கண்ட நாள் முதலாய்-பகுதி-42

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 42

ஸ்வேதாவிற்கான அலங்காரங்களை துளசியும் பவியும் செய்து முடிக்க,அழகோவியமாக ஒளிர்ந்து கொண்டிருந்தாள் ஸ்வேதா...ஆபரணங்களோடு மணமகளுக்குரிய வெட்கமும் அவளைச் சூழ்ந்து கொண்டிருந்ததில் அவள் இன்னும் அழகாகத் தெரிந்தாள்....

"நான் மட்டும் ஆணா பிறந்திருந்தேன்னு வைய்யு...இந் நேரத்துக்கு உன்னைத் தூக்கிட்டுப் போய் தாலி கட்டியிருப்பேன்...அவ்வளவு அழகாய் இருக்கடி ஸ்வி.."என்றவாறே அவளுக்கு திருஷ்டி கழித்தாள் பவி...

"சும்மா போடி..."என்று ஸ்வேதா வெட்கப்பட்டுச் சிரிக்க,

"அட அட அட...நம்ம ஸ்வேதாவா இது...??என்று ஆச்சரியப்படுவது போல் பாவனை செய்தவள்...

"..அது எப்படித்தான் வெட்கம்னாலே என்ன விலைன்னு கேட்குற பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் என்டு வரும் போது மட்டும் வெட்கத்தில அப்படியே ஜொலி ஜொலிக்குறாங்களோ...??..."என்று ஏதோ அறிவியலை ஆராய்வது போல் மூளையைத் தட்டி யோசித்தாள் பவி...

அவளது அந்தச் செய்கையைக் கண்டு ஸ்வேதாவும் துளசியும் ஒருசேரச் சிரிக்கத் தொடங்க...அவர்களிருவரையும் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்தாள் பவி...

"இப்போ எதுக்குடி முறைக்குற...??...நீயும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ...உன் கேள்விக்கான பதில் அப்போ கிடைக்கும்..."என்று ஸ்வேதா சொல்லி முடிக்கவும்,பவியைப் பார்த்து கண்ணடித்தவாறே பாடத் தொடங்கினாள் துளசி...

"...யாரோ யாரோடி உன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்..."

அவளோடு ஸ்வேதாவும் இணைந்து கொள்ள...வழமையாக எல்லோரையும் கேலி செய்து வம்பிழுப்பவள்,அந்தப் பாட்டில் தன்னை மறந்து நின்றாள்....அந்த அரசன் யாரென்று அவள் அதிகம் யோசிக்க வேண்டிய தேவையிருக்கவில்லை...அவளது விழிக்களுக்குள் "..திமிரு பிடிச்சவ.."என்று அவளை நேரடியாகவே சாடிய அந்த அரசன் புன்னகையோடு வந்து நின்றான்...

அருகில் இருவர் இருப்பதையே மறந்து தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டிருந்தவளை,துளசியும் ஸ்வேதாவும் விசித்திரமாகப் பார்த்தார்கள்...இப்படியான பவியை அவர்கள் இருவருமே இதுவரையில் கண்டதில்லை...அவர்கள் இருவருமே ஏதோ புரிந்து கொண்டவர்களாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டவர்கள்...பவியை கனவுலகில் இருந்து நிகழ் உலகிற்கு அழைத்து வந்தார்கள்...

"ம்க்கும்...ம்க்கும்..."என்று இருவருமே ஒரு சேர இருமிக் கொண்டவர்கள்,அவள் அதே புன்னகையோடே அவர்களைத் திரும்பிப் பார்க்கவும்..

"...அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படிச் சொல்வேனடி

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படிச் சொல்வேனடி..."என்று ஒருமித்த குரலில் அவளை ஓட்டத் தொடங்கினார்கள்...

"என்ன பவி இப்போ இந்தப் பாட்டுத்தான் உன் மனசில ஓடிட்டு இருக்கு போல..??..."என்று துளசி புருவத்தை உயர்த்தி கேலிச் சிரிப்போடு கேட்டவள்,

"நீங்க எப்படிச் சொன்னாலும் நாங்க கேட்டுக்குவோம்...வெட்கப்படாம சொல்லுங்க மேடம்...?என்று அவளை இருவருமாய் சேர்ந்து ஒரு வழி பண்ணத் தொடங்கினார்கள்...

உள்ளே அவர்களது கேலியை ரசித்தாலும் வெளியே பொய்யாக கோபத்தைக் காட்டினாள் பவி...

