனால், இந்த இலக்கியங்களின் அழகியல், கலை வடிவங்கள் குறித்த கேள்விகள் நமக்கு எழலாம். இருந்தாலும் வாழ்வைப் பேசுவதில் அவை உண்மையாக இருக்கின்றன என்பதுதான் அதன் சிறப்பு. ஆறாம் ஆண்டு வரை மட்டுமேதான் தமிழ்க்கல்விக்கான வசதிகள் இருக்கின்ற இந்தச் சூழலில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் முன்னெடுத்துச் சென்ற இலக்கிய முயற்சிகள் தமிழுக்கும் தமிழ்ச் சார்ந்த வாழ்வுக்கும் அதன் பங்கை நேர்மையாகவும் நேர்த்தியாகவும் செய்து வருகின்றன.
துன்பமும் துயரமுமே தமிழர்களின் வாழ்வாக இருந்து வந்திருக்கின்றது என்ற தொனியில் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரையில் அவர்களது சில வெற்றிகளையாவது சொல்லத்தான் வேண்டுமென எண்ணுகிறேன். தமிழர்கள் குடியேறிய எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இன்றுவரை 523 தமிழ் ஆரம்பப் பள்ளிகளை கட்டிக் காப்பாற்றி வருகின்றோம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதில் பயின்று வருகிறார்கள். கல்வி அமைப்பில் தமிழைத் தக்க வைத்துக்கொள்ள நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தி அந்தப் பள்ளிகளின் இருத்தலுக்கான அவசியத்தையும் அதற்கான அரசு மானியத்தையும் தொடர்ந்து பெற்று வருகின்றோம். அதன் தரத்தை உயர்த்துவதற்கும் முயற்சிகள் செய்துவருகிறோம். அரசு சாரா தமிழ் இயக்கங்கள் பல மொழிக்காகவும் தமிழ் இனத்துக்காகவும் உழைத்து வருகின்றன.
மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதிலும், இன்று வரை இங்குள்ள 14,000 இந்து ஆலயங்களில் (அதில் பதிவு பெற்றவை 2339) எங்கள் கடவுள்களைப் பத்திரமாகக் காப்பாற்றி வருகிறோம். எங்கள் சமூக, மத சடங்குகளை தங்கு தடைகள் இன்றிக் கொண்டாடி வருகிறோம். அமைச்சரவையில் இரண்டு முழு அமைச்சர்கள் மூன்று துணை அமைச்சர்களாகவும் தமிழர்கள் இருந்து வருகிறார்கள். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 7 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னனி நடிக நடிகையர்கள் முதல் குருவி ஜோசியர்கள், எண் கணித மேதைகள், சித்த ஆயுர்வேத வைத்திய விற்பன்னர்கள் என மலேசியாவுக்கு அலையலையாக வருபவர்களை ஆதரித்து அரவணைத்து வளமாக்கி வழியனுப்பி வைக்கின்றோம். சில இந்திய நடிகர்களுக்கு அரசாங்க விருதுகள்கூட வழங்கி கௌரவித்திருக்கின்றோம். கோடம்பாக்கத்துத் தமிழ்த் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், வெளியீட்டு விழாக்களை கோலாலம்பூரிலேயே நிகழ்த்தி தங்களின் திரைபடத்திற்கான முதலீட்டுச் செலவை மலேசிய விற்பனையின் மூலம் மட்டுமே ஈடுகட்டி விடுகிறார்களாம்.
இன்னமும் எம்.ஜி.ஆர் மறைந்த நாளையும் சிவாஜிகணேசனின் பிறந்த நாளையும் தொடர்ந்து நாங்கள்தான் கொண்டாடி வருகிறோம். ஏழ்மையில் உழன்ற சென்னை நடிகர் சங்க கட்டிடம் கடனில் மூழ்கியபோது எங்கள் அமைச்சரின் தலைமையில் கலைநிகழ்ச்சி நடத்தி காசு வசூல் செய்து அதனை மீட்டெடுத்தப் பெருமை எங்களுக்கும் உண்டு. தமிழீழப் போரில் தமிழக அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை கண்கூடாகப் பார்த்த பின்னரும்கூட தாய் தமிழகத்துடனான தொப்புள் கொடி உறவில், தமிழகத்தைப் பாசத்துடனும் பரவசத்துடனும் பார்த்துக்கொண்டிருக்கும் அப்பாவிகளாக இன்னமும் இருந்து வருகிறோம். புலம் பெயர்ந்தாலும் மனம் பெயராமல் எங்கள் ஜாதி சங்கங்களை எந்த வெட்க உணர்வுமின்றி கட்டிக்காத்து வருகிறோம்.
ஈத்துவக்கும் இன்பம் கண்டவர்களாக, எடுக்கும் நிலையில் தமிழகத் தமிழர்களும் கொடுக்கும் நிலையில் மலேசியத் தமிழர்களாகிய நாங்களும் முன்னேறிக்கொண்டுதான் வருகிறோம். அந்தக் காலத்து பழைய தமிழ் சினிமா போல மங்களகரமாக கட்டுரையை முடித்துவிடுகிறேன்.
துணை நின்ற நூல்கள்;
மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் தோட்டப்புறச் சமுதாயம் – டாக்டர் இரா.தண்டாயுதம்
The Malaysian Indian Dilemma – Janakey Raman Manickam
மலேசியத் தமிழ் கவிதை களஞ்சியம் – முனைவர் முரசு நெடுமாறம்
மலேசிய நாட்டுப்புற பாடல்கள் – டாக்டர் இரா.தண்டாயுதம்
விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – ம.நவீன்