ஏற்றிவிடு சமநிலைக்கு

ஏழையாய் பிறந்தவரை
ஏடுகம் செல்லும்வரை
ஏளனமாய் காண்பதேன் ?
ஏழ்மை நிலைகண்டா
ஏமாளி அவனென்றா
ஏய்ப்பது எளிதென்றா ?
ஏற்றம்பெற வழியிருந்தும்
ஏற்றவன் இல்லையென
ஏற்புரை நிகழ்த்துவதேன் ?
ஏழைபாழை என்றாலே
ஏவலாளி என்றநிலை
ஏனிங்கு தொடர்வதேன் ?
ஏற்றத்தாழ்வு சமூகத்தில்
ஏற்றுமதியும் ஆகாதோ
ஏறுகடை வந்திடாதோ ?
ஏறுமுகம் வருமென்று
ஏங்கிடும் ஏழைகளும்
ஏற்றமும் அடைவாரோ ?
ஏகபோக உரிமையும்
ஏற்றமிகு நிலையும்
ஏழைக்கு பகல்கனவா ?
ஏறெடுத்தும் பார்க்காத
ஏற்றமிகு சமுதாயமே
ஏற்றிவிடு சமநிலைக்கு !
-------------------
( ஏடுகம் = கல்லறை )
( ஏறுகடை = இறுதிமுடிவு )
பழனி குமார்