எல்லைச்சாமி எங்கபோன

சாலையோரம் சங்கதிகாணும் எல்லைச்சாமியே எங்கபோன
மாலையானா மண்புழுதி சேலையெல்லாம் செதக்கிதய்யா...!

வட்டிக்காசு கேக்கவந்த மேலக்காட்டு நாட்டாமைகூட
குட்டினுதான் கூப்புடுறான் கொசுவத்தயே பாக்குறான்...

சாதிசனம் யாருமில்ல சேதிகேக்க எவருமில்ல
ஊதியக்காச ஒளிச்சிவெக்க வழியிருக்கா சொல்லுங்கய்யா...!

பச்சரிசி ஒலையவச்சா பத்தவச்ச அடுப்புதூங்க
எச்சமாக கொண்டுபோக மிச்சமென்ன இருக்குதய்யா...!

கொத்துவேல செய்யப்போனா கொத்துகொத்தா பேசுறாங்க
பத்துபாத்திரம் தேய்க்கப்போனா பலவிதமா ஏசுறாங்க...

மாசமாசம் சீட்டுக்காசு சேத்துவச்சி பவுனுவாங்க
ரோசம்கெட்டு கொல்லுறாங்க மாத்துவழி மெல்லுறாங்க...

சுள்ளிபொறுக்க போயிட்டுவந்தா சும்மாடாகும் முந்தானைக்கி
கள்ளிப்பேச்ச பேசுறாங்க கொல்லிவெக்க பாக்குறாங்க...

நாண்டுக்கிட்டு நானுசெத்தா ஊரெனக்கு தூறுபேசும்
பாண்டிச்சாமி பக்கம்நில்லு பத்திரமா கொண்டுசெல்லு...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (26-Jan-18, 3:57 pm)
பார்வை : 121

மேலே