நாடே இது உன் நிலையோ இல்லை என் நிலையோ
காவல் , நீதி, அரசியலெனும் அதிகார பீடத்திலே
புகுந்தனரே சில மூடர்கள்!
விரல் நுனியில் அதை வைத்து
ஆடுகின்றனரே ஆட்டம்!
நாடே நிந்தன் எல்லையில் புகுந்த
இவனை பெரும் தடிகொண்டு விரட்டாது
நின் கொள்ளைப் புறம் புகும்வரை
நீ யென் செய்திருந்தாய்!
நாடே! நிந்தன் மேனியில் மேவி
செல்லரிக்கும் கரையானை
நீ யென் செய்யப் போகிறாய்!
பாலாறும் தேனாறும் ஓடிய நின் திருமேனியில்
இன்று எம்மங்கையரின் நுதலில்
இடும் குங்குமமும், செங்கயலில் பெருக்கெடுத்தோடும் செந்நீரும்
இரண்டறக் கலந்த கலவையாய் மதுவென
ஓடச் செய்தனரே இம்மூடர்கள்!
தோழா! நீ வாடா!
பெருந்திரளென தோள் உயர்த்தி வாடா!
பெரும் வீரத் திருமகளை
படையெனத் திரட்டி வாடா!
விசும்பும் அதிர்ந்திட
வீறெழுந்து வாடா!
இவனிருந்த இடந் தெரியாது
உருக்குலைந்து செல்லடா!
இவன் மந்திரமும் தந்திரமும் அறிந்திடுவான்
ஒட்டுக்குப் பணமென நின்னை மயக்கிடுவான்
ஒரு நாள் கூற்றுக்கு வலை விரிப்பான்
ஐந்தாண்டுப் பஞ்சப் பேரலையில் நின்னை மூழ்கடிப்பான்!
தோழா! நீ வாடா!
பெரும் எரிமலையென எழுந்து
நீ வாடா!
இவன் மந்திரத்தை தந்திரத்தை உடைத் தெறிந்து
இவனை பாதாள சிறையிலிட்டுச் செல்லடா!
இலவசம்! இலவசம்! இலவசம்! யென கூவிடுவான்
நின்னை ஆட்டுமந்தையென இவ்வசியச் சொல்லில் சேர்த்திடுவான்!
திட்டம் ஒன்றை தீட்டிடுவான்
இருகை கூப்பி நின்னை யாசித்திடச் செய்திடுவான்!
இரண்டொன்று வீசிடுவான்
மீதத்தில் அவன் கொளுத்திடுவான்!
உணவுக்கும், உறைவிடத்திற்கும், வேலைக்கும்
நின்னை பாலையிலே உலாவிடச் செய்திடுவான்!
நின்னை ஊன் குலைந்து உருக்குலைந்து தோல் சுருக்கி
ஒற்றடமாக்கிச் சிரிப்பான்!
தோழா! இவன் செல்லும் இடமெல்லாம்
வீர் கொண்டு நடை போடடா!
இவன் இதைச் சொல்லும் முன்னே
குரலறுத்து வீழ்த்தடா!
முன்னே நாட்டுக்கே உணவளித்தான் உழவன்!
இன்றோ இவன் வீட்டிற்கே உணவில்லை யென்றாக்கிட்டான் இந்த மூடன்!
முன்னே ஊருக்கே பொருளள்ளி தந்தான் உழவன்
இன்றோ இவன் பொருளுக்கு கையேந்தம் நிலை செய்தான் இந்த மூடன்!
முன்னே உயர் மதிப்பெற்று திகழ்ந்தான் உழவன்
இன்றோ புல்லர்கள் சிரித்திடும் நிலை செய்தான் இந்த மூடன்!
தன் விளைச்சலுக்கு அறுவடை கூலித் தரவியலாமல்
அந்த விளைச்சலிலே தன் மூர்சை அறுவடை செய்திடுவான்!
இதைக் கண்டும் காணாமல் சென்றிடுவான் இந்த மூடன்!
உழவா! என் முன்னோர் கற்பித்தக் கலை
நின்னோடு அழியாமல்
இம்மூடர்க் கூட்டத்தை மிதித்தேறி
அரசியலில் உன் காலை நட வா!
பூவுலகம் பூஞ்சோலையென குலுங்கிட
இதில் நீ உழ வா!
மருத்துவம், கல்வியை விபச்சார விடுதியிலே விற்றிடுவான்!
உழவும் நிலங்களையும், ஆற்று நீரினையும் கார்ப்ரேட் முதலாளியிடம் தாரை வார்த்திடுவான்!
உழவுக்கு நீர் கேட்டால் வெறும் கை நீட்டிடுவான்!
இதில் கிடைத்ததை இவன் உலாவ சிலத் தீவுகளை வாங்கிடுவான்!
எம்மக்கள் ஆடையின்றி தெருக்களிலே ஈக்களோடு ஈக்களாக உலாவிட
இவனோ வெண்ணிறாடை நிறம் குன்றாமல் காரிலே பவனி வருவான்!
நாடே! இது உன் நிலையோ!
இல்லை என்னிலையோ!
இல்லை இம்மூடனுக்கு கிடைத்த வாழ்வு நிலையோ! நீ அறிவாய்!
தோழா! புரட்சியும் புதிதில்லை!
போராட்டமும் புதிதில்லை!
போர்க்களமும் புதிதில்லை நமக்கு!
இவனை மீட்சியற்று வீழ்த்திட
புத்தம் புது போராட்டமும் புரட்சியும் எழ
புத்தம் புது ரத்தம் பாய்ந்த அக்னிக் குஞ்சாக நீ பறந்து வாடா!
கைக்கட்டி வாய் பொத்தி வாழ்ந்தது போதுமடா
நிந்தன் கைகளேயே சிரகாக்கி
அக்னிக் குஞ்சாக நீ பறந்து வாடா!
அக்கினிக் குஞ்சொன்று பறக்கக் கண்டேன்
அது சில மூடர்களை வெந்தழலில் வீழ்த்தக் கண்டேன்
எம்மங்கையரின் நுதனிலே அது இருக்கக் கண்டேன்
மனதில் கருமை இருள் புகுந்த முடவர்களை அது எரிக்கக் கண்டேன்!
இளம் காளையர்களை கல்வியறிவில் அது தீட்டக் கண்டேன்!
இந்த ஞாலமெங்கும் இதனொளியில் பிரகாசிக்கக் கண்டேன்!
தோழா! நீ வாடா! இந்த
அக்கினிக் குஞ்சைக் காத்திட வாடா!
ஆகவே! காவல், நீதி, அரசியல் இனி
இவ்வக்கினிக் குஞ்சுகளில் சுதந்திரமாய் பறக்கட்டும்!
புத்தம் புது தேசம் பிறக்கட்டும்!
ஆக்கம்
இத்தேசத்தில் வெந்தழலென எரிந்துக் கொண்டிருக்கும் தீப்பொறிகளில் ஓர் பொறி
-- ச. செந்தில் குமார்