பிரம்மாவும் நம்பி என்ற திரு நம்பியும்
![](https://eluthu.com/images/loading.gif)
மத்தியப் பேருந்து நிலையத்திற்கு நேர் எதிரில் இருந்தது அந்த உயர்ரக சைவ அசைவ உணவகம். நடுத்தர மேல்தட்டு வாடிக்கையாளர்களுக்கானது. வெளி ஊரிலிருந்து சென்னைக்கு வரும் போதெல்லாம் அங்கு ஒரு காஃபி குடிப்பது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். பெங்களூரில் இருந்து பகல் 11.30 மணிக்குக் கிளம்பி சென்னைக்கு மாலை 4 மணிக்கே வந்துவிட்டேன்.
உணவு விடுதியில் ஒவ்வொரு இடமாக ஸ்கேன் செய்து கடைசியாக கைகழுவும் கோப்பைக்கு ஐந்து மேஜைகள் தள்ளி இருக்கும் தனி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். இரவு சரியான தூக்கம் இல்லாததால் கண்கள் மிகவும் எரிந்தது. கைகளைக் கழுவி முகத்தில் அந்த ஈரத்தை பரவலாக ஒற்றிகொண்டேன். மிகவும் இதமாக இருந்தது. வீட்டிற்குப் போகும் வரை இது போதும். இன்னும் ஒரு மணி நேரத்திற்கு தாக்குப் பிடிக்கலாம்.
என் இருக்கைக்கு நான்கு மேஜைகள் தள்ளி ஒரு இளைஞன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன் அவன் புலால் உண்ணும் நளினமான நேர்த்தி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு வயலின் இசை மேதையைப் போல சிறிதும் பதட்டப்படாமல் கத்தியை துண்டங்களின் மேல் மெதுவாக இசைக்க மெழுகுபோல இரண்டாகப் பிளவுபட்ட துண்டங்கள் நிற்கத் தடுமாறி ஒன்றின் மேல் ஒன்று நெருக்கமான காதலர்கலைப் போலச் சரிந்தது. அதில் ஒரே ஒரு துண்டத்தை மட்டும் வெகு லாவகமாக முட்கரண்டியால் அதிக ஆழத்திற்குக் குத்தி எடுக்காமல் முதன் முதலாக நீச்சல் அடிக்கக் கற்றுக்கொள்ளும் சிறுவனின் ஆர்வம் கலந்த தயக்கத்துடன் மயோனிஸில் தோய்த்து வாயில் போட்டுக்கொண்டான். இந்த ஒரு நிகழ்வு மட்டும்தான் தற்போதைய ஓரே கடமை என்பதைப் போல இருந்தது அவனின் ஒவ்வொரு செய்கையும். இருக்கையில் சாய்ந்து கொண்டு வாயில் போட்ட துண்டங்களை சுவைத்தபடியே சுற்றும் முற்றும் பார்த்தான் . இவ்வளவு ரசிப்பாக ஒருவனால் சாப்பிட முடியுமா என்று எனக்கு நானே கேட்டுகொண்டேன்.
“அதோ அந்த மேஜையில் கோடு போட்ட சட்டை போட்டிருக்காரே, அவர் என்ன சாப்பிடுகிறார்?” என்று என் அருகில் வந்த சப்ளை சிறுவனிடம் கேட்க “பார்பிகியூட் லேம்ப் தை பீஸ் சார்” என்றான். “ உங்களுக்கு சார்?” என்று இடையில் நிறுத்தினான் அந்தச் சிறுவன். “ஓரு ஸ்டிராங்க் காஃபி தம்பி” என்று தலையை உயர்த்தி அவனைப் பார்த்துக் கூறினேன். அதிக சதைப் பற்றில்லாத உடம்பு வாகு. அவன் மீசையின் அடர்த்தி அவன் முகத்துடன் எந்த விதத்திலும் ஒத்துப் போகவே இல்லை. வெகு சமீபத்தில்தான் அவன் விடலைப் பருவத்தை தாண்டியருக்க வேண்டும். ஊரை விட்டு வேலை தேடி பட்டிணத்திற்கு வந்த சோகம் அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவன் சாப்பிட்டு முடித்திருந்தான். தளர்வாக 140 டிகிரி கோணத்தில் இருக்கையில் சாய்ந்து கொண்டு கைகள் இரண்டையும் தொட்டில் போல இறுகக் கோர்த்து பின் மண்டையில் அணைப்பாக வைத்து அவன் முன் நின்றிருந்த சிறுவனிடம் “பாட் காஃபி” என்று அவனைப் பார்த்து சிரித்தான். சிறுவனும் பதிலிற்கு அளவாகச் சிரித்தான்.
சிறிது நேரத்தில் மேஜையின் மேல் இருக்கும் காற்றினைக் கலைக்காமல் மெதுவாக பாட் காஃபி டிரேயை மேஜையின் மேல் வைத்தான் அந்தச் சிறுவன். கலந்து கொடுக்கக் காத்திருந்த சிறுவனிடம் கண்களைச் சுறுக்கி தானே கலந்து கொள்வதாக செய்கையால் உணர்த்தினான். காஃபி பாட்டின் கைப்பிடியை வலது கையால் இடது பக்கம் திருப்பினான். இடது கை பழக்கமுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இடது கையால் டீ பாட்டின் கைப்பிடியைப் பிடித்து வலது கையால் மூடியை அழுத்தமாகப் பிடித்து, கோப்பையில் காஃபியை சரித்தான். பாதி நிறைந்தவுடனேயே நிறுத்திவிட்டு கோப்பையின் கைப்பிடியை வலது பக்கம் திரும்பினான். ஒரு சிலர் இதுபோல இரண்டு கைகளையும் உபயோகிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதற்கு ஈடான ஆங்கில வார்த்தையை காந்தியின் சுய சரிதையில் ஒரு சமயம் படித்திருக்கிறேன். எவ்வளவு முயன்றும் அந்த ஆங்கிலச் சொல்லை ஞாபகத்திற்குக் கொண்டு வர என் மூளைச் செல்கள் ஒத்துழைக்கவில்லை.
