ஆத்தா பெரியாத்தா-கங்கைமணி

ஆத்தா பெரியாத்தா-கங்கைமணி

ஒரு உண்மை சம்பவத்தை இதில் உறைய வைத்திருக்கிறேன்.வயதான ஒரு மூதாட்டி 90 வயதில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.இவர் உடல் ஆரோக்கியமாக உள்ள ஒரு மூதாட்டி.அந்தவீட்டில் அனைத்து வேலைகளையும் தானே செய்யும் ஆற்றல் மிக்கவர்.வைராக்கியமான பெண்மணி இரும்பு மனதை உடையவர்.தன் பிள்ளையின் ஒற்றை சொல்லிற்கு தன் உயிரை மாய்த்துக்கொண்டவர்.இச்சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது.என்னை பாதித்த இந்த நிகழ்வுகளை என் மனக்குமுறல்களை கவிதையாக்கி இருக்கிறேன்.முழுவதும் படிக்க பணிகிறேன்.நன்றி !



ஆத்தா பெரியாத்தா !...நீ
அள்ளி முடிஞ்ச தல
அவிழ்ந்து நானும் பார்க்கலையே !
ஓம் சேலை நிறம்போல,அந்த
தும்பப்பூ பூக்கலையே!.

அதிர்ந்து நீ பேசி-
அதுல யாரும் பயக்கலையே
ஆத்தா! ஓம் பார்வைக்கி..
அடிபணியா தாலில்லையே!

மலர்ந்த நெத்தியில
மன மனக்கும் திருநீறும்
நரைச்ச முடியோட
நிறைஞ்சிருக்கும் ஓம் அழகு.

கூனல் உடம்பிருந்தும்
கோணாத மனமுனக்கு
காணி கரையிழந்தும்
கலங்காத திடமுனக்கு.

தெய்வம் இருக்கானு
தெரியாது எனக்கு ஆத்தா
மாதரசி நீ நடந்தா ,அந்த
மகமாயி போலதாந்த்தா.

வயசான ஒருத்தருக்கு
வாழ்க்கைப்பட்டு வந்தவ நீ
வாழ்க்க தொடங்குமுன்னே
வடிவிழந்து போனவ நீ !.

அடகாத்த கோழியாத்தே..
குடும்பத்த காத்து நின்ன
அடிவேறு போலத்தே..,
அசராம தாங்கி நின்ன.

ஒத்த மனுசியா...
அத்தனையும் பார்த்தவ நீ !
ஓய்ஞ்சு படுக்காம
ஓயாம ஒழைச்சவ நீ !

தொண்ணூறு வயசுலயும்
துடிப்போட தானிருந்த
தின்னுற சோத்துக்கு
தினந்தோறும் தானுழைச்ச.

ஒத்த மகனுக்காய்...,
உயிர்வாழ்ந்த உத்தமியே..நீ
செத்துப்போவயினு-
ஒருபொழுதும் எண்ணலயே!

ஆத்தா பெரியாத்தா.,
குடியகெடுத்துருச்சே
கயத்த போட்டுத்தே
கதைய முடிச்சுருச்சே!.

சேதிகேட்டதுல
சிதைஞ்சு போனேனே !
இலவம் பஞ்சாத்தே
வெடிச்சு பறந்தேனே!

ஊரு சனமெல்லாம்
ஓடி வந்தென்ன.?
காளன் கால் பிடிச்சு
கதறி அழுதென்ன?

கோட்டை உடைச்சுத்தே...
குலசாமி போயிட்ட!.
கும்பிடும் கரங்களுக்கு -
கதியில்லாதாக்கிட்ட.!.

ஊறும் நதியெல்லாம்
ஓப்பாரு வைக்குது
உறங்கும் கிளியெல்லாம்
உன்பேச்ச பேசுது.

காடு கரையெல்லாம்
கண்ணீரில் மூழ்குது
ஓடும் உயிரெல்லாம்
உட்காந்து அழுகுது.

என்ன நீ நெனச்ச
எதுக்கிந்த முடிவெடுத்த....??

மார்டன் உலகமிது,
மதிக்கலையோ உன்னத்தே!
பூமி பொறுக்கலையோ?
ஓம் பாரம் சுமக்கலையோ!

பெத்த மகன் சொன்ன
ஒத்த வார்த்தையில
உசுர மாய்ச்சியா ?!

குடும்பம் சரியில்ல
கொண்டவனும் கூடயில்ல
கதைய முடிப்போம்னு
கயித்த எடுத்தியா !?

கழுத்த இறுக்கயில
காட்சி மறையயில
என்ன நெனச்ச ஆத்தா ?!

கலியுக முகத்துல
காரி உமிழ்ந்தியா.?!
நன்றிகெட்ட உலகமுன்னு
நெஞ்சுருகி அழுதியா?

சாகடிச்ச மனிதத்த-
சற்றும் நினைக்காத.,
சண்டால உலகத்த-
சபிக்க மறக்காத.

மகன பார்க்கணும்னு
மறந்தும் நினைக்காத
மனக்கவல போக்கனுன்னு
மகன் கனவில் வராத.

மறுபடியும் பிறந்து வந்து
மடியில் தவழாத.
மனித மடிகளுக்கு,அந்த
அறுகதையை கொடுக்காத.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (6-Jan-18, 12:37 am)
பார்வை : 140

மேலே