எண்ணங்களை என்ன செய்யலாம்
==================================
எண்ணங்களுக்கு கால் முளைத்து
எங்கெங்கோவெல்லாம் நடக்கிறது
எனக்கோ அதனுடன் போட்டியிட்டு
எங்குமே நடக்க முடிவதில்லை.
இதயத்தில் இருந்தபடி
ஏறாத மலை மேல் ஒரு
கழுகைப்போல் பறந்து சென்று
அமர்ந்து விடுகிறது .
அடர்ந்த மேகங்களை ஊடறுத்து செல்லும்
ஒரு ஆளில்லா விமானத்தைப்போல
அசுர வேகத்தில் ஆகாயத்தின்
அந்தப்புரத்துக்குள் நுழைந்து கொள்கிறது.
ஆழ்கடலுக்குள் நீந்தும்
திமிங்கிலத்தின் முதுகில்
அமர்ந்துகொண்ட ஆமையைப்போல்
உல்லாச சவாரியும் செய்கிறது
கிட்டாத ஒன்றை எண்ணி
ஆகாயக் கோட்டைக் கட்டி
அழகாக வாழ்கிறது.
இலவசமாகவே வருவனவற்றில்
ஏதாவதொன்று எப்போதாவது
நிஜமாகி விடுகிற
அபூர்வங்களை நிகழ்த்திவிட்டு அது
எப்போதும் வரவேண்டும் என்ற
எதிபார்ப்பைக் கூட்டுகின்றது.
எண்ணங்களே இல்லாத
இதயம் வேண்டியும்
எண்ணங்களே இல்லாமல்
வாழ்ந்துவிட வேண்டியும்
எண்ணங்களைத் துரத்திவிட்டுத்
திரும்பிப்பார்த்தால்
எண்ணங்களைத் துரத்தியது தப்பென்று
எண்ணத் தோன்றும் எண்ணங்களே வருகிறது..
இந்த எண்ணைகளை இனி
என்னதான் செய்வதோ தெரியவில்லை.
*மெய்யன் நடராஜ்