நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-09

....நெஞ்சோடு கலந்திடு....

அத்தியாயம் : 09

நீண்ட நாட்களின் பின் அவனைக் கண்ட மகிழ்ச்சியில் உறக்கம் என்னை விட்டு தொலைதூரமாகச் சென்றிருக்க...அறையோடு இணைந்திருந்த பல்கனியில் போய் நின்று கொண்டேன்...

இருள் அதிகமாய் சேர்ந்திருந்த அந்த நேரத்தில் குளிர் தென்றல் என்னை வருட,கண்ணை மூடி அந்த இதத்தை ரசித்துக் கொண்டேன்...இங்கிருந்து கொஞ்சம் தூரமாய் தெரிந்த வெளிப்புறப் பாதையில் வந்து வந்து போய் கொண்டிருந்த வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான்,என்னை யாரோ பார்ப்பது போல் தோன்றவும் திரும்பிப் பார்த்தேன்...

வேறு யார் என்னைப் பார்க்கப் போகிறார்கள்...அவன்தான் என்னை கைகளிரண்டையும் ஜீன்ஸ் பாக்கெட்டிற்குள் விட்டவாறு பார்த்துக் கொண்டிருந்தான்...

அவன் இந்த அறையினை எனக்கென்று தனியாக ஒதுக்கித் தரும் போதே நினைத்தேன்,இவன் இப்படித்தான் வந்து நிற்பானென்று...ஆனால் எனக்கும் அதிலொன்றும் வருத்தம் இருக்கவில்லை....சொல்லப் போனால் அவனை விடவும் சந்தோசம் எனக்குத்தான்...

என் சந்தோசத்தினைக் கண்டு கொண்டவனாக என்னைப் பார்த்து குறும்பாகச் சிரித்தவன்,நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத வேளையில் அவனது பல்கனியிலிருந்து பாய்ந்து எனது பல்கனிக்கு வந்திருந்தான்...

இரண்டு பல்கனிகளுக்குமிடையே இடைவெளி இல்லாமல் இருந்த போதே நான் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும்...ஆனால் நான்தான் அவனைக் கள்ளமாய் ரசிப்பதிலேயே பிசியாக இருந்து விட்டேனே...இப்படி முன்னே வந்து அதிர்ச்சி வைத்தியம் தருவானென்று எங்கே எதிர்பார்த்தேன்...??

முதலே இதை யோசித்திருந்தால் அறைக்குள்ளாவது ஓடித் தப்பித்திருக்கலாம்...இப்போதோ அவன் என்னை எங்கேயும் நகர விடாது இரு கைகளையும் என் இரு பக்கங்களிலும் ஊன்றி சிறைப் பிடித்திருந்தான்...அந்தச்சிறை எனக்குப் பிடித்தமானதென்பதால் நானும் மனதளவில் அதில் விருப்பத்துடனேயே சிறைப்பட்டுக் கொண்டேன்...

நேருக்கு நேராய் எங்கள் விழிகள் நான்கும் மோதிக் கொண்டதில்,அங்கே சற்று நேரத்திற்கு மௌனமே நீடித்தது..என் விழிகளுக்குள் ஊடுருவல் செய்தவன்,

"சொல்லு.."

"என்ன..என்ன சொல்லனும்..??.."

"ம்ம்...உன் மனசில என்ன இருக்கோ அதைச் சொல்லு..."

"என் மனசில என்ன இருக்கு...என் மனசில ஒன்னுமில்லை..."ஏனோ தெரியவில்லை இதைச் சொல்லும் போதே என் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது...

என்னை இன்னும் நன்றாக ஊன்றிப் பார்த்தவன்,

"அப்போ உன் மனசில ஒன்னுமேயில்லை...??.."

"ம்ம்..."

"நான் கூட இல்லையா நித்தியா...??..."

இதுவரை நேரமும் அவனது கேள்விகளுக்கு நேருக்கு நேராய் பதில் சொல்லிக் கொண்டிருந்த என்னால்,அதற்கு "இல்லை.."என்ற பதிலை பொய்யாகக் கூடச் சொல்லப் பிடிக்கவில்லை...அதனால் மௌனமாகவே இருந்தேன்...ஆனாலும் அவன் அவ்வளவு எளிதில் விட்டுவிடுபவனா...?

"சொல்லு நித்தியா...உன் மனசில நான் இல்லையா..??.."மிகவும் அழுத்தமாக வந்தது அவன் குரல்...

"தெரியல.."

"தெரியலன்னா...??..."

"தெரியலன்னா தெரியலதான்.."

அவனின் ஒவ்வொரு கேள்விகளும் என் உள்ளத்தை துளைப்பவையாகவே இருந்து வைத்ததில்,என்னால் அதற்கு மேலும் பொறுமையாக நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியவில்லை...அதனால் அவனிடத்தில் இருந்து விலக எத்தனித்தேன்...ஆனால் அவன் என்னை விட்டால்தானே..??

"எனக்கு ஒரு பதிலைச் சொல்லிட்டு எங்க வேணும்னாலும் போ நித்தியா..."

"இதுக்கான பதிலை நான் உனக்கு அன்னைக்கே சொல்லிட்டேன் வருண்...நீ எத்தனை முறை அதே கேள்வியையே திருப்பித் திருப்பி கேட்டாலும் என் பதில்ல மாற்றமில்லை..."

அவனைப் பார்ப்பதை தவிர்த்து எதிர்ப்புறமாய் என் பார்வையைப் பதித்தவாறே சொல்லி முடித்தேன்...ஆனால் அதன் பின்பு கூட அவன் அசைந்து கொடுக்கவில்லை...என் கரத்தினைப்பற்றி அவன் பக்கமாய் இழுத்துக் கொண்டவன்,என் விழிகளுக்குள் எதையோ தேடினான்...

ஆனால் என் மருண்ட விழிகளைக் கண்டதும்,என்னைத் தள்ளி நிறுத்தியவன்...விலகி நின்று கொண்டான்...

"போ..."

"வருண்..."

"போன்னு சொன்னேன்.."

அவனது குரலே சொல்லியது..அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறானென்று..ஆனாலும் என்னால் அவனை விட்டுச் செல்ல முடியவில்லை...
அவன் "போ" என்று சொல்லியும் நகராமல் அவ்விடத்திலேயே நின்றேன்...

ஆனால் அவன் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை...கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது பல்கனிக்குச் சென்றவன்,அறைக் கதவினைத் திறந்தவாறே என்னைத் திரும்பிப் பார்த்தான்...

"இனிமே நானும் உன்னைத் தேடி வரமாட்டேன்...நீயும் என்னைத் தேடி வராத..."என்று மிக அழுத்தமாகக் கூறியவன்...கதவை படாரெனச் சாத்திக் கொண்டான்...

அவன் இறுதியாகக் கூறியதில் துடிதுடித்துப் போய் நின்ற நான்,அவனது செய்கையில் இன்னும் துயரம் என் நெஞ்சை அடைத்துக் கொண்டது...அழுகை எனக்குள் பேரலையாகக் கிளம்ப,கட்டிலில் அழுதவாறே போய் விழுந்து கொண்டேன்...கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தோடியது....


நினைவுகள் வீசும்.....

எழுதியவர் : அன்புடன் சகி (7-Jan-18, 7:40 am)
பார்வை : 434

மேலே