கூலிக்காரன் மவனுக்கு படிப்பு எதுக்கு

அப்பா என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் விசு.
" வாப்பா தம்பி. பிரயாணமெல்லாம் பரவாலயா" என்று கேட்டுக் கொண்டே பெட்டியை வாங்கினார் தந்தை.

"பரவால்லப்பா, நல்லா தான் இருந்துச்சு" என்று சொல்லிக் கொண்டே சமையலறை நோக்கி நகர்ந்து சென்றான் விசு. " வாடா விசு. சீக்கிரம் போயி கை கால் ‌கழுவிட்டு வா. சாப்பிடலாம்" என்று கூறி உணவு பாத்திரங்களை தயார் செய்தார் விசுவின் அம்மா.


அனைவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்த போது மெல்ல தயங்கியபடி பேச்சை‌ ஆரம்பித்தார் விசுவின் அப்பா," ஏப்பா விசு, பரிச்சைக்கு பணம் கட்டணமுனு சொன்னியேப்பா. எவ்வளவு வேணும்பா" என்று கேட்டார்.

" 80ரூவா கட்டணமுனு
முன்னாடியே சொன்னானே. சாப்புடும் போது தான் பையன்கிட்ட கேட்கனுமோ?" என்று கணவனை‌ கடிந்து கொண்டு விசுவிற்கு சாப்பாடு பரிமாறினாள் பாக்கியம்.


"நம்ம சொந்தகாரங்க,ஊருல‌ இருக்கற எல்லா பண்ணையகாரங்க கிட்டயும் கேட்டுட்டேன். யாரும் பணம் இல்லனு சொல்லிட்டாங்க" என்று சாதத்தை பிசைந்தவாறே தயங்கி தயங்கி விசுவின் அப்பா சொல்ல அவரை‌ முறைத்து கொண்டே‌ இருந்தால் பாக்கியம்.

"பக்கத்து ஊரு மணியக்காரர் கிட்ட பணம் கேட்டுருக்கேன்பா. நாளானிக்கு வந்து பாருன்னு சொன்னாருப்பா. கூலிக்காரன் மவனுக்கு எதுக்குடா‌ வெளியூர் காலேஜில படிப்புனு நம்ம ஊருல பாதிபேரு கேட்டு திட்டினாங்க".
(இதை‌ சொன்ன போது சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அப்பாவின் கண்ணை பார்த்தான் விசு)


" நல்லா படிக்கிற நீ எங்களுக்கு புள்ளையா பொறந்தது நாங்க செஞ்ச பாவம் போல. உன்ன எப்படி படிக்க வைக்க போறனு தெரியல சாமி" என்று வாடிய முகத்துடன் தன் வருத்தத்தை சொல்லி பையைனை பார்த்தார் தந்தை.


பாக்கியம் கோபத்துடன் " என்னங்க இப்போ பேசாம சாப்பிட போறிங்கலா இல்லயா?" என்று கடிந்து கொள்ள, அம்மாவை பார்த்து " ஏம்மா அப்பாவை திட்டுற" என்று கூறி மீண்டும் அப்பாவை பார்த்து புன்னகையுடன் "அப்பா கவலபடாதிங்க. நான் பணம் கட்டிவிட்டேன்" என்று கூறிவிட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான் விசு.


இருவருக்கும் தூக்கிவாரிப்போட்டது. "என்னடா சொல்லுற?. ஏது உனக்கு அவ்வளவு பணம்?" கேட்க "சாப்பிடும் போது பேசாதீங்கனு அப்பாவ திட்டிட்டு என்னைய நீ இப்போ கேள்வி கேக்கறயா?" என்று அம்மாவை பேச்சால் மடக்கினான் விசு.

ஒன்றும் புரியாதவராய் விசுவின் கையை பிடித்தார் அவன் தந்தை.

" அப்பா கவலைபடாதீங்க. நான் உங்க பையன். அந்த பணத்த நான் திருடவும் இல்ல. கடனும் வாங்கல" என்று தந்தையிடம் சொல்லிவிட்டு கைகளை தட்டில் கழுவி விட்டு எழுந்தான் விசு........

" யப்பா விசு. நீ யாரையும் ஏமாத்த மாட்ட, திருட மாட்டனு எங்களுக்கு நல்லா தெரியும்பா. அதனாலதான் என்ன நடந்துருக்குமோ மனசு படபடப்பா இருக்கு" என தந்தை வெளிறிய முகத்துடன் சொல்ல, அவரை புன்னகைத்தவாறே வீட்டின் பின்புறம் சென்றான் விசு.

சிறிது நேரம் கழித்து பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பின்புறம் சென்ற பாக்கியம் விசுவை பார்த்து " ஏன்டா விசு, உண்மைய சொல்லுடா!. ஏதுடா உனக்கு 80ரூவா?. உங்கப்பா மாசம் முழுசும் வேலைக்கு போனா கூடா அவ்வளவு காசு வராதே. ஏதாவது வேலைக்கு போறியா?" என்று கேட்க ஏதும் சொல்லாமல் வீட்டினுள் சென்றான் விசு.

