அறிவியல் இன்றைய வாழ்க்கையில்

மனித நாகரிகத்தின் புரட்சிகரமான கண்டுபிடிப்பாகச் சக்கரத்தைச் சொல்வார்கள். இந்துத்துவவாதிளோ, அது ‘விஷ்ணுவின் கையில் இருந்த சக்கரம்’ என்று சொல்வார்கள் போல! இந்தியாவில் இன்று, அறிவியலின் நிலை இதுதான்.

ஆம், புதிய மருந்துகளைத் தயாரிக்க உங்களுக்கு நிதி வழங்கப்பட மாட்டாது. ஆனால், மாட்டு மூத்திரத்தைப் பற்றி ஆய்வு செய்யக் கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கப்படும். பருவநிலை மாற்றம் குறித்துக் கவலைப்படமாட்டார்கள். ஆனால், ‘பகவத் கீதையில் அறிவியல்’ என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படும். நிதி தேவைப்படும் பொதுத்துறை அறிவியல் நிறுவனங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட நிதியின் அளவைக் குறைப்பார்கள். ஆனால், ஒதுக்கப்படும் பட்ஜெட்டில், பெருமளவு தொகையைப் பயன்படுத்தாமல், அரசுக்கே திருப்பித் தந்துவிடும் சில துறைகளுக்கு நிதி அள்ளி வழங்கப்படும்.

சமீபகாலமாக அறிவியல் மீது ஏவப்படும் யுத்தம் உலகம் முழுக்கக் காணக்கூடியதுதான் என்றாலும், இந்தியாவில் இந்த யுத்தம், மதத்தையும் மூட நம்பிக்கைகளையும் கூடவே அழைத்துவருகிறது. அதனால்தான் இங்குள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் எனப் பலரும் கவலை கொள்கிறார்கள்.

மேடையேற்றப்படும் மூடநம்பிக்கை

சூரிய கிரகணத்தின்போது வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்பது முதல் சந்திரக் கிரகண நாளில் சாப்பிடக் கூடாது என்பதுவரை நம் நாட்டில் எண்ணற்ற மூடநம்பிக்கைகள் நிலவிவருகின்றன. இந்நிலையில் 2014-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற மருத்துவ மாநாடு ஒன்றில், ‘புராண காலத்திலேயே நாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறோம்’, ‘அந்தக் காலத்திலேயே பயோடெக்னாலஜி இருந்ததற்குக் கர்ணனின் பிறப்பே உதாரணம்’ என்று அள்ளிவிட்டார் பிரதமர் மோடி. சரி, அவராவது அறிவியல் பின்புலம் இல்லாதவர். ஆனால், அதற்குப் பின்பு வந்த மாநாடுகளில் விஞ்ஞானப் புலமை உடையவர்களே அறிவியல் மாநாட்டை சர்க்கஸ் கூடமாக்கினார்கள்.

அதற்கு மிகச் சிறந்த உதாரணம், 2015-ல் மும்பையில் நடந்த 102-வது இந்திய அறிவியல் மாநாடு. அப்போது, வேத காலத்திலேயே விமானங்கள் இருந்தன, அவை மாட்டு மூத்திரத்தின் மூலம் பறந்தன என்று அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்பினார் கேப்டன் ஆனந்த் ஜே.போதாஸ். இவர், பைலட் பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் முதல்வராக இருந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், ‘பித்தாகரஸ் தேற்றத்தைக் கண்டுபிடித்ததே நாம்தான்’ என்று ஒரு போடு போட்டார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரே இப்படிப் பேசினால், அந்த நாட்டில் அறிவியலின் நிலை எப்படியிருக்கும்?

முன்னோர்கள் ஒன்றுமே செய்யவில்லையா?

இப்படி அறிவியலுக்குப் புறம்பான, மதத்தில் தோய்ந்த மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களை, ‘இந்தியாவின் மதிப்பை உணராதவர்கள்’ என்று விமர்சிக்கிறது இன்னொரு கூட்டம். உண்மையில், நமது முன்னோர்கள் ஒன்றுமே செய்யவில்லையா? அவர்கள் செய்த சாதனைகளை அங்கீகரிக்கக் கூடாதா?

நிச்சயம் அங்கீகரிக்க வேண்டும். எப்படி என்பதுதான் கேள்வி! ‘இந்திய வேதியியலின் தந்தை’என்று போற்றப்படுபவர் ஆச்சார்யா பிரஃபுல்ல சந்திரா. இவர், இந்திய அறிவியல் மாநாட்டின் முன்னாள் தலைவரும்கூட. ‘இந்தியாவில் அறிவியல் சிந்தனை குறைந்துபோனதற்குக் காரணம், இங்குள்ள சாதியப் படிநிலையும் மனு சாஸ்திரமும் வேதாந்தக் கல்வியும்தான்’ என்று எழுதியவர்.

