காதல் சொல்ல வாராயோ

ஒரு நாளில் அல்ல
ஒவ்வொரு நாளாய்
விழிகளினுள் நுழைந்தாய்
கடலில் பொங்கும் நுரைபோல
மனதில் காதல் பொங்குதே
உனைக்கண்டதும்
தாளம் போட தோணுதே
இது பார்வை கோளாறா?
பருவத்தின் கோளாறா?
எதுவென அறியேனே!
எந்நாளும் உன்னை விட்டு
பிரியேனே!
பார்வை பட்டதும்
காதல் ரணமொன்று இதய
நரம்பினில் தெறிக்குதே
இன்ப வலியினில் நிறுத்துதே.
என்ன உடை அணிய?
எதுவுனக்கு பிடிக்கும்
குழப்பத்தில் உடையேதும்
அணிய மறப்பேனோ?
கண்களால் என்னை
அளப்பாயே!கவிதைகளால்
காதலை விதைப்பாயே!
உன் கரம் பிடித்து
கதைகள் பல பேசி நெடுந்தொலைவு நடைபயில
வேண்டும்!உன்
நெஞ்சோரத்தில் தலை
சாய்ந்திட வேண்டும்
நெஞ்சை திருடும் அந்த
குறுகுறு பார்வையை
கொஞ்சம் கொஞ்சமாய் நான்
திருட வேண்டும்.
மங்கைக்குள் மயக்கத்தை
விளைவிக்கும்
மகத்துவத்தை எங்குதான்
கற்றாயோ?
உறக்கத்தை தவிர்க்கிறேன்
நாள்தோறும் நடந்தேறும்
பார்வை பகிர்தலின்
கிறக்கத்தில் கிடந்து
தவிக்கிறேன்
தேனில் ஊறிய பூவாய்
நானிங்கு மலர்ந்திருக்கிறேன்
வண்டென நீ பறந்திங்கு
வாராயோ?
என்னிலும் காதல்
பிறந்திருந்தாலும்
காதலா!
காதலை நீ சொல்ல அதை
நான் ஏற்பதே அழகு
காத்திருக்கிறேன் அத்தருணம்
எப்பொழுதென்று.