கற்பின் கனலாய் மாதவி

கவின்மதி முகத்தாள் கார்முகில் குழலாள்
கவிழும் குவளை விஞ்சும் விழியாள்
குவிழ்ந்த இதழ்கள் கொவ்வைக் கனிகள்
நவிலும் மொழிகள் நாணும் குயில்கள்...


மென்தளிர் மனத்தாள் பசுமடி பாற்குணத்தாள்
பொன்னகை மங்கிடும் புன்னகை ஒளியாள்
அன்ன நடையினில் அசைந்தே ஒடிந்திடுமோ?...
தென்றலும் மெல்லமாய்த் தழுவும் இடையாள்...


கலைமான் கால்களாய்த் துள்ளிடும் பாதங்கள்
அலையென எழுந்து ஆடிடும் அரங்கினில்
மலைத்து நோக்கியே மன்னரும் மக்களும்
சிலையென உறைந்தே திரும்பிடும் கோலங்கள்...


ஆடலில் மயங்கிய கள்வனோடு இணைந்து
கூடலில் காதலும் உறவாடி மகிழ்ந்து
ஊடலால் பிரிந்திடும் இளமை நெஞ்சமதை
தேடலில் தளர்ந்து தனித்தே நின்றவள்...


வற்றிய நதியில் வாடியப் பங்கயமவள்
கற்பின் நெறியில் கதிரின் சுடரவள்
மற்றவரை நினையாது வாழ்ந்து காட்டியும்
உற்றவனை நினைத்தே வாழ்ந்த மெய்யாள்...


தோழி வழிசென்ற தூது மடலும்
தாழி உடைந்து வீணாகும் நீராகிட
மேழியால் உழுதிடும் நிலமென மனமும்
ஆழியாய்ப் பொங்கி வழிந்திடும் விழியுமானாள்...


முள்ளென நினைத்துத் தன்மனையோடு சென்று
கள்ளென காலம் கடந்தே உணர்ந்தவன்
கள்ளன் இவனென வேந்தனால் வதைபட
உள்ளத்தில் தீவிழும் ரணம் கொண்டாள்...


ஈன்ற மகளுடன் இல்லறம் விடுத்து
சான்றோர் போற்ற துறவறம் பூண்டு
மேன்மை தரும் குணங்களைக் கொடுத்து
வான்வரும் மழைத் துளியாய் வளர்த்தாள்...


வற்றிய நதியில் வாடியப் பங்கயமாய்
கற்பின் நெறியில் சுடர்விடும் கதிராய்
ஒற்றைக் காம்பில் ஒரே மலராய்
உற்றவனை நினைத்தே வாழ்ந்த மெய்யாள்...

எழுதியவர் : இதயம் விஜய் (2-Feb-18, 11:32 pm)
பார்வை : 612

மேலே