கிழிந்து போன கிளியோபாட்ராக்கள்

அஞ்சிவயசுல அப்படிபோடுபாட்டுக்கு
அப்படி ஆட்டம்போட்ட அருக்காணிய
அடுப்பளையில ஆக்குறவேலை கெடக்க
ஆட்டம் என்னடி ஆட்டமுன்னு
காதத்திருகுனா கடன்கார ஆத்தா....

அப்பார்ட்மெண்டில் அவதரிச்ச அனுஷா
ஆக்ஷ்ஷனோட ரைம்ஸ் ஒப்பிச்சதுக்கு
ஆடல்கலை பயிற்சிக்குப் போறா
அப்ப........ அப்ப.......

சடைய புடிச்ச அண்ணனோட
சட்டைய புடிச்ச சாந்திய
குடும்பத்துப் பொண்ணா!! கொலகாரி!!
ஆம்பளயையே அடிக்குறா ஆணவகழுத!!

அடியே! ஆத்தாக்காரி....!!
அப்படியே உட்டுப் புடாதடி
மூனாநாத்தே மூளியாவந்து நிப்பா!!
இது முக்குனா செத்துப்போற
மூக்காயி கெழவியோட சாபம்.....

"கொன்ட்ருவேன்னு சொல்லு"
"கொன்ட்ருவேன்னு சொல்லு"
குடும்பமே கோரசா சொல்ல
குபீர்னு கொப்பளிச்ச கொழந்தைய

கொலவெறிய வெதச்சதகூட தெரியாம
வெர்ர்ரிகுட்டுனு விமர்சனம் பண்ணிட்டு
வேலைக்காரிட்ட விட்டுபுட்டு வேலைக்கு
கெளம்புறா வேகக்கால தாய்...!!

மொட்டையன் குட்டையில மூழ்கி
உசுருக்குத் துடிச்ச உடும்பன் மொவன
ஒரேமுங்கா முங்கி மூச்சுப்புடிச்சுக்
காப்பாத்துன கடைசிதெருக் கண்ணாத்தா
புள்ள பெக்கப் பொறுக்காம போயிசேந்துட்டா......!!

சாட்டர்டே டூ சன்டே
ஒன்அவர் நீச்சல் பயிற்சிக்கு போயி
ஓயாம காய்ச்சல் வந்து கெடக்கு
காா்ப்பரேட் பெத்தக் கொழந்தைக
கொத்து..........கொத்தா.........

கிடைக்க வேண்டிய தெல்லாம்
கிடைக்க வேண்டிய நேரத்தில்
கிடைக்க வேண்டிய வர்களுக்கு
கிடைத்திருந்தால் என் கிராமத்து

கிழிந்த பாவாடைகளும் இன்று
கிளியோபாட்ராக்கள் தானே...!!
ஒட்டுவைத்த சாக்கெட்டுகளும் மேசையை
ஓங்கித் தட்டியிருக்கும் தானே...!!


ஓரு கண்ணுல நெய்யும்
ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வைக்கும்
ஓ!! ஓரவஞ்சனை உலகமே!

கள்ளிப்புவும் முள்ளுக்காடும்
சுள்ளிப் பொறுக்கும் வள்ளிமவளும்
என்ன ரெண்டாந்தாரப் புள்ளையா???!!!!

எழுதியவர் : விமுகா (12-Feb-18, 12:04 am)
சேர்த்தது : விமுகா
பார்வை : 134

மேலே