புத்தகங்களைக் கொண்டாடுவோம்

திருவிழா என்றவுடன் அது நிச்சயம் கடவுள் நம்பிக்கையோடு தொடர்புடையது என்றே நம் பொது மனம் யோசிக்கும். அல்ல. திருவிழா என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு. ஒரு சமூகத்தின் பல்வேறு வகையான மக்களை ஒன்றிணைப்பது. அது ஒரு கூட்டுக் கொண்டாட்டம்.


சமீப காலங்களில் புது வகையான திருவிழாக்கள் நடக்கின்றன. அதில் ஒன்று புத்தகத் திருவிழா. புத்தகத் திருவிழா என்று சொல்லும்போதே எனக்குள் பிறக்கும் உவகையை வர்ணிக்க முடியவில்லை. புத்தகங்களைக் கொண்டாடாமல் வேறு எதை நாம் கொண்டாடப் போகிறோம்? புத்தகங்களை ஒரு சமூகம் எந்தளவு கொண்டாடுகிறதோ அதை விட அதிகமாகவே அதன் வளர்ச்சி எல்லா நிலைகளிலும் இருக்கும் என்பது திண்ணம். அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லமுடியும். அந்த வகையில் என் தஞ்சை மண்ணில் இரண்டாம் ஆண்டாகப் புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது.


10 நாள் நடைபெற்ற அந்தத் திருவிழாவுக்கு நாள்தோறும் செல்ல வேண்டும் என்பதே ஆசை. முயன்றேன். என்றாலும், முடியவில்லை. ஐந்து நாள் சென்று வந்தேன்.

நான் வாங்கிய புத்தகங்கள்

இந்த ஆண்டுப் புத்தகத் திருவிழாவிலும் மொத்தம் 120 அரங்குகள். ஆனால், உயிர்மை பதிப்பக அரங்கு இல்லை. நான்தான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்று மீண்டும் ஒருமுறை சுற்றி வந்தேன். உயிர்மைக்கான அரங்கு ஒதுக்கப்படவில்லை. நான் எதிர்பார்த்துப் போன புத்தகங்களில் சில அந்தப் பதிப்பகத்தின் வெளியீடுகள். நல்லவேளை! உயிர்மையின் சில புத்தகங்களையாவது வாங்க முடிந்தது. எப்படி என்கிறீர்களா? ஏதோ ஒரு பதிப்பக அரங்கில் மேஜைக்குக் கீழே நிறைய நூல்கள் கண்ணில் பட்டன. திரையை விலக்கி பார்த்தபோது எல்லாம் உயிர்மை வெளியீடுகள். விற்பனையாளர் வந்து "உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். நான் எடுத்துத் தருகிறேன்" என்றார். நான் பெயர்களைச் சொன்னேன். அவர் "உயிர்மையின் புத்தகங்கள் இங்கே கிடையாது” என்றார். நான் கீழேயிருந்த எல்லாப் புத்தகங்களையும் காட்டி "இவையெல்லாமே உயிர்மை வெளியீடுகள்தானே?” என்றேன். அவரே அதை நம்ப முடியாமல் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். பிறகு, சில புத்தகங்களை வாங்கினேன். உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளர் மனுஷ்யபுத்திரன் தி.மு.க.வில் இணைந்தது அரங்கு ஒதுக்கப்படாததற்கு காரணமாக இருக்குமோ என்று தோன்றியது. ஏனென்றால், இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துவது மாவட்ட நிர்வாகம். அதாவது தமிழக அரசு என்று சொல்லலாம்.


தஞ்சை மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் அவர்களிடம் பரிசு பெறுவது (கடந்த ஆண்டு)
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர் வெ. இறையன்பு வந்திருந்தார். அன்றைய சிறப்புப் பேச்சாளர்கள் இருவர். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் மற்றும் இறையன்பு. லேனாவின் பேச்சு என்னைக் கவரவில்லை. மிக மேலோட்டமான பேச்சு. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு “வாசிப்பே நமது சுவாசிப்பு”. 40 நிமிடங்கள் பேசியும் வாசிப்பின் முக்கியத்துவத்தை ஆழமாகவே பேசவில்லை என்று தோன்றியது.

