தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி2

" கவலைப்பட்டு இனி ஆகப்போறது எதுவுமில்லை. ",என்ற எண்ணம் பிறந்திட, அசோக்கின் குடும்பம் அன்றாட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, அவ்வப்போது அண்ணன் நினைவு தங்கைக்கும், மகனின் நினைவு பெற்றோருக்கும் வந்துபோகும்.

சித்ரம் போல் இளமையான அழகிய முகம் கொண்ட சித்ராவின் புன்னகைத்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
ஆனால், அவளோ இப்போது புன்னகைப்பதே இல்லை.

பி.எஸ்.சி படித்துவரும் சித்ராவிற்கு தோழிகள் அதிகம் தான்.
ஆனால், சிரிக்க மறந்துவிட்டாள் சித்ரா.

சித்ரா தினமும் பக்கத்து நகரத்திலுள்ள கல்லூரிக்குச் சென்று படித்துவிட்டு பேரூந்தில் வீடு திரும்புவது வழக்கம்.

இப்படி நாட்கள் நகர்கையில், அந்த கிராமத்தில் நட்சத்திர மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனையில்லாத அந்த கிராமத்திற்கு ஒரு மருத்துவமனையாக மக்களுக்கு உதவியாகக் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அங்கு மருத்துவராக பணியாற்றிட வந்தவர் தான் ஜோசப்.
பிறந்த சில நாட்களிலே பெற்றோர் இறந்துவிட்டதால், ஒரு கிறிஸ்துவ இல்லத்தில் தான் வளர்ந்தார்.

சிறுவயது முதலே சுட்டியான அவர், சக பிள்ளைகளோடு சகோதரனாகப் பழகி கலகலப்பாக வளர்ந்தார்.
அதோடு அல்லாமல் படிப்பிலும் முதலாவதாகத் தேறி, மருத்துவரானார்.

ஜோசப் தன் பெற்றோர் அன்பு பற்றி ஏங்காதற்குக் காரணம் அந்த கிறிஸ்துவ இல்லத்தின் பொறுப்பாளியாக இருந்த மேரியம்மா.

மருத்துவராகத் தேர்ச்சி பெற்றதும் அவர் நகரத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் தான் வேலை பார்த்தார்.
அங்கு இருந்த சூழல் பிடிக்காததால் நின்றுவிட்டார்.
அதனால் மேரியம்மா கிராமத்தில் ஒரு மருத்துவமனை கட்டி அங்கே ஜோசப்பை மருத்துவராக பணி அமர்த்தினார்.


ஜோசப்பும் கிராம மக்களிடம் குறைந்த கட்டணம் பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்துவந்தார்.
நோயாளிகளிடம் அன்பும், அக்கறையும் காட்டினார்.

சித்ராவும் அடிக்கடி ஜோசப்பைப் பற்றி கேள்வியுற்று இருக்கிறாள்.

ஒருநாள் கஸ்தூரி அம்மாவுக்கு சிறிது உடல்நலம் சரியில்லாமல் போக, அவரை நட்சத்திர மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வந்தார்.

டாக்டரைக் காண சித்ரா நுழைந்ததுமே டாக்டரின் பார்வை வாசல் பக்கம் திரும்பியது.

சித்ராவின் முகத்தைப் பார்த்து, " புன்னகைக்காமலேயே இந்த முகம் இவ்வளவு அழகாக இருக்கிறதே! புன்னகைத்தால் எப்படி இருக்கும்?! ",என்ற நினைத்து, அந்த நினைவில் சிலைபோல் எழுந்து நின்றார்.

சித்ரா பின்னாடி வந்தாங்க கஸ்தூரி அம்மா.
டாக்டரைப் பார்த்த சித்ரா, " வாம்மா! ", என்று தன் அம்மாவை அழைத்துக் கொண்டு அந்த அறைவிட்டு வெளியெற திரும்ப, டாக்டர் அருகில் இருந்த கம்போண்டர் கணேஷ், " என்னம்மா! வந்துட்டு வந்த விடயம் சொல்லாமலே போறீங்க. ", என்றார்.

" உங்கள் டாக்டர் பார்வையே சரியில்லை. இவரு கிட்ட எப்படி நல்ல மருத்துவம் கிடைக்கும்? ",என்று கோபமாகப் பொறிந்து தள்ளினாள் சித்ரா.

டாக்டரைத் திரும்பிப் பார்த்த கணேஷ், " அண்ணன்! அண்ணன்! ",என்று உலுக்கிட, " என்னடா? ",என்று சலிப்போடு திரும்பினார் டாக்டர்.

" உங்களைப் பார்க்க பேசன்ட் வந்திருக்காங்க. ",என்றார் கணேஷ்.

