கண்ட நாள் முதலாய்-பகுதி-41

.....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 41

அன்று அந்த மண்டபம் முழுவதுமே திருமணக் கோலத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது...வெளியில் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த "பரத்-ஸ்வேதா"வின் பெயர்கள் அன்றைய நாளுக்கான நாயகன்,நாயகி அவர்கள்தான் என்பதை அழகாக காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது...இது அனைத்தையும் கடந்து அங்கே கன்னியர்கள் படை ஒரு புறமும்..காளையர்கள் படை இன்னொரு புறமும் என்று ஓர விழிப் பார்வைகளுக்கும்,கேலிப் பேச்சுக்களுக்கும் பஞ்சமிருக்கவில்லை...

ஆனால் இந்தக் கேலிகள் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் போனில் எதையோ பார்வையிட்டவாறே,எதிரேயும் யாரும் வருகிறார்களா என பார்வையை அடிக்கடி எதிர் பக்கமாயும் உலாவச் செய்தவாறு,பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாகப் படியிறங்கி வந்து கொண்டிருந்தான் அர்ஜீன்...

வேகமாக இறங்கி வந்து கொண்டிருந்தவன்,அவனது பார்வை வட்டத்திற்குள் அவனுக்குப் பக்கமாய் மேலே ஏறியவளைக் கண்டதும் கால்கள் தடைப்பட அதிலேயே நின்று கொண்டான்...எதிரில் வந்தவளுக்கும் அதே நிலைமைதான் போலும்...அவளும் அவனைக் கண்டதும்...அதற்குமேலும் அடியெடுத்து வைக்காமல் அப்படியே நின்று கொண்டாள்...

இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்க்க,அவளது முகத்தை நன்றாக ஊன்றிப் பார்த்தவன்,

"ஹேய் நீ...நீதானே அன்னைக்கு பீச்சில என் மேல சோஸை விசிறியடிச்சது...??.."

"பரவாயில்லையே பயபுள்ள கரெக்டா கண்டுபிடிச்சுட்டானே....ஆனாலும் அந்த சோஸ் மேட்டரை மட்டும் விடுறானு பாரு..."என்று அவனுக்கு எதிரில் நின்றவாறே மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பவி...ஆனாலும் வெளியில் தனக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமே இல்லாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு...

"ஹலோ மிஸ்டர்,எனக்கு உங்களைப் பார்த்ததாவே ஞாபகமில்லை...இதில நான் உங்க மேல சோஸை விசிறியடிச்சனா...??...குட் ஜோக்..."

"ஹேய் முட்டைக்கண்ணி...உனக்கு என்னை ஞாபகமில்லையா..??யாருகிட்ட கதைவிடுற,அன்னைக்கு என்கிட்டயிருந்து தப்பிச்சிட்ட..இன்னைக்கு உன்னை என்ன பண்றன் பாரு..."

"இதோ பார்றா...ஏதோ அன்னைக்குத் தெரியாம உங்க சேர்ட்ல சோஸ் பட்டிடுத்து...அதை இப்போ வரைக்குமா ஞாபகம் வைச்சு பழி தீர்ப்பீங்க...??.."என்று கொஞ்சம் நக்கலாகவே கேட்டாள் பவி...

அது அவனுக்குள் இன்னும் கோபத்தை மிகைப்படுத்த,

"அன்னைக்குத்தான் பண்ண வேலைக்கு ஒரு சொரி கூட கேட்கலை...இன்னைக்காச்சும் அடங்கிப் பேசுறாளா பாரு..."என்று சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டான் அவன்...

"நான் எதுக்கு மன்னிப்பு கேட்கனும்..??எதிரில் வாறவங்களையும் கொஞ்சம் பார்த்து வந்திருக்கனும்....காதில போன் இருந்தா முன்னாடி வாறவங்களைக் கூடவா தெரியாது...??..."என்று அவளும் பதிலிற்கு பதில் என்று வாயடித்துக் கொண்டிருந்தாள்...

உண்மையிலையே அன்று சொல்ல முடியாமல் போன சொரியை இன்று கேட்டு விடலாம் என்றுதான் நினைத்தாள்...ஆனால் அவள் அதற்காக வாயைத் திறக்கும் முன்னே அவன் பொரியத் தொடங்கியதில்,அவளது சுயமரியாதையை விட்டுக் கொடுக்க அவளுக்கும் மனம் இடமளிக்கவில்லை...