அவனிடம் சிறிது நேரம் பேச்சுக்கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அவன் மேஜையை நெருங்கி அவன் எதிரில் உள்ள காலி இருக்கையை இழுத்தேன். அவன் அனைத்தையும் மறந்து பாட் காஃபியில் முழுவதுமாக மூழ்கியிருந்தான். “ஹாய்” என்று முகம் மலர அவனைப் பார்த்துச் சிரிக்க “ தயவு செய்து உட்காருங்கள்” என்றான். “என் பெயர் ஆராமுதன். என்னை அமுதன் என்றே நீங்கள் அழைக்கலாம். சென்னையில்தான் வேலை பார்க்கிறேன்” என்று அவன் பதிலிற்காகக் காத்திருந்தேன்.
“என்னைப் பற்றி நான் எதுவும் கூற வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்” என்று என்னைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தான். “என்னைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அமுதன். ஆனால் அனைத்தும் தவறு என்பதை நீங்கள் துளியும் உணராதது குறித்து உங்கள் மேல் எனக்கு அதிக வருத்தம் உண்டு” என்று என்னை குழப்பினான். மீண்டும் அவனே தொடர்ந்தான். “என்னை ஒரு அசைவப் பிரியராக மாற்றியது நீங்கள்தானே. எனக்கெதிராக உங்களின் உணவுப் பழக்கத்தை என்னுள்ளில் திணித்ததும் நீங்கள்தானே?’ எனக்குத் தலையே சுற்றியது.
சிறிது தடுமாற்றத்திற்குப் பிறகு “நான்” என்று அவனிடம் ஏதோ சொல்வதற்குள் அவனே பேச்சைத் தொடர்ந்தான். “நீங்கள் எனக்களித்த மாமிசத் துண்டங்களை நான் குறை கூறமாட்டேன். ஆனால் நீங்கள் என்னை ரசிப்பாக உண்ண வைத்துப் பார்த்ததுதான் எனக்கு அறவே பிடிக்கவில்லை. என் உணவுப் பழக்கம் எனக்கான சுதந்திரம். அதில் யாரும் தலையிடுவதை என்னால் துளியும் அனுமதிக்க முடியாது. உதாரணத்திற்கு உங்களின் அசைவ உணவுப் பழக்கத்தை சைவ உணவுப்பழக்கத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்று நான் உங்களை கட்டாயப்படுத்தினால் உங்களுக்கு வருமே அதே கோபம்தான் எனக்கும் உங்களின் மேல் இப்போது இருக்கிறது. என் மூலம் உங்களின் அதீத புலால் ஆசையை நிறைவேற்றிக் கொண்டீர்கள் என்று மட்டும் நினைக்கிறேன். இதற்கான பில் தொகையையும் நான் நிச்சயம் கொடுக்கப் போவதில்லை அமுதன். நீங்கள்தான் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக ஒன்று. இனிமேலாவது உங்களின் உணவுப் பழக்கத்தை அடுத்தவர்களிடம் திணிக்காதீர்கள். உங்களுக்குப் பிடித்தது எனக்கும் பிடித்தாகவேண்டும் என்று எந்த நியதியுமில்லை. என் உணவுப் பழக்கத்தை தீர்மானிப்பது நானாகத்தான் இருக்க வேண்டும். நானாக மட்டுமே இருக்க வேண்டும்.” என்று மிகவும் அழுத்தமான தன்னினலை விளக்கம் கொடுத்தான் அந்த இளைஞன்
நான் தான் தவறு செய்துவிட்டேன் என்று முதன் முதலாக உணரும் தருணமாக இருந்தது அப்போது. என் அருகில் வந்த சிறுவனிடம் “அவர் என்னுடைய நண்பர். அவருக்கான பில்லையும் நானே கொடுத்து விடுகிறேன்” என்று என் கடன் அட்டையை நீட்டினேன். எதுவும் புரியாமல் தலையைச் சொறிந்தபடியே நின்று கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். இப்போது வந்த சிறுவனின் முகச் சாயல் நான் முன்பு வடிவமைத்த சிறுவனின் முகச்சாயலில் இல்லை என்பதை மட்டும் என்னால் இப்போது உணர முடிந்தது.
எனக்கு முன்பே வெளியேறிய அந்த இளைஞன் என் மேஜையை நோக்கி மீண்டும் வந்தான். “எனக்கு மிகவும் பிடித்தது பிளாக் டீ வித் லைம்ன்தான் அமுதன். உங்களால்தான் பாட் காஃபியை திணரத் திணரக் குடிக்க வேண்டியதாயிற்று. இதற்கு நான் உங்களை ஓருபோதும் மன்னிக்கவே மாட்டேன்” என்று என் காதின் அருகில் வந்து கிசுகிசுத்து உணவு விடுதியிலிருந்து வெளியேறினான் நான் படைத்த நம்பி என்ற திருநம்பி.