பெண் வர்க்க உணர்வு

பாரதி கண்ட
புதுமைப் பெண்ணே...
பாரதிதாசன் பெற்றெடுத்த
புரட்சிக் கண்ணே - எங்கே
மறந்துபோனாய் உன் வீரத்தை?

இல் - குடி
கூட்டுப்புழுவாய்
சுருங்கிவிட்டாய் - உன்
தொல் - குடி
வரலாற்றை நீ அறிவாயா?

வில்லெடுத்து வேட்டைக்கு
முன்னின்றவள் பெண்!

வேட்டையாடும் விலங்கையே
வேட்டையில் இரையாக்கி
எடுத்து வந்தவள் பெண்!

பாறையை உருக்கும்
பெருமழையாய் இருந்தாலென்ன...
உதிரம் உறையும்
பனிக்காற்றாய் இருந்தாலென்ன...
எதற்க்கும் அஞ்சியதில்லை பெண்!

வேட்டைக்களம் முடித்து
விதைவிதைக்க வயற்களம்
அமைத்தவள் பெண்!

தன் விழிக்குடம் தழும்பினாலும்
பனிக்குடம் தளும்பாமல்
சிசுவை ஈன்றவள் பெண்!

எப்படி மறந்து போனாய்..?

விடுதலைப் போரில் மட்டும்
வீணாகவா இருந்தாய் - புரட்டிப்பார்
உன் ரத்தம் தோய்த்த வரலாற்றை!

வெள்ளையனின் மார்பு துளைத்த
வாளுக்கு சொந்தக்காரி
ஜான்சி ராணி..!

சுதந்திரத் தீயிற்க்காக
தன்னுடலையே
தீப்பிழம்பாக்கியவள் குயிலி..!

வேலுநாச்சியின்
வேலிற்க்கு முன்
மண்டியிடாத வீரம் உண்டோ?
நீயே அறிந்துச் சொல்...

கருக்கரிவாளால்
சிப்பாய்களின் தலைகொய்தாய்...
விளக்குமாற்றைக்கொண்டே
அதையும் துடைத்தெடுத்தாய்!

அந்நியத்துணி எரிப்பில்
கொழுந்துவிட்டெறிந்த
பெண்களின் வீரம்தானே
இத்தேசத்தின் அடையாளம்!

எங்கே மறைந்து போனாய்..?

நாகரீகமெனும் நாற்றத்தில்
நைந்துவிட்டாய்...
சத்தமில்லாமல் நாடுகடந்தது
உன் வீரம்...

ஆணாதிக்கத்தின் கோரப்பிடியில்
சிக்குண்டாய் - வீழ்ந்தது
நீ மட்டுமல்ல...
பெண் வர்க்க உணர்வும்தான்...

எழுந்துநில்..!
உணர்ந்துகொள்..!
பெண்ணியம் மட்டுமல்ல
பெண் வர்க்க உணர்வும்
காக்கப்பட வேண்டிய ஒன்றுதான்...

எழுதியவர் : யாழ்வேந்தன் (12-Feb-18, 4:22 pm)
பார்வை : 2259

மேலே