எனக்கு மட்டுமான நீ

கருக்கல்ல எழுந்தாத்தான்
கலப்பையைச் சுமந்தாதான்
காவயிறுக் கஞ்சியைக்
காலத்துக்கும் குடிக்க முடியுமின்னு...

பொறுக்காத வெயிலும்
பொத்துக்கிட்டு ஊத்தற மழையிலும்
போராடி வாழ்ந்த மச்சான்
பொறந்த ரெண்டும் பொட்டைன்னு
ஆத்தா வீட்டுக்கு தொறத்தாம...

மாருல சொமந்த மச்சான்
முத்து முத்தா வேர்வைதான்
சொத்துன்னு சொல்லுவ
முந்தானையில நாந்துடைக்க
சேர்த்தணைச்சுக் கொள்ளுவ...

போராட்டம் தான் வாழ்க்கையின்னு
தத்துவமும் பேசுவ...
வாயி நிறைய சிரிக்க வச்சு
வாஞ்சையும் காட்டுவ...

மேலுக்கு முடியலைன்னு
மூலையில கிடந்தாலும்
உசிறு ஓடிக்கிட்டு இருக்குன்னு
உறுதியா நின்னேனே!
பொசுக்குன்னு மூச்சை நிறுத்தி
போக்குக் காட்டி போயிட்டியே...

இருக்கும் போது
எனக்கு மட்டுமா இருந்துட்டு
போகும் போது
யார் யாரோ உன்னைத் தொட
எட்டி நின்னு பார்க்கலாச்சே!
ஏங்கி தவிச்சு அழலாச்சே...

வாய்க்கரிசி போடக்கூட
வஞ்சிமார் விடலையே
கொள்ளி போடறதுக்கும்
கொழுந்தம்பய விடலையே?

வயலுக்கு நீ போனா
கஞ்சித் தண்ணி நாந்தானே!
வீட்டுக்கு நீ வந்தா
விடியலுக்கும் நாந்தானே!
சகலமும் நீதான்னு
சருகாட்டம் கிடந்தேனே...
பாடையில் போன போது
பாவி உயிர் சேக்கலையே?

பொய்யாய் அன்பை வச்சேனோ?
பொசுக்குன்னு போகாத உயிர்
ஆமான்னு சொல்லுதய்யா...
உன்னில்ல பாதின்னு
நினைச்சேனே!
மீதி ஆவி போக வழி
இல்லைன்னு சொல்லுதய்யா...

உன் வாசம் படாத காத்தும்
இதயத்தை நிரப்புதய்யா!
உன் சிரிப்பு இல்லாத விடியலும்
பொழுதை ஓட்டுதய்யா?

எழுதியவர் : kalavisu (22-Dec-17, 12:15 pm)
சேர்த்தது : kalavisu
Tanglish : enakku matuma nee
பார்வை : 526

மேலே