"உங்க இரண்டு பேருக்கும் இப்போ என்னதான் வேணும்...??ஏன்டி இன்னைக்கு கல்யாணப் பொண்ணு நானா...இல்லை அவளா...??அவளை விட்டிட்டு என்னை ஓட்டுற...??..."என்று கதையை ஸ்வேதாவின் பக்கம் திசை திருப்ப முயன்றாள் பவி...ஆனால் அவர்களாவது அவளை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதாவது...?

"எனக்கென்னமோ கல்யாணப் பொண்ணை விட மேடம்தான் காதல் கனவில மிதக்குற மாதிரி இருக்கே..."என்று பவியை மேலும் கீழுமாய் பார்த்தவள்,

"மாப்பிள்ளை உள்ளூரா...??...இல்லை வெளியூரா...??.."என்று அவளைப் பார்த்துக் கண்ணடிக்கவும் செய்தாள்துளசி..

அந்த நேரத்தில் கூட பவியின் மனதில் அர்ஜீன்தான் வந்து நின்று கண்ணடித்துக் கொண்டிருந்தான்...

"ஹைய்யோ இவன் வேற இப்போதான் வரனுமா...??இது என்ன பவிக்கு வந்த சோதனை..."என்று மனதிற்குள்ளேயே தன் நிலைமையை எண்ணி நொந்து கொண்டவள்...அப்போதைக்கு அர்ஜீனின் நினைவுகளைத் தள்ளி வைத்துவிட்டு,

"முதல்ல ஸ்வியோட கல்யாணம் முடியட்டும்...அதுக்குப்புறமா இரண்டு பேரும் உங்க ஜோடிகளோட சேர்ந்து எனக்கு ஜோடியைப் பார்க்குற வேலையைப் பாருங்க....இப்போ ஆளை விடுங்க..."என்று அவர்களுக்கு பெரிய கும்பிடு போட்டவள்,அவர்கள் பேச வாய் திறக்கும் முன்னே அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்...ஆனாலும் அவள் பின்னாலேயே "அப்போ நீ இன்னும் பார்க்கல..??.."என்ற அவர்களின் கேள்வியும்,இருவரதும் சிரிப்புச் சத்தமும் பெரிதாகவே கேட்டது...

அங்கிருந்து ஒரு வழியாகத் தப்பி வந்தவள் அர்ஜீனும் அங்கே வந்து கொண்டிருப்பதைக் கண்டதும்,இருவரும் தனிமையில் பேசுவதற்கு ஏதுவான இடமாகப் பார்த்துப் போய் நின்று கொண்டாள்...அவள் வந்த சிறிது நேரத்திலேயே பின்னோடே வந்து நின்றான் அர்ஜீன்...அவன் அவளைக் கண்டதும்தானே அவள் அவ்விடத்தை தேடி வந்ததே..??அவளுக்குத் தெரியும் அவளிடம் கேட்க வேண்டியது அவனிடம் நிறைய உள்ளதென்று...அதே போல் அவனிடம் அவள் சொல்ல வேண்டியதும் நிறைய உள்ளதே...

"என்கிட்ட என்ன கேட்கனுமோ,அதை இப்போ கேட்கலாம் அர்ஜீன்..??.."என்று கேட்டவளின் பார்வை நேர் கொண்டதாக இருந்தது...

அவளது நேரடிக் கேள்வியில் முதலில் கொஞ்சம் தடுமாறிப் போனவன்,பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டு அவளோடு பேசத் தொடங்கினான்...

"அப்போ நான் என்ன கேட்கப் போறேன்னு உங்களுக்குத் தெரியும்...??..."

"ம்ம்...தெரியாமலா இப்படி உங்க கூட தனியா பேச வந்திருக்கேன்...உங்க மனசில என்ன ஓடிட்டு இருக்கென்டு எனக்குத் தெரியும் அர்ஜீன்...ஆனால் நீங்களா எதையும் கேட்காம நானா எதுவும் சொல்லப் போறதில்லை...."

அவளது அந்த நிமிர்வான பேச்சு அவனுக்குப் பிடித்திருந்தது...அது அவனை அவள் பக்கமாய் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது...உதட்டோரமாய் புன்முறுவலொன்று வந்து செல்ல,அவன் அனைத்தையும் அவளிடம் தெளிவுபடுத்தும் வேலையில் இறங்கினான்...

ஆரம்பிக்கும் முன்னர் பெரிய பெருமூச்சொன்றை வெளியேற்றிக் கொண்டவன்,அன்றைய நாளின் நினைவுகளை வேதனையோடு எண்ணிக் கொண்டவாறே அவளிடம் ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல்லத் தொடங்கினான்...

