உனக்கான நான்
வளர்பிறை
முழு நிலவாகும் நேரம்
என் வானம்
முழுதும் வெளிச்சம்...
நீ
குளிர் நிலவோ
இல்லை
இந்த நிலத்தின்
அதிபனோ
அறியேன்....
அறிந்ததெல்லாம்
இது தான்;
பனிக்குடம்
உடையும் நேரம்
என் வாழ்வு
மீண்டும் துளிர்க்கும்
இருவரும்
சேர்ந்து பிறப்போம்...
உனக்கான தட்டில்
எனக்கான சோறு
மிச்சமிருக்கும்..
உனக்கான கனவில்
எனக்கான வாழ்வு இருக்கும்..
என் இதயத்தில்
உன் காலடி சுவடு இருக்கும்
என் நரை
உன் இளமை
கதை சொல்லும்...
என் விழி
உனக்கான கண்ணீர் சிந்தும்
உன் வெற்றியில்
என் உழைப்பு அடங்கும்
வா!!!
உன் வரவை நோக்கி
என் கவிதையும்
என் கண்ணீரும்
காத்துக்கிடக்கிறது...