நாடு பற்றிய பாடல்கள்-----தமிழ்நாட்டின் பழம் பெருமையையும் இயற்கைச் சிறப்பையும் வளங்களையும் பாரதிதாசன் ---

பாரதிதாசன் நாடு பற்றிய பாடல்களின் வழியாக நாட்டுப்பற்றை ஊட்டியுள்ளார். பாரதிதாசனின் இசைப்பாடல்களில் நாடு என்று குறிப்பிடப்படுவது பெரும்பாலும் தமிழ்நாடே ஆகும். தமிழ்நாட்டின் பழம் பெருமையையும் இயற்கைச் சிறப்பையும் வளங்களையும் பாரதிதாசன் இப்பாடல்களின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.


4.5.1 தமிழ் நாட்டுப் பெருமை


நில வளத்திலும் நீர் வளத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இங்கு வாழும் தமிழர்கள் பண்பு நிறைந்தவர்கள். விருந்தோம்பல் பண்பை உயிராக மதிப்பவர்கள் என்னும் கருத்துகளைப் பாரதிதாசன் தமிழ்நாட்டுப் பெருமைகளாகப் பாடியுள்ளார்.


தமிழ்நாடு தான் மேலான நாடு
தமிழர்க்கெல்லாம் மற்றவை காடு

(தமிழ்)


கமழ்தென்றலே நடமாடு நாடு
காவிரி நீள்வைகை பாயும் நாடு

(தமிழ்)


கன்னல்மா பலாவும் வாழை கமுகு
செந்நெல் யாவுமே மலிகின்ற நாடு

(தமிழ்)


பொன்னின் வார்ப்படம் போல்மாதரோடு
போர்புரி மாவீரர் வாழும் நாடு

(தமிழ்)
(இசையமுது, 2 - ‘எதற்கும் மேல்’)


என்னும் பாடலில் தமிழ் நாட்டையும் தமிழரையும் உயர்வாகப் பாரதிதாசன் பாடியுள்ளதைக் காண முடிகிறது. காவிரி, வைகை என்னும் நதிகள் பாய்ந்து தமிழ்நாட்டை வளப்படுத்துகின்றன. இங்கு மா, பலா, வாழை என்னும் முக்கனிகள் விளைகின்றன. கமுகும் நெல்லும் நன்கு பயிராகின்றன என்று பாரதிதாசன் இயற்கை வளங்களை எடுத்துக் கூறியுள்ளார். மேலும் பொன்னின் வார்ப்படம் (mould) போன்ற அழகான பெண்களும், போர் புரிவதில் சிறந்த வீரர்களும் வாழும் நாடு தமிழ்நாடு என்றும் பாடியுள்ளார்.


4.5.2 தமிழர் ஒற்றுமை


தமிழர்கள் தங்களுக்குள் சாதி, மதங்களால் பிரிந்து வாழ்கிறார்கள், அவர்கள் அனைவரும் தமிழ் என்ற மொழியின்கீழ் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று பாவேந்தர் பாடியுள்ளார். தமிழர் ஒற்றுமையாய் வாழ்ந்தால் தமிழ் மொழி ஏற்றம் பெறும் என்னும் உண்மையை அவர் எடுத்துக் கூறியுள்ளார்.




எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு
ஞாபகம் செய் முழங்கு சங்கே!
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென்று ஊது சங்கே!
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்
ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்!



(பாரதிதாசன் கவிதைகள், 27, சங்கநாதம்)


(உடுக்கள் = விண்மீன்கள்; மங்குல் = மேகம்; சிங்களம் = இலங்கை; சங்காரம் = அழித்தல்; சாக்காடு = சாவு)


இந்தப் பாடலில் தமிழ், தமிழர் என்று படிநிலை அமைத்து, பாரதிதாசன் பாடியுள்ளார். தமிழை மூச்சாகக் கொண்டவர்கள் தமிழர்கள். அவர்கள் வீரம் நிறைந்தவர்கள், கங்கையைப் போன்றும் காவிரியைப் போன்றும் கருத்துகள் ஊறும் உள்ளம் கொண்டவர்கள் என்று பாடியுள்ளார்.

எழுதியவர் : (1-Mar-18, 5:54 am)
பார்வை : 78

மேலே