முடிவிலிகள்
முடிவிலிகள்
===========
கடல் ரசிக்கலாம், கைப்பிடித்து ஓடலாம்
அயர்வின் போது
அற்றையிடைநெளிய மூச்சு வாங்கலாம்
கண் பார்த்து சிரிக்கலாம்
ஒரு வாக்கிய முடிவின்போது,
நீயோ நானோ
ஒரு வாழ்க்கை முடித்திருக்கலாம்
அந்த முடிவிலிருந்து
இன்னொரு வாழ்க்கைத் தொடங்கலாம்
எந்த கோணத்திலிருந்து
வந்தவள் நீ
எந்த கோணத்தில் நின்று உன்னை
இணைந்தவன் நான் ம்ம்
நான் எண்பது கிலோ
நீ நாற்பது கிலோ
என்னில் பாதி வயது நீ
உன்னுடைய மீதி வயது நான்
காலப்புத்து,
கண் காமிரா
இவைகளிடமிருந்து
அகன்று வாழலாம்
பிடித்ததில் நுழைந்துகொள்
பிடிக்காததில் அதிகம் நுழைந்துகொள்
தேன்கொட்டிச் சிரிப்பு நீ
கருவேல முள் நான்
நீ தளிர்முத்தங்கள் கற்றுத்தா
நான் முதிர் காமம்
புகட்டுகிறேன்
நமக்கு இது யாரோ கற்றுக்கொடுத்த வாழ்க்கைதான்
பயணமும்
புதிதில்லைதான் ,,
உனக்கு நான்
எத்தனைப்புதிரென்றாலும்
நீ உன் பின் கூந்தல் அவிழ்த்துக்கட்டும்போது
அதில் என்னை
அவிழ்த்துவிடுகிறாய்
வாழ்க்கை பூமாராங்கை சுழற்றி சுழற்றி எறிகிறேன்
எத்தனை ஆழம் போனாலும்
என் கைக்கே வந்துவிடுவதைப் பார்
எல்லாமுமுனக்கு
என்னாலளிக்கப் பட்டதாகவே இருக்கட்டும்
இப்போதுமட்டும்தான்
நான் சொல்வதையெல்லாம் நீ கேட்கப்போகிறாய்
என்மேலிருக்கும் இந்தத் திளக்கம்
உன்னிடமிருந்து
மறையும் முன்பாகவே
எனக்கொரு சத்தியம் செய்துத்தா
நீயும் நானுந்தான்
நம் வாழ்க்கைக்கொரு முற்றுப்புள்ளியுமல்ல,
எப்படியோ,
ஒரு பிரிவிற்குப்பின்னால்
நம் பார்வையிலும்
சிரிப்புகளிலும்
உயிருக்கப்போவதில்லை
பிரிவே வேண்டாமென்ற சென்டிமென்டுக்குள்
நீயும் நானும்
தொலைந்து போகிறவர்களும் அல்ல
ஆனால்
ஒருபோதும் திரும்பிப்பார்க்காத
சந்திக்காத
பிரிவொன்றை கொடுத்து போ,
அல்லது போகிறேன்
உன்னுடைய
எந்த முடிவிலிருந்து நான் தொடங்கினேன்
என்னுடைய
எந்த வரவிலிருந்து நீ தொடங்கினாய்
ஒரு முனையில்
நம்மை இழந்தவர்களும்,
நாம் இழந்தவர்களும்
இனி இந்த முனையிலிருந்து தொடங்க இருக்கிற நாமும்
முடிவிலிகளா ??
ஒரு ஜென்மத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொடுத்து
ஒரு வாழ்க்கையை
எல்லோரையும்போல நாம்
நூறு வருடங்கள் வாழவேண்டாம்
அதிகம் கொடுத்து
அன்றாடம் வாழ்ந்துவிட்டு,
நம் நூறு
வருடங்களுக்குள்
நிறைய ஜென்மங்கள் பிரசவிக்கலாம் வா ம்ம்
பிடிவாதக்காரி
கழுத்துக்கட்டு ஏன் கேட்கிறாய்
எனக்குத்தானேத் தெரியும்
என்மேல் கோபம் வருகிறபோதெல்லாம்
எத்தனைமுறை
அதை அவிழ்த்தெறிவாய் என்று
இந்த முறையாவது
ஒப்புக்கொள்
இறுக்கங்களின்போது
உறுத்தல்களே வேண்டாமென்பது
முதலில் யாரென்று
அனுசரன்