ஓன்று கூடி எழுந்திடு ஒரு சேர பறந்திடு

தமிழா தமிழா

நுனி நாக்கில்
ஆங்கிலம் நுழைத்து
தமிழ் தொலைத்த
இத்தலைமுறை நாக்குகள்
அடுத்த தலைமுறை
குழந்தைக்கு அழகாய்
அழகு தமிழ்
ஊட்டிட வேண்டும்

நம் அழகு தமிழ்
நம் தாயின்
தாய்ப்பால் என்றும்
ஆங்கிலம் தேவைப்பட்டால்
குடித்துக்கொள்ளும்
புட்டிபால் என்றும்
புரிந்து கொண்டிட வேண்டும்
தீரா தாய்ப்பாலாய் திகட்டா தமிழிருக்க
மூச்சு முட்ட புட்டிப்பாலை அடைத்திடும்
மூடத்தனத்திலிருந்து பெற்றோர்கள்
வெளீயே வந்திட வேண்டும்

தலைவா தலைவா
என் தலைவன் என்று
தரம் தாழ்ந்து
சிரம் தாழ்த்தி
சினிமா காரர்களுக்கு
கொடி பிடிப்பதை
கொஞ்சம் நிறுத்திவிட்டு
உண்மையான தலைவர்களை
நம்மவர்களுக்குள்ளும்
தனக்குள்ளும் தேட
தொடங்க வேண்டும் எம்
தமிழனின் விழிகள்

தமிழன் தமிழால்
இணைந்திட வேண்டும்
தமிழன் அறிவால்
இணைந்திட வேண்டும்
தமிழன் அன்பால்
இணைந்திட வேண்டும்

ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல
என் விவசாயிக்கும்
குரல் கொடு தமிழா

வலைக்குள் தமிழன்
வழியறியா தமிழன்
தீவனத்துக்கு ஆசைப்பட்டு
மாட்டிய புறாக்கூட்டமாய்
தமிழ் மக்கள்
வலைக்குள் மக்கள்
விழிபிதுங்கிய தமிழன்

ஓன்று கூடி எழுந்திடு
ஒரு சேர பறந்திடு
ஒரு ஊராய் அல்ல
ஒரு சாராரை அல்ல
ஒரு மதமாய் அல்ல
ஒரு இதயமாய் எழுந்திடு
ஒரு இனமாய் எழுந்திடு
தமிழ் இனமாய் எழுந்திடு

ஓன்று கூடி எழுந்திடு
ஒரு சேர பறந்திடு


தமிழா தமிழா
நாளை மட்டுமல்ல
இன்றும் நம் நாளே

எழுதியவர் : யாழினி வளன் (28-Jan-18, 7:50 pm)
பார்வை : 324

மேலே