Siru Semipu

உலகின் மாபெரும் பொருளாதார மேதைகளுள் ஒருவராகிய Warren Buffet சேமிப்புப் பற்றிக் கூறும்போது, இப்படிச் சொல்கின்றார், "உங்களின் வருமானத்தில், முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்; உங்கள் வருமானத்தில், சேமிப்புப் போக மீதியைச் செலவழியுங்கள்"

அவர் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலுமுள்ள பொருளாதார மேதைகளுடன் சேர்ந்துகொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெற்ற யாவரும் ஒரே குரலில் சேமிப்பின் மகத்துவம் பற்றிக் கூறுகின்றனர். நம் தமிழிலும், செமிப்புப்பற்றிய பல பழமொழிகளும், பொன்மொழிகளும் உண்டு.

அவற்றில் ஒன்று, "சிறு துளி, பெரு வெள்ளம்; சிறுகச் சேர்த்தால், பெருக வாழலாம்"

சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழியைப்பற்றிச் சிந்திக்கும்போது, இவ்விடயம் பற்றிய சுவையானதொரு கதை நினைவுக்கு வருகின்றது.

ஒரு ஊர். அந்த ஊரில் ஒரு அரசன். கஞ்சத் தனத்துக்குப் பெயர் பெற்றவன்.

ஒருமுறை, அந்த ஊரில் பெரும் உணவுப்பஞ்சம் வந்தது. மக்கள் யாவரும் பட்டினியால் தவித்தார்கள். அரசனின் உணவுக் களஞ்சியம் நிறைய பலவிதமான தானியங்கள் நிறைந்து இருந்தன. ஆனால், இருப்பவர்கள் நெஞ்சில் ஈரம் சுரந்தால்தானே கொடுப்பதற்கு எண்ணம் வரும்? பசியால் வாடிய மக்கள் பலவாறு கேஞ்சிக்கேட்டபோதும், அரசன் ஒரு தானியம் கூடக் கொடுக்க முடியாது என்று கூறி விட்டான். ( அந்த அரசனுக்குப் பல மனைவிகள்; ஏராளமான பிள்ளைகள்; கணக்கிலடங்காத பேரப்பிள்ளைகள். அவர்களின் பல தலைமுறைக்கு அவன் பொருள் சேகரித்து வைத்திருந்தான. அவர்களுக்காகவே இப்போது தானியங்களையும் தர மறுக்கின்றான்!)

மனம் வருந்திய மக்கள் வேறு வழியின்றி, அவ்வூர் கோயிலின் தலைமைச் சாமியாரிடம் சென்று கண்ணீரும் கம்பலையுமாகத் தங்கள் நிலையைக் கூறினார்கள். சாமியார் மிகவும் நல்லவர்; எவ்விதமான தீய பழக்கங்களோ, சுயநலமான எண்ணங்களோ இல்லாதவர். சாமியார் மனம் இரங்கினார். மக்களின் பசியைத் தீர்க்க அவர் முடிவு செய்தார். அரசனிடம் சென்றார். பசியால் வாடும் மக்களின் அவல நிலையைக் கூறி, அவர்களின் பசிதீர்க்குமளவாவது தானியங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அரசன் தீர்மானமாக மறுத்து விட்டான்.

சாமியார் விடவில்லை. "அரசே, உனது குடி மக்கள் பசித்திருக்க, நீயும் உன் குடும்பத்தினரும் வயிறு புடைக்க உணவு உண்பது பெரும் பாவத்தைத்தான் கொண்டுவரும். வீணாகப் பெரும் பாவத்தைச் சேர்த்து வைக்காதே" என்று கூறினார்.

அரசன் சற்றுப் பயந்துபோனான். "துறவியே, உங்களுக்கென்ன? நீங்கள் வெறும் இலைகளையும், வேர்களையும் தின்றே காலத்தை ஓட்டி விடுவீர்கள். எனது குடும்பத்தினர்கள் பெருவயிறு படைத்தவர்கள். நாள் முழுவதும் தின்றுகொண்டே இருப்பார்கள். மக்களுக்குக் கொடுத்துவிட்டால், பின்னர் எனது குடும்பத்தினர் சாப்பிட உணவுக்கு எங்கே போவது?" என்று கேட்டான்.

சாமியார் பொறுமையுடன் கூறினார், "அரசே, கலங்காதே. நீ அதிகமாக ஒன்றும் கொடுக்க வேண்டாம். இன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் முடியும்வரை மட்டும் தானியங்களை வழங்கு. இன்று ஒரே ஒரு தானியத்தை மட்டும் கொடு. நாளை அதன் இரு மடங்கு, அதாவது இரண்டு தானியங்களை மட்டும் கொடு. மறுநாள், அதன் இருமடங்கு, அதாவது நான்கு தானியங்களை மட்டும் கொடு. இவ்வாறாக தினமும், அதற்கு முந்திய நாளில் கொடுத்ததின் இரு மடங்கு தானியங்களை மட்டும் உன் குடி மக்களுக்கு வழங்கு. இவ்வாறாக, நீ இந்த முப்பது நாளில் செய்யும் தானம் உனக்குப் பெரும் புண்ணியத்தைத் தேடித் தரும்".

அரசன் தனக்கு விளங்கிய வகையில் சற்றே சிந்தித்துப்பார்த்தான். முப்பது நாளில் அவ்வளவு அதிகமான தானியங்கள் அவனது களஞ்சியத்தைவிட்டுப்போகாது என்பது திண்ணம். முதல் நாளில் கொடுப்பது ஒரே ஒரு தானியம். மறு நாளில், இரண்டு மட்டுமே. நினைத்தபோதே அரசனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. 'எனது குடி மக்களைப்போலவே, இந்தச் சாமியாரும் சுத்த முட்டாளாகவே இருக்கிறார். சரி. அவர் கூறியபடியே கொடுத்துத் தொலைப்போம்' என்று எண்ணி, அவர் கூறியபடியே தானியங்களை வழங்குமாறு தனது களஞ்சிய நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டார்.

அதன்பின்னர் என்ன நடந்தது? அதை நம் வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன். ஆனால், அவனது களஞ்சியம் கிட்டத்தட்டக் காலியாகி விட்டது உண்மை. அவனது குடிமக்களுக்கு சில நாட்களின் பின்னர், வயிறு நிறைய உணவு கிடைத்ததும் உண்மை. சாமியார் செய்த தவத்தின் பலனாக, ஒரு மாதம் முடியுமுன்னரே நல்ல மழை பெய்து நிலம் செழித்ததும் உண்மை.

'சிறு துளி பெருவெள்ளம்' என்பதை இக்கதை நிரூபித்து விட்டிருக்கும் என்று நம்புகின்றேன்.

அதேபோன்று, நம் வாசக அன்பர்களும் தாம் சம்பாதிக்கும் காலத்திலேயே சிறு சிறு துளிகளாக, தமது வீண் செலவுகளையெல்லாம் தியாகம் செய்து சேமிக்கும் பணம் அல்லது செல்வம், அவர்கள் முதிய பருவத்தையடைந்து, சம்பாதிக்கும் திறனை இழந்திருக்கும்போது, பெரு நிதியாக அவர்களுக்கு உதவும் என்பது திண்ணம்.

ஆகவே, சம்பாதிக்கும் பருவத்திலேயே, உரிய முறையில், நிச்சயமான - பாதுகாப்பான வழிகளில் செல்வத்தைச் சேமித்து வைக்கும் பழக்கத்தை நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

எழுதியவர் : (17-Jan-18, 4:37 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 6918

மேலே