"அன்னைக்கு பீச்சிலதான் துளசியை முதன்முதல்ல பார்த்தேன்....பார்த்ததுமே ஏன் என்டே தெரியாம அவங்களை பிடிச்சுப் போச்சு...அது ஒரு வித்தியாசமான உணர்வு...அந்த உணர்வு துளசியைப் பார்க்குற வரைக்கும் வேறெந்தப் பொண்ணுங்க மேலையும் எனக்கு ஏற்பட்டதில்லை....பார்த்த அந்த நொடியிலேயே ஒருத்தங்களால நம்ம மனசைக் கொள்ளையடிக்க முடியுமா...??போன்ற ஆச்சரியமான சில கேள்விகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி அன்னைக்கு எனக்கு அந்த விநாடியில துளசி மேல காதல் வந்திச்சு...."என்று சொல்லி நிறுத்தியவன்...அவனுக்கு அவனே சிறு இடைவெளி கொடுத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தான்...

"ஆனால்...ஆனால் அந்தக் காதலோட ஆயுள் கொஞ்சக் காலம்தான்னு அப்போ எனக்குத் தெரியல...அன்னைக்குப் பார்த்தவங்களை சில நாட்கள் கழிச்சு மறுபடியும் பார்த்தேன்.. ஆனால் என்னோட காதலியா இல்லாம மணமேடையில என் அண்ணனோட மனைவியாப் பார்த்தேன்..."என்றவனின் குரல் அன்றைய நாளின் நினைவில் கலங்கியது...அதற்கு மேலும் பேச முடியாமல் சிறிது நேரத்திற்கு கண்களை மூடி மௌனமாகவே நின்றான்..

என்னதான் அவளது நினைவுகளை மறந்து நிகழ்காலத்தை அவன் புன்னகையோடு ஏற்றுக் கொண்டிருந்தாலும்....அதை மீண்டும் மீட்டிப் பார்க்கையில் மனதினோரமாய் அவனுக்கு வலிக்கத்தான் செய்தது...முதல் காதல் அவ்வளவு எளிதில் மனதை விட்டு அகன்று விடுவதில்லையே...??இதில் அவன் மட்டும் விதிவிலக்காகவா இருக்க முடியும்..??

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று முதலே பவி அறிந்திருந்தாலும்...அவனது வாய் மூலமாகவே மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டதில் அவளின் உள்ளம் சொல்ல முடியாத வலியில் சிக்கித் தவித்தது...அன்று கண்டவுடனே காதல் கொண்டது அவன் மட்டுமில்லையே...அவளும்தான் என்ற உண்மையில் அவள் மனம் கலங்கித் தவித்தது...

அன்றைய அவனுடனானா முதல் சந்திப்பு மோதலில் தொடங்கியிருந்தாலும்,அவனது கம்பீரமான வசீகரத்திலும்,அவனது விழிகள் காட்டிய கோபத்திலும் அவள் அவன் பக்கமாய் அந்த நொடியிலேயே விழுந்து விட்டாள்...காதலில் நம்பிக்கையற்றவள் முதல் பார்வையிலேயே அவன் மேல் காதல் வயப்பட்டு நின்றாள்...அதன் பின் அவனையே அவளது பார்வை தொடர்ந்த போதுதான் அவனது விழிகள் காதலோடு துளசியை வருடிக் கொண்டிருந்ததையும் வேதனையோடு கண்டு கொண்டாள்...

அவனது காதல் சொல்லாமலே அவனுக்குள்ளேயே முடிந்து போனதென்றால்...அவளது காதல் அவனிடம் சொல்லத் துடிக்கின்ற தவிப்போடே மனதிற்குள் புதைந்து போய் கிடக்கின்றது...அன்று துளசியினை அவனது பார்வை காதலோடு தொடர்வதை கண்டு கொண்ட மறு நொடியே பவி தனது காதல் அத்தியாயத்திற்கு மனதிற்குள்ளேயே வலியோடு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டாள்..

ஆனாலும் என்னதான் அவள் அவனை மறந்து விட நினைத்தாலும் அவளால் இத்தனை நாட்களாகியும் அவனுடனான அந்த சில நிமிட நினைவுகளையும்,அவனையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியவில்லையென்பதே உண்மை...அன்று கண்டனை மீண்டும் காணுவாளென்று அவள் கனவிலும் நினைத்ததில்லை...அதிலும் இப்படியொரு சூழலில் அவர்களது சந்திப்பு மறுபடியும் அமையுமென்றும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை...

