தமயந்தி கவிதைகள்
முற்றமில்லாத ஒரு படுக்கையறை
ஒரு படுக்கையறையையும்
ஒரு சிறு அமர்வுகூடத்தையும் கொண்ட
சிறிய கவிதை.
அடுக்களை என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும்
நான்கு சொற்களாலான பத்தியொன்றை இறக்கி
மூன்று சொற்களை குத்தவைத்த அடுப்பும் இருந்தது.
இரண்டு சக்கர வாகனமொன்றைக்கூட நிறுத்திவைக்க இடமில்லை.
சிறுதுண்டு முற்றம்கூட இல்லாத கவிதை.
ஆனால்
கோடிப்புறத்தில்
சில பசுமையான சொற்களால் வளர்க்கப்பட்ட
இரண்டு புன்னைமரங்கள் நெடுநெடுவென
நிமிர்ந்து நின்றன.
மரங்களிரண்டையும் இணைத்தாற்போல்
ஆஞ்சான் சொற்களை திரித்துக் கட்டிய
அன்ன ஊஞ்சல் ஆடியிருந்தது.
இந்த ஒற்றைப் படுக்கையறையைக் கொண்ட கவிதைக்குள்
அவள் மட்டுமே குடியிருந்தாள்.
கோடிப்புறத்து அன்ன ஊஞ்சலில் ஏறி
நினைத்த இடமெல்லாம் உலா வந்தாள்.
ஒற்றைப் படுக்கயறையைக் கொண்ட அவளது கவிதை
ஆழ வேர்களையும் ஓடி,
அகலச் சிறகுகளையும் வளர்த்துக்கொண்டது.
முற்றமில்லாத கவிதை என நிராகரிக்கப்பட்டது அவளது கவிதை
அந்த குற்றமற்ற கவிதைகளாலான தெருவில்.
பின்னைய தகவல்:
கவிதையை இடுத்துத் தகர்க்கும்படி
தெருவே போராம்.
ஆனாலும்,
இதற்கெல்லாம் அவள் மசியாள்.