" ஓ! பேசன்டா? சாரிங்கம்மா. தியானத்தில் இருந்ததால் நீங்க வந்ததைக் கவனிக்கல ",என்று ஜோசப் கூறிட, " நீங்க கிறிஸ்டின். அப்படியிருக்க தியானம் என்று இந்து மாதிரி பேசுறீங்க. ",என்றாள் சித்ரா.

" அறிவுக் கொழுந்து தான். ஒருவர் இஷ்டப்பட்ட பெயரோ, வடிவமோ மனதில் நினைந்து மனம் ஒருமைப்பட்டால் அது தியானம். இதற்கும் மதத்திற்கு என்ன சமந்தம்? ",என்றார் ஜோசப்.

சித்ரா அமைதியாக இருந்தாள்.

" அவ எப்பவும் இப்படிதான் தம்பி. எதாவது பேசிட்டே இருப்பா. நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க ",என்று அவர்களுடைய வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கஸ்தூரி அம்மா.

" உடம்புக்கு என்னம்மா? ",என்று ஜோசப் கேட்க, " கொஞ்சம் வடியா, வடியா ஆயாசமா வருதுப்பா.", என்றார் கஸ்தூரி அம்மா.

பரிசோதித்த ஜோசப், " உங்க உடலில் இரத்தம் போதிய அளவு இல்லாமல் இப்படி வருது. நல்ல சாப்பாடு, பால், பழங்கள், பழச்சாறு வகைகள் அதிக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மனச்சோர்வு உடல் சோர்வாகிவிடும். அதனால், கவலைப்படுவதை விட்டுவிடுங்கள்.. ",என்றார்.

" அப்போ இதற்கு ஊசி மருந்தெல்லாம் கிடையாதா தம்பி? "

" இல்லம்மா. இதற்கு உணவு தான் மருந்து. நீங்க நான் சொன்னது மாதிரி சாப்பிடுங்க. உங்களுக்கு சரியாடும். ". என்றார் ஜோசப்.

கஸ்தூரி அம்மா எழுந்து கிளம்ப, சித்ரா, " சார் கடைசியா ஒரே ஒரு டவுட். கேட்கலாமா? ", என்றாள்.

" கேளுங்க. "

" இதற்கு பீஸ் எவ்வளவு? "

" அதெல்லாம் வேண்டாங்க. "

" அப்போ இன்னொரு டவுட். நீங்க உண்மையிலேயே எம்.பி.பி.எஸ் படிச்ச டாக்டரா? "

" ஏன் கேட்கிறீங்க? "

" சுத்தப் பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே. அதான் சொன்னேன். ",
என்றாள் குறும்பாக.

"ஏம்மா சித்ரா! போதும் உன் குறும்பு. டாக்டர் பாவம். ", என்று கஸ்தூரி அம்மா கூறிட, புன்னகைத்தவாறு சென்றாள் சித்ரா.

" அண்ணே! அண்ணே! ",என்று கணேஷ் அழைத்திட டாக்டர் மனம் அங்கு இல்லை.
சித்ராவோடே பயணித்துக் கொண்டிருந்தது.

ஜோசப் சொன்னதைப் போல் சாப்பிட்டு வர கஸ்தூரி அம்மாவின் உடல் நிலை சரியானது.

வருந்தம் தொய்ந்த குடும்பத்தில் சந்தோஷம் மீண்டும் சிறிது பூக்க ஆரம்பிக்க, அங்கு அசோக் கலீலாக வாழ்கிறான் மகிழ்ச்சியாக..

கலீல் அதீஃபாவின் பிரியமானவனாகினான்.
அதீஃபா கலீலின் பிரியமானவளாகினாள்.

பெரிய எரிமலை வெடிப்பில் லார்வாவால் கருகிய பூக்களெல்லாம் மீண்டும் துளிர்விடுகின்றன.

" ஹெய் கலீல்! உனக்கு ஆங்கிலம், பஞ்சாபி தவிர என்ன மொழியெல்லாம் தெரியும். ", என்றாள் அதீஃபா.

" இந்தி புரியும். பேசத் தெரியாது. தமிழ் பேச, எழுத, புரிய தெரியும். "

" வேற! "

" வேற மொழிகள் தெரியாது? "

" அப்போ தமிழ் தான் உன் தாய்மொழியா? "

" இருக்கலாம். ஆனால், தமிழ் என்ற பெயர் உள்ளே இதயத்திற்கு இதம் தருகிறது. "

" அப்படினா, நான் உனக்கு பஞ்சாபி கற்றுத் தந்தது போல் நீ எனக்கு தமிழ் கற்றுத் தா. "

" ம்ம். சரி. ", என்று கலீல் சிந்து நதிக்கரை மணலில் தமிழ் எழுத்துகளைப் பொறித்து பாடம் எடுக்கத் தொடங்கினான்..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Dec-17, 10:52 pm)
பார்வை : 190

மேலே