செல்லுமிடமெல்லாம் கிழக்கு

யாருக்கும் பாருக்குள்
பொதுநீதி யென்றாக்கிடவே
பாருக்குள் பெருநெருப்பாய்
பிரவேசித்தான்
பகலவன்....!

எல்லாருக்கும் சேர்த்து
பொதுவாகத்தான் எரிகிறான்
அந்தச் சூரியன்...

சிலர்
சுகத்திற்காக அவன்
சூட்டை உறிந்து
சூரிய குளியல்
போடுகின்றனர்...

பலர் அவன் காட்டும்
வெளிச்சப் பாதையில்
பாதை வழுவாமல்
பயணம்
மேற்கொள்கின்றனர்...!

கிழக்கே அவன் எழும்பொழுதெல்லாம்
கிறங்கி உறங்குபவர்களையும்
சேர்ந்து எழுப்பிவிடுகின்றான்
ஒளிநீர் தெளித்து....

காலம் பகடையுருட்டி
கதிரவனை
எதிர்திசையில்
புதைக்கும்
நேரமெல்லாம்..
இருள் விரும்பும்
கள்வர் கூட்டம்
எக்காளமிட்டு
சிரிக்கின்றது....

விரவிக்கிடக்கும்
இருட்டில்
கண்ணாம் பூச்சிகள் பல
கண்ணாமூச்சி
விளையாட்டு
காட்டுகின்றன...
தம்மை
இரவுச் சூரியனாய்
சுய உருவகம்
செய்துகொண்டு...

பாவம்..
இந்த கள்வர்களும்
கண்ணாம் பூச்சிகளும்
அறிந்திருக்கவில்லை...
உண்மையில்
சூரியன்
செல்லுமிடமெல்லாம்
கிழக்கென்று....!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (6-Jan-18, 8:09 pm)
பார்வை : 200

மேலே