நதி

===
நீர்ப்பால் குடித்து
நெளிந்த நடை போட்டவள்
இன்று சோமாலிய அருவிகளாய்
மெலிந்து உருமாறிக் கிடக்கிறாள்

நாணல் அணிகலன் பூண்டு
நாணி நடந்தவள்
மணல் அகழ்வு காமுகர்களால்
மான பங்கப்படுத்தப் பட்டவளாய்
அலங்கோலமாய் கிடக்கிறாள்.

சுரக்க மறந்த வனத்தாயின்
வற்றிய மார்புகளில்
கசிவதற்கு குருதியுமற்றுப் போனதால்
பாய்வதற்கு உருதியுமாற்றுக் கிடக்கிறாள்.

மேக நிறுவனங்களின்
மழைப்பால் இறக்குமதியும்
எப்போதாவது என்றான நிலையில்
தரைமட்டமான வாழ்தலின் கனவுகளை
உயிர்ப்பிக்க வழியின்றித் தரையாகவே
மாறிக்கிடந்தவளின் மேனியில்தான்
நீங்கள் வளர்த்து விடுகிறீர்கள்
கட்டிடங்கள் என்னும் கொங்ரீட் மரங்கள்.

அடையாள அட்டை என்றும்
கடவுச் சீட்டென்றும்
உங்களை அடையாளப்படுத்த
ஆவணங்கள் அமைத்துக் கொண்ட நீங்கள்
நீராடைத் தரித்த இவளுக்கு ஒரு
கோவணமும் கொடுக்க மறந்தீர்கள்.

கப்பல்கள் வந்திறங்கும்
கடலுக்கு நீர் வழங்கும்
நதிகளை உயிர்ப்பிக்கக் கொஞ்சம்
மரங்கள் நாட்டமறந்து
கோடரிகளை இறக்குமதி செய்யும்
வியாபாரக் கனவுகள் வளர்க்கிறீர்கள்

நதிகளைக் கொன்றுவிட்டு
நாகரீகத்தை வளர்க்கும் உங்கள்
பாவத்தை இனி எந்த கங்கையில்
கழுவப் போகிறீர்கள்..

வாரிசு வேண்டுமென்று
ஆலமரத்தையும் அரச மரத்தையும்
சுற்றிவரும் நேரத்தில்
ஒரு காட்டு மரக்கன்றையேனும்
நட்டுவைத்து விடுங்கள்.
மழலை உங்கள் வீட்டில் தவழாதபோதும்
மழலைபோல் ஒரு
மகாநதி மண்மேல் தவழட்டும்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Jan-18, 2:24 am)
Tanglish : nathi
பார்வை : 114

மேலே