‘ஹிஸ்டரி ஆஃப் இந்து கெமிஸ்ட்ரி’ எனும் தலைப்பில் அமிலங்கள், காரங்கள், உலோகங்கள், கலவைகள், ரசதந்திர முறைகள் ஆகியவை முற்காலத்தில் இந்தியர்களுக்கு இருந்த அறிவைப் பற்றி ஆவணப்படுத்தினார். இரண்டு தொகுதிகளாக வெளிவந்த அந்தப் புத்தகம்தான், வேதியியல் வரலாறு குறித்து உலகில் வெளிவந்த முதல் புத்தகம் என்று போற்றப்படுகிறது. இது அல்லவா நமது முன்னோர்களுக்கான அங்கீகாரம்?

அதேபோல, ‘இந்திய மருந்தியலின் தந்தை’ என்று போற்றப்படும் ராம்நாத் சோப்ரா, முற்காலத்தில் இந்தியர்கள் பயன்படுத்திய மூலிகைகளைக் கொண்டு உள்நாட்டிலேயே மருந்துகள் தயாரித்தார். அவர் ஆவணப்படுத்திய மூலிகைகள் பல இன்று ஆயுர்வேதம், சித்த மருத்துவ முறை மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நம் முன்னோர்களின் அறிவை இதைவிடச் சிறப்பாக எப்படி உலகுக்கு எடுத்துக்காட்டிவிட முடியும்?

ஆனால், இன்று நடப்பதோ வேறு. ராமர் பாலம் உண்மையிலேயே இருந்தது என்றும், புராணங்களில் சொல்லப்படும் பிரம்மாஸ்திரம் என்பது அணுகுண்டுதான் என்றும் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லாமல் அள்ளிவிடப்படுகிறது. இது நம் முன்னோர்களின் அறிவை மக்களுக்கு எடுத்துச்சென்ற பிரஃபுல்ல சந்திரா ரே, ராம்நாத் சோப்ரா போன்ற மேதைகளின் உழைப்பின்மீது சுமத்தப்படும் அவமானம்.

அறிவியலுக்காக அணிதிரள்வோம்

இப்படியான சூழலில், கடந்த ஏப்ரல் 22 அன்று உலகின் பல நகரங்களில் ‘மார்ச் ஃபார் சயின்ஸ்’(அறிவியலுக்காகப் பேரணி) என்ற தலைப்பில் அறிவியலின் மீது நிகழ்த்தப்படும் யுத்தத்துக்கு எதிராக விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் அணிதிரண்டனர். அதை அடிப்படையாக வைத்து, இந்தியாவில் கடந்த 9-ம் தேதி, அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் ‘இந்தியா மார்ச் ஃபார் சயின்ஸ்’ என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.

சென்னையில் ஐ.ஐ.டி., தரமணி கணிதவியல் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களிலிருந்து பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். ‘பிரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டி’ எனும் அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு வழங்கப்பட வேண்டும், அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும், அரசின் அனைத்துக் கொள்கைகளும் அறிவியல்பூர்வமாக வகுக்கப்பட வேண்டும், கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் என்கிற நான்கு கோரிக்கைகளை முன்வைத்துப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய கணிதவியல் நிறுவனத்தின் பேராசிரியர் ராமானுஜம், “உலகம் முழுவதும் அறிவியலுக்குப் புறம்பான அரசியல் நடைபெற்றுவரும் காலமிது. அதை எதிர்க்க நாம் தெருவில் இறங்கித்தான் ஆக வேண்டும். இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தும் பொதுத்துறை அறிவியல் நிறுவனங்களாலேயே சாத்தியமாகி உள்ளன.

அறிவியல் ஆய்வு என்ற பெயரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஊழல்கள் நடக்கத்தான் செய்கின்றன. அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். ஆனால், அதைக் காரணம் காட்டி, அறிவியல் ஆய்வுகளுக்கான நிதியைக் குறைப்பது சரியல்ல. அறிவியல் ஆய்வுக்கான நிதியைக் குறைப்பது, மூடநம்பிக்கை கருத்துகளைப் பரப்புவது போன்றவை வெறும் அறிகுறிகள்தான். உண்மையான நோய் என்பது, அறிவியலையே நிராகரிப்பதுதான். அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற இந்தப் பேரணியை, பிரபல அறிவியல் செயல்பாட்டாளர் அரவிந்த் குப்தா தொடங்கிவைத்தார். அதில் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். அந்தப் பேரணி உணர்த்திய விஷயம் இதுதான்: ‘அறிவியலை ‘ஷட் அப்’ பண்ணாதீங்க!’

எழுதியவர் : (23-Jan-18, 2:55 pm)
பார்வை : 7343

மேலே