காதல்
கண்ணே, வட்ட வட்ட
உந்தன் எழில் முகத்தில்
கொஞ்சி விளையாட வந்த
கயல்கள்தானோ உந்தன்
மயக்கும் மாய கண்கள்
அதன்மேலே ஒத்தை நிற
வான வில்லாய் காட்சி
தரும் புருவங்களிரண்டு
மூடித் திறக்கும் இமைகள்
உந்தன் கண்ணோடு சேர்ந்து
பேசும் காதல் மொழிகள்
அப்பப்பா என்னென்று சொல்வேன்
என் நெஞ்சில் இன்பத்தேன்
வந்து பாய்ச்சுதடி கண்ணம்மா
கொஞ்சும் உந்தன் கொவ்வை இதழ்கள்
தேன் சிந்தும் மோகன கிண்ணங்கள்
அதில் ததும்பி நிற்கும் இதழோர ஈரம்
காதலன் எனக்கு முத்தங்கள் தர
துடிக்குதோ உந்தன் அதரங்கள்
என்று நினைக்க வைக்குதடி கண்ணம்மா
கட்டுக்கடங்கா கார்மேக குழல்
கூந்தல் உந்தன் தோள்களில் வீழ்ந்து
விளையாட அதைத் தொட்டு பின்னி
இரட்டைப்பின்னலாய் தோள்களின் முன்னே
நீ இட்டு எழில் பார்க்கையிலே
உந்தன் கட்டு குழல் என்னை மயக்குதடி
அந்த கூந்தலின் மல்லிகை வாசம்
என்னை சொர்க்கத்துக்கே இழுத்து
செல்கிறதே கண்ணம்மா
இப்படியே உன் அழகை அத்தனையும்
பேசும் தமிழில் கவிபாட வந்தேன்
பாடிய வரிகள் நாளை உலகம் படித்திட
எழுதும்போது நீ சிரித்த சிரிப்பு
தீபாவளி மத்தாப்பு சரமாய் ஒளிவீச
எந்தன் கண்கள் கூச எழுதுவதை நிறுத்தி
உந்தன் எழில் வண்ணம் இன்னும் பார்க்க
என் உள்ளம் என்னைத் தூண்ட
.....................கவிதை அத்துடன் நின்றதடி
அன்பே என் கண்ணம்மா!