கடலோடியின் கதறல்
இது ஒரு படக்கவிதை...
கடலோடியின் கதறல்..!
=====================
கடலால் சூழ்ந்து இம்மண்ணுலகம் இருப்பதாலே..
..........கடல்சார்ந்து வாழ்வதுதான் கடலோடியின் நிலை.!
அடலேறுபோல உடலுறுதி கொண்டவரே யாயினும்..
..........அலைநடுவே ஆபத்துடன் கழிப்பதேயம் வாழ்வு.!
இடர்படும் துன்பமும் தொல்லையுமெம் உடன்பிறப்பு..
..........இல்வாழ்வில் இன்பமென்றால் அர்த்தம் தெரியாது.!
கடலுக்கும் கரைக்குமுள்ள தூரத்தாலே எங்களது..
..........உடலுக்கும் உயிருக்குமொரு உத்திர வாதமில்லை.!
வலைவீசி மீனுக்காகக் காத்திருக்கும் வேளையில்..
..........வஞ்சகர்கள் வீசும் வலையிலும்யாம் வீழ்வதுண்டு.!
அலைமேலேறித் தாவும் திமிங்கிலம் போல்வரும்..
..........ஆயிரமைல் வேகத்தில் வருமன்னியப் படையது.!
வலையறுக்கும்! படகுடைக்கும்! பகை விலக்கியாம்..
..........தொலைதூரம் சென்றால்?எல்லை தாண்டினாயென..
கொலையும் செய்வார்! கொடும் பாவியரப்போது..
..........அலைதான் எங்களுக்கெலாம் ஆறுதல் சொல்லும்.!
காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?எனக்..
..........கருத்துக் கேட்டான் கவியரசன் திரையிசையில்.!
காற்றுடனும் அலையுடனும் போராடி உறவாடும்..
..........கண்ணீரும் கடல்நீரும் வற்றாதென்பது இயற்கை.!
காற்றழுத்தம் வரும் போதலையின் சீற்றத்தால்..
..........காய்ந்த கருவாடு போலநாளும் கரைசேருவோம்.!
மாற்றுவழி வாழவொரு வழியில்லை ஆற்றாதழுத..
..........மனதைக் கல்லாக்கி தேற்றியும்யாம் வாழுகிறோம்.!
====================================================
வல்லமை படகவிதைப் போட்டிக்குச் சமர்ப்பிவிக்கப்பட்டது.