இரண்டாவதாக இறையன்பு. இறையன்பு அரங்குக்கு வந்தபோதே பலத்த கரவொலி, விசில் சத்தம். அன்றைக்குக் கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் அதிகளவில் வந்திருந்தனர். அரங்கமே நிரம்பியிருந்தது. அது இறையன்புக்காகத்தான் என்பது வெளிப்படை. இறையன்புக்கென்று தலைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. அதனால் அவரும் இதே தலைப்பில் பேசுவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அவர் பேசிய தலைப்பு வித்தியாசமானது. அவர் இப்படித் தொடங்கினார் தன் உரையை. “லேனா தமிழ்வாணன் அவர்கள் ‘வாசிப்பு நமது சுவாசிப்பு’ என்ற தலைப்பில் பேசியதால் நான் ‘வாசிப்பது வீண்’ என்ற தலைப்பில் பேசலாமென்று இருக்கிறேன்”. அரங்கில் ஒவ்வொருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அதன் பின்பு, 40 நிமிடங்கள் சொல்மாரி பொழிந்தார். அவருக்கே உரித்தான தனித்த உடல்மொழி அவர் சொல்லும் கருத்தை இன்னும் ஆணித்தரமாகச் சொல்லியது. ஆனாலும், அவர் எப்போதும் பேசும் அளவு பொதுஅறிவுத் தகவல்கள் அதிகம் இல்லை. என்றாலும், நேரம் போனதே தெரியவில்லை. மிக ஆழமான உரை. அவருடைய உரையை நேரடியாகக் கேட்பது எனக்கு இது மூன்றாவது முறை. அவர் பேசிக்கொண்டிருக்கும்போது கீழே சில 40 வயது பெண்மணிகள் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் என்பதை எளிதாக அறியமுடிந்தது. நான் எப்போதும் போல அவர் உரையை அலைபேசியில் ஒலிப்பதிவு செய்துகொண்டேன்.


இறையன்பு அவர்களின் சொல்மாரி

நான் பெரிதும் மதிப்பது இந்த விழாவை இவ்வளவு நேர்த்தியாக நடத்திய தஞ்சை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் அவர்களைத்தான். அவர் இதற்காக எடுத்துக்கொண்ட சிரத்தையை ஒவ்வொரு நாளும் உணர முடிந்தது. அவர் 4 ஆண்டுகளாகச் சிறந்த நிர்வாகத்தைச் அளித்தார். மக்களிடம் குறைகளைக் கேட்டு முடிந்தளவு நிவர்த்திச் செய்து வந்தார். கையூட்டும் வாங்குவதில்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். மிகவும் எளிமையானவரும் கூட. எளிதில் அவரைச் சந்தித்துப் பேசலாம். கடந்த முறை என்னிடம் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். இருவரும் திருக்குறள் பற்றிப் பேசினோம். சில புதிய முயற்சிகளை அவர் வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார். சமீபத்தில் கூட, ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோலார் பேனல்கள் பொருத்தி (சோலார் பைக் ஸ்டாண்ட் உட்பட) சாதனை படைத்தார். இதனால் ஆண்டுக்கு 24 லட்சம் மின் கட்டணம் மிச்சமாகிறதாம். (நன்றி: புதிய தலைமுறை). கொடுமை என்னவென்றால், திருவிழா முடிந்த 3 நாட்களில் அவர் இங்கிருந்து மாற்றப்பட்டுவிட்டார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் அவர்களிடம் பாராட்டு பெறுவது

புத்தகம் படிப்பது என்பது இன்று சமூகத்தையும் குடும்பத்தையும் சீரழிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. ஒருவன் தன் வீட்டில் பொதுப் புத்தகம் படித்தால் அவன் குடும்பத்தில் உள்ளவர்களே அவனை ஏலியன் மாதிரிப் பார்க்கிறார்கள். அல்ல அல்ல. ஏலியனைக் கூட ஆச்சர்யமாகத்தான் பார்க்கிறார்கள். புத்தகம் படிப்பவனைத்தான் அசூயையோடு பார்க்கிறார்கள். என்ன சொல்ல?

புத்தகங்களைப் பற்றி எவ்வளவுதான் எழுதினாலும் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துவிடுவதில்லை. ஆனாலும், ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கும்போதும் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அதனாலேயே, இன்னும் பக்கம் பக்கமாகப் புத்தகம் படிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி எழுதிக்கொண்டே இருப்பேன்.

இந்த ஆண்டு என்னுடைய பட்ஜெட் ஐயாயிரம் ரூபாய். ஆனால், அதற்கும் அதிகமாகவே வாங்கிவிட்டேன். மொத்தம் 80 புத்தகங்கள். அந்தப் பட்டியல் மிகவும் தேர்ந்தெடுத்து வாங்கப்பட்டது. ஒவ்வொரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நேரம் வாய்க்கும்போது அப்புத்தககங்களின் சிறு அறிமுகத்தோடு பேசுகிறேன். இப்போது நான் வாங்கிய நூல்களின் பட்டியல் மட்டும் கீழே.