அவனுடனான ஒவ்வொரு சந்திப்பும் மோதலில் ஆரம்பமாகிக் கொண்டாலும்...அவள் மனம் என்னவோ காதலில்தான் விழுந்து கொள்கின்றது...இவ்வளவு நாட்களாய் அவளுள் புதைந்து கிடந்த காதல்,இன்று மீண்டும் அவனைக் கண்டதில் இருந்து உயிர்த்தெழுந்து அவளைப் பாடாய்ப் படுத்தத் தொடங்கியிருந்தது...

தன் காதலுக்குரியவனின் மனதில் இன்னொருத்தி இருந்திருக்கிறாள் என்ற இறந்த காலத்தையே எந்தவொரு பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில்,

அவனது காதலை நேரடியாகக் கண்டதோடு மட்டுமன்றி...இன்று அவன் மூலமாகவே அதை மீண்டும் கேட்டுக் கொள்வது போன்ற கொடுமை என்னோடே முடிந்து போகட்டுமென்று,அந்த நொடியில் நினைத்துக் கொண்டாள் பவி...

ஆனாலும் அவளின் அந்த வலி அனைத்தினையும் விட,அப்போது அவள் முன்னே அவளின் காதலுக்குரியவன் கலங்கி நிற்பதுதான் அவள் மனதை இன்னும் அதிகமாய் பாதித்தது...அவளை விடவும் அவனல்லவா அவளிற்கு முக்கியம்...??

அவனின் அத்தனை வலிகளையும் தன் மடி தாங்கி துடைத்துவிடத்தான் அவளுக்கும் ஆசை...ஆனால் அது எதுவும் அப்போதைக்கு முடியாதென்ற காரணத்தினால் அவனது கரத்தினை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்...தன் கரத்தாலேயே அழுத்தம் கொடுத்து விழிகளாலேயே அவனைத் தேற்றத் தொடங்கினாள் பவி...

அந்த நேரத்தில் அர்ஜீனிற்கு ஆதரவாய் பவி நின்றாள்...ஆனால் அங்கே வாசலின் மறைவிடத்தில் எதை எல்லாம் கேட்கக் கூடாதோ அதை எல்லாம் கேட்டு விட்டு பிரம்மை பிடித்தவன் போல் நின்ற அரவிந்தனுக்கு ஆதரவாகத்தான் யாருமே இல்லாமல் போய்விட்டார்கள்...

கீழே மணமகன் வந்த பின்னும் அர்ஜீனைக் காணாமல் தேடிக் கொண்டே மேலே வந்தவன்,உறவுக்காரச் சிறுவன் ஒருவன் காட்டிய திசையில் அவன் இருக்கிறானா??என்று பார்த்துக் கொண்டே வந்தான்...வந்தவன் துளசியின் பெயர் காதில் விழவும் அப்படியே நின்று விட்டான்...

காதில் விழுந்த வார்த்தைகள் அத்தனையும் அவன் மனதை இடியாய் தாக்க...ஒட்டு மொத்தமாய் ஓங்கி எழுந்த வலிகள் அனைத்தும் அவன் நெஞ்சை அடைக்கத் தொடங்கியது...

அர்ஜீனின் வாய் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனுள் வேதனையைக் கிளறிவிட...என்ன நடக்கிறதென்றே புரியாமல் சிறிது நேரம் அருகேயிருந்த சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றவன்,அதற்கு மேலும் எதையும் கேட்கும் சக்தியில்லாமல் படிகளில் இறங்கத் தொடங்கினான்...

ஆனால் அவன் எதையெல்லாம் இனிக் கேட்டிருக்க வேண்டுமோ அதை எல்லாம் கேட்காமலேயே சென்றுவிட்டான்...ஒரு வேளை அவர்கள் அதன் பின்பு கதைத்தவற்றைக் கேட்டிருந்தால் பின் நாட்களில் ஏற்படப் போகும் மனக்கசப்புகளை தவிர்த்திருக்கலாம்...ஆனால் காலம் அவ்வளவு எளிதில் எதையும் முடித்துக் கொள்ள விடுவதில்லையே....

புன்னகையை வரவேற்க காத்திருந்த அந்த மூன்று உள்ளங்களும் வெவ்வேறான மனநிலைகளோடு கலங்கி நின்றன...இனிக் காலம்தான் அவர்கள் வாழ்வில் கண்ணீரா இல்லை புன்னகையா என்ற பதிலைச் சொல்ல வேண்டும்...


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (31-Jan-18, 9:42 am)
பார்வை : 636

மேலே