கதிரவன் காதலி

கதிரவன் காதலி..!
=================
செங்கதிரோன்தன் காதலியைக் கனிவுடன் தேடுவதைத்..
..........திங்களவள் மறைந்திருந்தவன் தவிப்பைப் பார்ப்பாள்.!
பொங்கும் ஆவலால் அவன் முகமுழுதும் சிவந்திருக்கும்..
..........தங்காது ஓரிடத்தில் உலகுமுழுதும் ஒருநாளில் சுற்றுவான்.!
மங்கையவளைக் கண்டதும் மயக்கத் திலவன் மறைவான்..
..........மணமேடை காணமுடியா நிலையில் இருவரும் ஒன்றாக..
சங்கமம் ஆகிவிட்டால் அகிலமனைத்தும் இருள் கவ்வும்..
..........சோகத்தினால் அவள் பெருமையை அவனே பாடுகிறான்.!
எங்கு நோக்கினும் எனக்குள் அவளிருப்பதை அறிவேன்..
..........என்னுதவி இல்லையெனில் இவ்வுலகு அவளுதவி பெறும்.!
பங்கு கேட்காத ஒர்உறவென்றால் அவள் ஒருவள்தான்..
..........பற்றுள்ளதாயும் மகவிற்கு அமுதூட்ட ஓடோடி வருவாள்.!
இங்கிவளைக் கவிதையின் கருவாய் கவிஞரும் கொள்வார்..
..........இவளை நினையின் அருந்தமிழ் அருவியென ஓடிவரும்.!
குங்குமப் பொட்டுக்காரி குவலயத்தின் குறை தீர்ப்பாள்..
..........கிரகங்களில் இவள் அழகுக்கு ஒப்பில்லை என்பார்கள்.!
சிங்கங்கள் இரவிலிரைதேட சிறிதே வெளிச்சம் தருவாள்..
..........சிற்றிடைப் பாவையின் வளைந்த புருவம் ஒத்திருப்பாள்.!
செங்கொன்றை மலரைப் போல சிலநாள் சிரித்திருப்பாள்..
..........சட்டென மேகத்தில் மறைந்து பட்டென வெளிப்படுவாள்.!
பொங்கலிட்டு வழிபட எனக்குமுன் அவள் தோன்றுவாள்..
..........சங்கரன் அவளைத் தலைமேல் வைத்தே சிறப்பித்தான்.!
மங்களம் இனிமை அன்பு அமுதமெனும் சொற்களுக்கு..
..........மங்காத நன்மதிப்பை மங்கையருக்குகந் தளிப்பாளவள்.!
==========================================================
வல்லமைக்குச் சமர்ப்பிவித்த படக்கவிதை