பகுத்தறிவு நூல்கள்:
1. தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரணச் சாசனம்) – பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு
2. சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார் – திராவிடர்கழக வெளியீடு
3. கறுப்புச் சட்டை – சுகி சிவம் - திராவிடர்கழக வெளியீடு
4. சிதம்பர ரகசியம்? – கி. வீரமணி - திராவிடர்கழக வெளியீடு
5. நவமணிகள் – தந்தை பெரியார் - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு
6. மகாபாரத ஆராய்ச்சி – கி. வீரமணி - திராவிடர்கழக வெளியீடு
7. சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? – தந்தை பெரியார் - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு

கவிதை:
8. தனிமையின் ஆயிரம் இறக்கைகள் – குட்டி ரேவதி – அடையாளம்
9. ஆலாபனை – அப்துல் ரகுமான் – நேஷனல் பப்ளிஷர்ஸ்

நாவல்:
10. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி – காலச்சுவடு பதிப்பகம்
11. கானகன் – லக்ஷ்மி சரவணகுமார் – மலைச்சொல் பதிப்பகம்
12. ரோலக்ஸ் வாட்ச் – சரவணன் சந்திரன் – உயிர்மை பதிப்பகம்
13. கதிரேசன் செட்டியாரின் காதல் – மா.கிருஷ்ணன் – மதுரை பிரஸ்
14. கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – கிழக்குப் பதிப்பகம்
15. மதில்கள் – வைக்கம் முகம்மது பஷீர் – காலச்சுவடு பதிப்பகம்
16. ஈஸ்வர அல்லா தேரே நாம் – ஜெயகாந்தன் – மீனாட்சி புத்தக நிலையம்
17. பிரம்மோபதேசம் – ஜெயகாந்தன் - மீனாட்சி புத்தக நிலையம்
18. நெஞ்சக் கனல் – நா. பார்த்தசாரதி – எல் கே எம் பப்ளிகேஷன்ஸ்
19. இரும்பு குதிரைகள் – பாலகுமாரன் – விசா பப்ளிகேஷன்ஸ்
20. வாழ மறந்தவன் (மலையாள நாவல்) – வெட்டூ ராமன் நாயர் – சாகித்ய அக்காதெமி

கட்டுரைகள்:
21. துயரமும் துயர நிமித்தமும் – பெருமாள் முருகன் – காலச்சுவடு பதிப்பகம்
22. முருகன் விநாயகன் (மூன்றாம் உலக அரசியல்) – கௌதம சித்தார்த்தன் – எதிர் வெளியீடு
23. சங்க காலச் சாதி அரசியல் – கௌதம சித்தார்த்தன் – எதிர் வெளியீடு
24. டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன – மனுஷ்ய புத்திரன் – உயிர்மை பதிப்பகம்
25. வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்
26. என்றார் போர்ஹே – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்
27. இன்றில்லை எனினும் – எஸ்.ராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ்
28. எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது – சாரு நிவேதிதா – உயிர்மை பதிப்பகம்
29. புதிய காலம் (சில சமகால எழுத்தாளர்கள்)– ஜெயமோகன் – கிழக்குப் பதிப்பகம்
30. நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் – சுஜாதா – திருமகள் நிலையம்
31. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன் – கிழக்குப் பதிப்பகம்
32. உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் – வேங்கடம் – விகடன் பிரசுரம்
33. எல்லோரும் வல்லவரே – சோம. வள்ளியப்பன் – கிழக்குப் பதிப்பகம்
34. வேண்டும் எனக்கு வளர்ச்சி – எஸ்.ராமகிருஷ்ணன் – கிழக்குப் பதிப்பகம்
35. சிந்தனை விருந்து – தெங்கச்சி கோ.சுவாமிநாதன் – கற்பகம் புத்தகாலயம் வெளியீடு

சிறுகதைகள்:
36. உதயம் – ஜெயகாந்தன் – மீனாட்சி புத்தக நிலையம்
37. குஜராத்திச் சிறுகதைகள் – மன்சுக்லால் ஜாவேரி – சாகித்ய அக்காதெமி
38. கதவு – கி.ராஜநாராயணன் – அன்னம் வெளியீடு

வாழ்க்கை வரலாறு:
39. என் சரித்திரம் – உ.வே.சாமிநாத அய்யர் – விகடன் பிரசுரம்
40. சார்லஸ் டார்வின் (சுயசரிதை) – எதிர் வெளியீடு
41. துறவி வேந்தர் ஸ்ரீ நாராயணகுரு – டி.பாஸ்கரன் – சாகித்ய அகாதெமி
42. மறைமலை அடிகள் – இளங்குமரன் – சாகித்ய அகாதெமி
43. அன்னமாச்சார்யா – அடபா ராமகிருஷ்ண ராவ் – சாகித்ய அகாதெமி

