மழைத்துளி
![](https://eluthu.com/images/loading.gif)
மழைத்துளி
மண்ணின் உயிரே மழைத்துளியே
மாநிலம் செழித்திட வாவாவா!
ஏரிகள் குளங்கள் ஆறெல்லாம்
நீர்கொண்டு நிரம்பிட வாவாவா!
ஆடியில் மண்ணுக்கு நீவந்தால்
தேடிய உழவர்கள் விதையிடுவர்
அடுத்தடுத்த உன் வருகையினால்
ஆனந்தம் கொண்டு ஆடிடுவர்
வெயில்காலந் தனில் நீவந்தால்
வெப்பம் விரைவாய் குறைந்திடுமே
ஒவ்வொரு உயிரும் உன்வரவால்
உல்லாசம் கொண்டு மகிழ்ந்திடுமே
நீயின்றி மண்ணில் வாழ்வுண்டோ?
நிலத்தினில் பசுமை நிறமுண்டோ?
துள்ளிக் குதித்திட குளமுண்டோ?
துதிக்கும் சாமிக்கும் விளக்குண்டோ?
கொஞ்சும் மழலையும் மறந்துவிடும்
குழலும் யாழும் வெறுத்துவிடும்
முக்கனி சுவையும் கசந்துவிடும்
திக்குகள் எட்டும் வறண்டுவிடும்
முத்தொடு பவளம் ரத்தினமும்
சொத்தை ஆகிடும் உனையிழந்தால்
நீதியும் நெறிகளும் தன்னாலே
நிலைமாறிப் போய்விடும் மண்மேலே
அறமும் மறமும் நீயின்றேல்
அடியொடு மண்ணில் அழிந்திடுமே
அமிழ்தம் எல்லோர்க்கும் நீயன்றோ?
அனைவரும் வாழ்ந்திட வாவாவா!
பாவலர். பாஸ்கரன்