வான வேடிக்கை
வானம் காட்டும் பல வேடிக்கை
தினம் நடக்கும் இதுதான் வாடிக்கை
வெண்மை நிறத்தில் மயக்கும் சிலநேரம்
மின்னல் அடித்துக் காட்டும் அதிகாரம்
நீலத் தண்ணீர் தெளிக்கும் சிலநாள்
கோலக் காட்சி அளிக்கும் பலநாள்
தாழம் பூவாய் பூத்தும் கிடக்கும்
வியர்வை மழையில் வியர்த்தும் கிடக்கும்
ஏழு வண்ணச் சேலையும் உடுத்தும்
ஓவியக் கண்காட்சி அடிக்கடி நடத்தும்
காவியம் எழுதிட கற்பனை கொடுக்கும்
நிலவில் வடையின் விற்பனை நடத்தும்
ஒவ்வொரு நொடியும் தன்முகம் மாற்றும்
அலங்காரச் செலவின்றி பன்முகம் காட்டும்
அகங்காரம் ஒருபோதும் கொண்டது இல்லை
அதனாலே நெடுங்காலம் உலகினை ஆளும்
மஞ்சளாய் மங்கள முகமும் உரியது
ஆரஞ்சாய் அகத்தினை கொள்ளையும் அடிக்குது
அற்புத வானத்தை உலகிற்கே பிடிக்குது
கடவுளின் சாட்சியாய் காட்சியை நடத்துது