தமிழ் மொழியியல்:
44. திருக்குறளின் பெருமை – முல்லை முத்தையா – முல்லை பதிப்பகம்
45. திருக்குறள் கதைகள் – கிருபானந்த வாரியார் சுவாமிகள் – குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
46. திருக்குறளும் தெய்வத்தின் குரலும் – புலவர் இராம்மூர்த்தி – வனிதா பதிப்பகம்
47. மதிவளம் நமது செல்வம் – வா.செ.குழந்தைசாமி – பாரதி பதிப்பகம்
48. தாய்மொழி பெறாததைச் சமுதாயம் பெறாதா? – வா.செ.குழந்தைசாமி – பாரதி பதிப்பகம்
49. தமிழ் எழுத்துச் சீரமைப்பு – வா.செ.குழந்தைசாமி – பாரதி பதிப்பகம்
50. வளர்க தமிழ் – குலோத்துங்கன் – பாரதி பதிப்பகம்

ஆய்வு நூல்கள்:
51. பாரதியின் அறிவியல் பார்வை – வா.செ.குழந்தைசாமி – பாரதி பதிப்பகம்
52. பாரதி: கவிஞனும் காப்புரிமையும் – இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு பதிப்பகம்
53. களப்பிரர் காலம் – டி.கே.இரவீந்திரன் – விகடன் பிரசுரம்
54. இலக்கியத்தில் மேலாண்மை – வெ.இறையன்பு – நியூ சென்சுரி புக் ஹவுஸ்
சுற்றுச்சூழல் & அறிவியல்:
55. குப்பை உலகம் – சுப்ரபாரதி மணியன் – சேவ் வெளியீடு
56. குப்பை கொட்டும் கலை – சிபி.கே.சாலமன் – கிழக்குப் பதிப்பகம்
57. மேக வெடிப்பு – சுப்ரபாரதிமணியன் – எதிர் வெளியீடு
58. சிவப்புச் சந்தை – ஸ்காட் கார்னி – அடையாளம் பதிப்பகம்
59. ஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபு ஃபுகோகா – எதிர் வெளியீடு
60. கனவுகளின் விளக்கம் – சிக்மன்ட் ஃப்ராய்ட் – பாரதி புத்தகாலயம்
61. அமானுஷ்யம் – ஜி.எஸ்.எஸ். – விகடன் பிரசுரம்

ஆன்மிகம்:
62. திருமூலர் அருளிய திருமந்திரம் - மூலமும் தெளிவுரையும் (முதல் பாகம்) – கோ.பெரியண்ணன் – வனிதா பதிப்பகம்
63. திருமூலர் அருளிய திருமந்திரம் - மூலமும் தெளிவுரையும் (இரண்டாம் பாகம்) – கோ.பெரியண்ணன் – வனிதா பதிப்பகம்
64. திருமூலர் அருளிய திருமந்திரம் - மூலமும் தெளிவுரையும் (மூன்றாம் பாகம்) – கோ.பெரியண்ணன் – வனிதா பதிப்பகம்
65. திருமூலர் அருளிய திருமந்திரம் – அனுபவ உரை – டி.வி.வெங்கட்டராமன் – பாரதி பதிப்பகம்
66. ஸ்ரீ ராமானுஜர் 1000 – தி இந்து வெளியீடு

மருத்துவம்:
67. நலம் 360 – மருத்துவர் கு. சிவராமன் – விகடன் பிரசுரம்
68. செல்வ யோகங்கள் வந்து குவிய முத்திரை பயிற்சிகள் – ஜாண் பி. நாயகம் – ராம்பிரஷாத் பப்ளிகேஷன்ஸ்
69. நீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம் – ஆ.நடராசன் – மதிநிலையம்
70. நரம்புத் தளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம் – ஆ.நடராசன் – உஷா பிரசுரம்
71. உடல் நலம் – டாக்டர்.கெங்காதரன் – லியோ புக் பப்ளிஷர்ஸ்
72. மூலிகை மகத்துவம் – தேவூர் மணி வைத்தியர் – தாமரை பப்ளிகேஷன்ஸ்
73. வள்ளலார் அமுத மருந்து – லோகநாதர் – விதை வெளியீடு

பொது நூல்கள்:
74. ஜெயகாந்தன் முன்னுரைகள் – ஜெயகாந்தன் – மீனாட்சி புத்தக நிலையம்
75. ஜெயகாந்தன் முன்னுரைகள் 2 – ஜெயகாந்தன் – மீனாட்சி புத்தக நிலையம்
76. கி.ராஜநாராயணன் பதிலகள் – அகரம் பதிப்பகம்

ENGLISH NOVELS
77. New Moon - Stephenie Meyer - Atom Books
78. When God Was A Rabbit-Sarah Winman - Head Line Publishers
79. Our Impossible Love - Durjoy Datta - Penguin Publishers
80. Doors Open - Ian Rankin - Orion Books

இடுகையிட்டது Dheena Dhayalan

எழுதியவர் : (15-Feb-18, 5:39 pm)
பார்வை : 352

மேலே