நீ ஊருக்கு போகையில்

மறுமுறை
ஊருக்கு போகையில்
உன் நினைவு தாங்கி நிற்கும்
இவை யாவையும்
உடன் கூட்டிச் சென்றுவிடு.

கிழக்கு மறந்த கதிரவன்
காலையில் தினம்
வடக்கே வாசலில் வந்து
"இன்னமும் வரவில்லையா"
என வினவிச் செல்கின்றது.

அனுதினம் நீ
மாக்கோலமிடுகையில்
உன் பாதங்களை
முத்தமிட்ட முற்றமது
மூன்று நாளாய்
உண்ணாவிரதம் இருக்கின்றது.

புத்தி பேதலித்த
அறைக் கடிகாரம்
பெருந்துயர் கொண்டு ஏனோ,
பின்னோக்கி
ஓடிக் கொண்டிருக்கின்றது.

இருவரும் ரசிக்க அன்று
இளையராஜாவை ஒலித்த
உனது ரேடியோ, இன்று
முகாரி தவிர்த்து
மற்ற ராகங்களை
மறந்து போய்விட்டது.

உன் மஞ்சம்
வீற்றிருக்கும் துயிலறை
விளக்குகளை
விவாகரத்து செய்துவிட்டு
இருட்டிலே வாழ்கின்றது.

உன் அலமாரி ஆடைகள்
சொல்கின்றன
ஆயிரமாயிரம் கதைகளை,
முதுமையின் சுருக்கங்களை,
தனிமையின் தேடல்களை.

மறுமுறை
ஊருக்கு போகையில்
இவை யாவையும்
உடன் கூட்டிச் சென்றுவிடு.

இல்லையெனின்,
எனை மட்டுமாவது
உன்னோடு
கூட்டிச் சென்றுவிடு

எழுதியவர் : (16-Jan-18, 5:35 am)
சேர்த்தது : தமிழ் பித்தன்
பார்வை : 36

மேலே