"திமிரு பிடிச்சவ.."என்று இந்த முறை நேரடியாகவே அவளைச் சாடினான் அர்ஜீன்...

அன்று அவனுக்குப் பிடித்தமான வெள்ளை நிறச் சேர்ட்டை நாசம் பண்ணியதுமில்லாமல்...இன்றும் அவன் மேல்தான் தவறு என்ற விதத்தில் அவள் பேசிக் கொண்டிருந்ததில் அவன் மேலும் கடுப்பாகிவிட்டான்....அவன் ஒன்றும் இப்படிப் பெண்களோடு பதிலுக்குப் பதில் என்று சண்டை போடுபவன் இல்லை...ஆனால் ஏனோ தெரியவில்லை...அவளோடு மட்டும் அவனது வாக்குவாதம் முடிவின்றித் தொடர்ந்து கொண்டேயிருந்தது...

"ஆமா திமிரு பிடிச்சவதான்...அதுக்கு இப்போ என்னாங்குறீங்க...??.."என்று அவளும் நேரடியாகவே மல்லுக்கு நின்றாள்...

"ஆஆ...அன்னைக்கு என் சேர்ட்டை அழுக்கு பண்ண ல...இன்னைக்கு உன்னை என்ன பண்றன் பாரு..."என்றவாறே அவன் எதையோ தேடுவதைப் போல் தேடவும்,அவள் கிடைத்த அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டாள்...

அவள் அங்கிருந்து நகர முற்பட்டதைக் கண்டு விட்ட அர்ஜீன்,

"ஹேய் நில்லுடி..."என்றவாறே அவளது கரத்தினை இழுத்துப் பிடித்துக் கொண்டான்...

அவ்வளவுதான் பவி கொதித்து எழுந்துவிட்டாள்...

"இந்த டி போடுற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம்..."என்று கொஞ்சம் மிரட்டலாகவே சொன்னவள்,கையை அவனிடத்திலிருந்து உருவிக் கொண்டாள்...

"அப்போ "டா" போட்டா ஓகேயா மேடத்துக்கு...??..."என்று அவன் நக்கல் சிரிப்போடு கேட்கவும்,

"என்ன சேர் சும்மா போயிட்டிருந்த பொண்ணை மறிச்சு வம்பு பண்றீங்களா...??..."

"ஆமா நீ என் மாமன் பொண்ணு பாரு...உன்கிட்ட வம்பு பண்றதுக்கு..."என்றவாறே அவளுக்கு நெருக்கமாய் காலடிகளை நகர்த்தியவன்,அவளின் நேர் கொண்ட பார்வையில் தன்னை மறந்து அவளையே பார்க்கத் தொடங்கினான்...

இருவருமே ஏதோ மாய வலைக்குள் கட்டுண்டவர்களாய் விழிகளோடு மொழிகளை மோதவிட்டுக் கொண்டிருந்த வேளையில் துளசியின் குரல் கேட்டே இருவரும் விழிகளுக்கு ஒய்வு கொடுத்துக் கொண்டார்கள்...ஆனால் பவியை மட்டும் அந்த நொடியில் பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது..

"ஹேய் பவி...உன்னை நான் எங்கையெல்லாம் தேடுறது...இங்க என்ன பண்ணிட்டிருக்க...??"என்றவாறே பவியின் அருகில் வந்தவள் அப்போதுதான் அர்ஜீனும் அங்கே நிற்பதைக் கண்டு கொண்டாள்...

"ஹைய்யோ இவள் இப்போதான் இங்க வரனுமா...??..இவன் வேற ஏதாவது உளறி வைச்சிட்டான்னா காரியமே கெட்டிடுமே..."என்று உள்ளூர பதறத் தொடங்கினாள் பவி...

நேற்று இரவுதான் வந்திறங்கியவள்,காலையில் திருமண மண்டபத்தில்தான் துளசியையே சந்தித்திருந்தாள்....இன்னும் அவள் அரவிந்தனுடனேயே அறிமுகமாகிக் கொள்ளவில்லை...இதில் அரவிந்தனின் தம்பிதான் அர்ஜீன் என்பதை அவள் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லைதானே..

