லப்டப் லப்டப்
நல்ல பெயரெச்சங்கள்
சராவின் பெயரின் முன்னாலும்
நல்ல நல்ல வினையெச்சங்கள்
சராவின் செயல்களின் முன்னாலும்
போட்டுச் செல்லும்
கலங்காத கலக்க முடியாத
தெளிந்த நீரோடை
சராவின் வாழ்க்கைப் பாதை...
வல்லின மெய்யின்மீது
ஊர்ந்து வரும் உகரம்
தன் ஒரு மாத்திரையில்
குறைந்தாலும் குற்றியலுகரம்
அழகாய்த்தானிருக்கும்...
வலியவர்களோடு சேர்ந்து
நட்பு பாராட்டினாலும்
எளியவரிடத்தும் இயைந்து
நட்பு கொள்ளும்
நயத்தகு சரா குணம்
அழகாய்த்தான் இருக்கிறது...
ஆழ்கடல் எரிதழல் ஊறுகாய்
போன்ற வினைத்தொகை
வார்த்தைகள் முக்காலம்
சார்ந்து வரும்...
சராவின் அநீதி சாரா இயல்பு
எக்காலமும் பொருந்தி வரும்..
கெட்டன சாரா சராவில்
சாரா என்பது
ஈறு கெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம்...
நேர்படப் பேசும் சராவின்
செயல்கள் நல்லன விரும்பும்
எதிர்மறை வினையெச்சம்...
நகைச்சுவையும் வார்த்தை நயமும்
இவனுக்கு இரட்டைக்கிளவி...
நட்பும் நேர்மையும்
வேறு வேறு சொற்களிலான
இவனது அடுக்குத்தொடர்...
வெண்பாக்களில் அடங்காது
சராவின் பெருமை கூறும்
பண்பாக்கள்...
தனக்குத்தானே வகுத்துக்கொண்டான்
இலக்கணம்.. தான் எப்படி
இருக்க வேண்டும் என்று...
தனதறிவைப் பெருக்கிக் கொண்டான்
இலக்கியம் பல கடந்து...
என்றும் தன் பயணத்தில்
உற்சாகம் கூட்டி சோர்வைக்
கழித்து வாழும்
வாழ்க்கைக் கணிதம்
நன்றாகத் தெரிந்தவன்...
வார்த்தை விளையாட்டு
கிரிக்கெட் போன்றவை
சராவுக்குப் பிடித்த விளையாட்டுகள்...
இவை இரண்டிலும்
நின்று சாதிப்பார்...
சிக்சர்களை பறக்க விடுவார்...
திருவைகுண்டம்
வயல்வெளி பார்த்து வளர்ந்த
சரா எனும் சங்கர்ராஜ்
திருச்சிராப்பள்ளி
பாரத் மின்வெளி கண்டு
வாழ்கிறான்...
இவனது கம்யூனிச சிந்தனை
சொல்கிறது பொதுவுடமை...
எல்லா இசங்களைக்
கொண்டாரையும் தன்வயப் படுத்துவது
சராவின் தனியுடமை...
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணித் தண்ணீரும்
திருச்சி காவிரித் தண்ணீரும்
குடித்து வளர்ந்த சராவுக்கு
துன்பங்கள் வாரா...
இவனது பல்துறை
அறிவு உயரம் கண்டு
மலைக்கோட்டை மலைத்துப் போகிறது...
இவனது இதய லப்டப்பில்
நட்புக்கு அதிக ஒதுக்கீடு
இயல்பாய் இருக்கிறது...
எனவே இவனது இதயம்
பலமாக இருக்கிறது..
அது என்றும் நட்புக்குப்
பாலமாக இருக்கிறது...
அன்பு நண்பன் சங்கர்ராஜ்...
ஆரோக்கியம் உடல்நலம்
முதன்மையாய்க் கொண்டு
எல்லா வளங்களும் பெற்று
வாழ்க பல்லாண்டு...
🙋🏻♂👍👏😀🙏🌹🌺🌷🎂🍰