நதிகள் இணையாவிட்டால்

நதிகள் இணையாவிட்டால்

பயிறு விற்பனை குறையும்
கயிறு விற்பனை நிறையும்
விளைச்சல் குறையும்
இவன் மன உளைச்சல் நிறையும்

விதையிலிருந்து வேர் வர
இவன் சதையிலிருந்து வேர்வை ஊற்ற நேரும்
மண்ணில் சுரக்கவேண்டிய நதி
இவன் கண்ணில் ஊரும்
பொன்மணிக்கு நீரில்லாதபோது சிறிது
இவன் கண்மணிக்கு ஈயப்படும்

நெல்லை அளந்து கொடுக்கவேண்டிய
நிலங்கள் பிளந்து கிடக்கும்

பொன்மகசூலை எடுக்க முடியாது ஆகும்
தன் மக சூலை நடத்த முடியாது போகும்

வள்ளலாய் வாழ்ந்தவன் வள்ளலாராய்
வாழ நேரும் வாடிய பயிரைக்கண்டு

பூச்சிக் கொல்லி வாங்கமுடியாது
இவன் கொள்ளிக்குக் கொல்லி வைக்க நேரிடும்

மண்டிக்குச் சென்றவன்
விலைதேடி
மண்டியிடவேண்டியிருக்கும்

நதிகள் இணையாவிட்டால்

நெற்குவியல் கண்டஇடத்தில்
வீடு கட்ட
கற்குவியல் விளைந்திருக்கும்

கால்வாய்கள்
வாய்க்கால்களாக மாறும்
பயிர் இவன் உயிர்
இரண்டும் பொய்க்கால்களாக நேரும்

ஏர் பிடித்து உழுதுகொண்டிருந்த
கைகள் வேர்பிடிக்க
தேர் பிடித்து இறைவன்
காலடியில் அழுதுகொண்டிருக்கும்

சாகுபடி செய்தவன்
சாகும்படி ஆகும்

எழுதியவர் : குமார் (3-Feb-18, 3:31 pm)
பார்வை : 169

மேலே