எதுவும் புரியாமல் பாக்கியத்திற்கும் அவள் கணவருக்கும் அன்று இரவு முடிந்தது. காலையில் எழுந்த இருவருக்கும் அதிர்ச்சி. ஊருக்கு புறப்பட தயாராக இருந்தான் விசு.

அவன் தந்தை ஏதும் பேசாமல் இருக்க, "என்னடா நேத்து தானே வந்த! அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட" என்று பாக்கியம் கேட்க "காலேஜ் ஹாஸ்டலுக்கு" என்று ஒற்றை வரியில் பதிலளித்தான் விசு.

அவன் தந்தை ஏதும் பேசாமல் வீட்டின் பின்புறம் செல்ல "என்னடா இப்படி சொல்லுற?, இனி நாங்க காச பத்தி கேட்க மாட்டோம்" என்று கூறினாள் பாக்கியம்.

அலட்டிக்கொள்ளாமல் அமைதியாய் பதில் சொன்னான் விசு.
"அம்மா நேத்துல இருந்து நீயும் அப்பாவும் குழப்பத்தோட இருக்கீங்க. நான் எந்த வேலைக்கும் போகலம்மா. நான் படிச்சுட்டு மட்டும் தான் இருக்கேன்.
காலேஜ் பக்கத்துல ஒரு விபத்து நடந்துச்சு. அதுல அடிப்பட்டவருக்கு ரத்தம் கொடுத்தா பணம் தரேன்னு சொன்னாங்கம்மா. அவருக்கு ரத்தம் கொடுத்தேன். 100ரூவா‌ கொடுத்தாங்க. அதவச்சு 80ரூவா பணத்த கட்டிட்டேன். சாமி படத்துக்கு முன்னாடி 17ரூவா வச்சுருக்கேன். எடுத்துக்கோம்மா" என்று கூறி முடிக்கும் முன்பே அழ ஆரம்பித்தாள் பாக்கியம்.


"அய்யோ கடவுளே. எம்புள்ள ரத்தத்த வித்து படிக்கறானே! உனக்கு இரக்கமே இல்லையா? இதுக்கு தான் இவன இந்த பாவி வயித்துல பொறக்க வச்சியா?" என்று அழுதுகொண்டே புலம்ப, அவளை சமாதனப்படுத்தினான் விசு.


"கூலிக்காரன் மவனுக்கு படிப்பு எதுக்குன்னு எல்லோரும் கேட்குறப்பா, கஷ்டத்த விட எம்புள்ள படிப்பு முக்கியமுனு அப்பா நினைக்கிறாரு. போ(வா)டா நாயே வேலைக்கு என்று சொல்லாம, ரெண்டு பேரும் என்னை படிக்க வைக்க ஆசைப்படுகிறீங்க. உங்களுக்கு புள்ளையா பொறக்க நான் கொடுத்து வச்சுருக்கனும்.அம்மா நீங்களும் அப்பாவும் எனக்கு கிடைச்ச வரம்" என்று சொல்ல ஒன்றும் புரியாதவளாய் கலங்கியபடியே அவன் முகத்தை பார்த்தாள் பாக்கியம்.


தனது கண்களை துடைத்து கொண்டே "இன்னும் ரெண்டு நாளு தங்கிட்டு போடா" என்று பாக்கியம் சொல்ல, "வேலை இருக்குதும்மா" என்று கூறி பெட்டியை தூக்கினான் விசு.

"விசு அப்பா கிட்ட சொல்லிட்டு போப்பா" என்று பாக்கியம் சொல்ல, "அப்பாவோட வாடுன முகத்த என்னால பாக்க முடியாதும்மா! மணியக்காரர் கிட்ட பணம் வேணும்னு அப்பாவை சொல்லிட சொல்லு" என்று சொல்லிட்டு வீட்டின் வெளியே சென்றான் விசு.


பாக்கியம் வேகமாக வீட்டின் பின்புறம் சென்றாள் கணவனை அழைக்க. அங்கே கண்ணீருடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டு அழுதுகொண்டு இருந்தார் விசுவின் தந்தை.

தன் கணவன் முதல் முறையாக அழுவதை கண்ட பாக்கியமும் அவரை பார்த்து அழ, "வக்கத்தவனுக்கு வாரிசா பொறந்துட்டமேனு கவலபடாம, எம்புள்ள ரத்தத்த வித்து படிக்கறான். இத பாத்துகிட்டு கையாலாகாத ஒரு‌ அப்பாவா நான் இன்னும் உசுரோட இருக்கேனேடி பாக்கியம்" என்று சொல்லி அழுத வேலையில், தந்தையின் கஷ்டத்தை நினைத்து பேருந்து நிறுத்தம் நோக்கி கண்ணீருடன் நடந்து கொண்டிருந்தான் விசு.

எழுதியவர் : சேதுபதி விசுவநாதன் (31-Jan-18, 10:04 am)
பார்வை : 403

மேலே