ஏமாற்றப்படும் ஏவாள்

ஆண்டவரே...
மண்ணெடுத்து பிசைந்து
மறுபடியும்
ஒரு
ஆதாம் செய்...
மறந்தும்கூட
அவனின்
இடுப்பெலும்பிலிருந்து
ஏவாள் செய்யாதே....
இம்முறை
பாவப்பட்ட கனியை
ஆதாமை புசிக்கச்சொல்லி
சாத்தானுக்கு
சமிக்ஞை -
கொடு
பிறப்புவழிப்பாதையை
ஆதாமுக்கு-
மடைமாற்று
வதைக்கும் ஆதாமை
ஏவாளாக்கி
வதைபடும் ஏவாளை
ஆதாமாக்கு....
கசியும் உதிரத்தின்
கரிப்புச்சுவையை
ஆதாமுக்கும்-
அறிமுகப்படுத்து
கடலைமூடு
கண்டங்களைக்-
கலைத்துப் போடு
உன்னை அடைய
இடைத்தரகர்கள்
இல்லாத-
நெடுஞ்சாலை போடு
மைல்கற்களுக்குப் பதிலாக
மனிதம்-
நடு
அச்சம் மடம்
நாணம் பயிர்பபென
அத்தனையையும்
ஆதாமின் உடலிலேயே
மொத்தமாக-
தைத்துவிடு
புதிதாய் உதிப்பவர்க்கு
பூமியில் இடமில்லை
ஆகவே
புதைத்தவற்றை
எல்லாம் -
உயிர்ப்பித்துக்கொடு
பயணப்படும்
தொலைவிற்கு
வசதியாய்-
பால்வீதி சமை
ஆதாம்களை
பிள்ளை சுமக்கவைத்து
ஏவாள்களை-
இளைப்பாறவிடு
பின்னே......
பாவப்பட்ட கனிபறித்து
பசிதீர்த்ததற்காக
எத்தனைக்காலம்தான்
பழிதீர்ப்பீர்கள்
ஆண்டவரே-
என் ஏவாளை...?

அழ. இரஜினிகாந்தன்

எழுதியவர் : (23-Jan-18, 8:35 am)
பார்வை : 45

மேலே