மாந்தளிர்நீ மன்மத ராகம்

பா :
இலக்கணம் சாரா இனிய வரிகள் . வெண்பாவிற்கு ஒவ்வா ஆசிரியத் தளைகள்
அடிகளில் விரவி வந்திருப்பதால் வெண்பாவின் பாவினமான வெண்டுறை
எனலாம் .

புன்னகை அதரங்கள் பூமலர்த் தோட்டம்
பூமலர் விழிகள் கார்த்திகைத் தீபம்
குழிந்திடும் கன்னம் மாங்கனித் தோட்டம்
மாந்தளிர்நீ மன்மத ராகம் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடிகள் தோறும் நாலு சீர் கொண்டு நான்கு அடிகளில் அமைந்து
வெண்பாவின் இயற்சீர் வெண்சீர் வெண்டளைகளுடன் ஆசிரியத் தளைகள்
விரவி அமைந்து ஈற்றுச் சீரில் ஆசிரியப்பவின் அகவலோசை ஏகாரத்துடன்
முற்றுப் பெற்ற நிலை மண்டில ஆசிரியப்பா இப்பா !

நிலைமண்டில ஆசிரியப்பாவிற்கு சிறந்த எடுத்துக் காட்டு தேவராயக்
கவிராயர் அருளிய கந்த சஷ்டி கவசம் .

ஆசிரியப்பாவிற்கு குறைந்தது மூன்று அடிகள் தேவை.அடி எல்லை
இப்பாவிற்கு இல்லை.சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காவியங்கள்
இப்பாவினால் ஆனவை .

புன்னகை அதரங்கள் பூமலர்த் தோட்டம்
பூமலர் விழிகள் கார்த்திகைத் தீபம்
குழிந்திடும் கன்னம் மாங்கனித் தோட்டம்
மாந்தளிர் எழிலேநீ மன்மத ராகமே !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
முதற்பாவை நான் மிக விரும்பும் தூய வெண்பா வடிவில் தந்திருக்கிறேன் .

புன்னகை மென்னதரம் பூமலர் கள்தோட்டம்
பூமலர்ப் பொன்விழி கார்த்திகைத் தீபம்
குழிந்திடும் கன்னமோ மாங்கனி இன்தோட்டம்
மாந்தளிர்நீ மன்மதரா கம்.

யாப்பு வழியில் கவிதை பழகுங்கள். அது நான் கவிஞன் என்ற பெருமிதத்தை உங்களுக்குத் தரும் .

எழுதியவர் : கவின் சாரலன் (30-Dec-17, 8:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 120

மேலே