"அட அர்ஜீன் நீங்களும் இங்கதான் இருக்கீங்களா...??...உங்க இரண்டு பேருக்கும் முன்னாடியே பழக்கமிருக்கா...??.."

"என்னடா நடக்குது இங்க....??.."என்று புரியாமல் வெகுவாக குழம்பிப் போனாள் பவி...

"ஆமா அண்ணி...முதல்ல ஒரு தடவை இரண்டு பேரும் சந்திச்சிருக்கோம்...அதான் சும்மா பேசிட்டிருந்தோம்...."என்றவாறே ஓரக்கண்ணால் பவியை நோட்டமிட்டவன்,அவளது முகத்தில் படர்ந்திருந்த குழப்ப ரேகைகளைக் கண்டதும் அவனது முகத்திலும் சிந்தனையின் சாயல் அடிக்கத் தொடங்கியது...

"எது அண்ணியா...??..."என்று அவளுள் எழுந்த அதிர்ச்சியில் மனதிற்குள் சொல்வதாய் நினைத்துக் கொண்டு வாய்விட்டே அதைச் சொல்லிவிட்டாள் பவி...உளறியது புரிந்து அவள் அதைச் சமாளிக்கும் முன்னே துளசி அவளை முந்திவிட்டாள்...

"ஆமா இப்போ எதுக்கு நீ இப்படியொரு ரியாக்சன் கொடுக்கிற...??..."என்று ஓர்வித சந்தேகப் பார்வையோடே கேட்டாள் துளசி...

"இவ எதுக்கு நான் அண்ணின்னு கூப்பிடதுக்கு இப்படி அதிர்ச்சிப் பார்வை பார்க்குறா...??"என்று அர்ஜீனும் அதையேதான் அப்போது மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தான்...

"ஒருவேளை அன்னைக்கு நாம துளசியைப் பார்த்ததை இவ பார்த்திருப்பாளோ...??...அன்னைக்கு இவளும்தானே அங்கே வந்திருந்தா..."என்று அவன் சிந்தைக்குள் மூழ்கித் தவித்துக் கொண்டிருக்கவும்,பவி என்ன சொல்லி துளசியை சமாளிப்பதென்று புரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்...

"அது ஒன்னுமில்லை துளசி....நாம எல்லாம் இப்போ ஒன்னுக்குள்ள ஒன்னா ஆகிட்டமே என்டு நினைச்சனா....அந்த சந்தோசத்தைத்தான் எப்படி வெளிப்படுத்துறன்னு தெரியாம இப்படியொரு ரியாக்சன்..."என்று சம்பந்தமேயில்லாமல் உளறினாள் பவி...

"ஏன்டி...காலையில பார்க்கும் போது நல்லாத்தானே இருந்த.....??.."என்று அவள் பவியை மேலும் கீழுமாய் நோட்டமிட ஆரம்பிக்கவும்,அவள் வேறு எதுவும் கேட்டுவிடும் முன்பே இந்தமுறை தானே முந்திக் கொண்டாள் பவி...

"என்னை அப்புறமா ஆறுதலா ஆராய்ச்சி பண்ணிக்கோ....இப்போ வா நாம ஸ்வேதாவை போய் பார்க்கலாம்..."

அவள் ஸ்வேதாவின் பெயரை எடுத்ததுமே துளசியும் அப்போதைக்கு பவியை ஆராய்வதை ஒத்தி வைத்துக் கொண்டாள்,

"ஆமாம்மா....சீக்கிரமா வா...அவ உன்னைக் கூட்டி வர என்னை அனுப்பினதையே மறந்து போய் பேசிட்டிருக்கேன் பாரு..."என்றவள்...அர்ஜீனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு பவியை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு சென்றாள்...

துளசி வேண்டுமானால் அதை அப்படியே விட்டிருக்கலாம்...ஆனால் பவியின் உளறலையும்,அவள் முகம் காட்டிய பாவனைகளையும் மிகச் சரியாகக் கணித்துவிட்ட அர்ஜீனால் அதை அப்படியே விட்டுவிட முடியவில்லை...பவி செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவனின் மனது "எந்தக் குழப்பமும் வந்துவிடக் கூடாது.."என்று வேண்டிக் கொண்டது...


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (27-Jan-18, 10:14 pm)
பார்வை : 536

மேலே