பிச்சைக்காரி

#பிச்சைக்காரி

நாட்கள் கழிந்து கொண்டேதான் இருந்தது, தன் மகனின், மகளின் வரவை எண்ணி, இதோ இப்போ வருவார்கள்..அப்போ வருவார்கள் என அந்த மூதாட்டியின் நாட்கள் நொடி, நொடியாய் ஓடி கொண்டேதான் இருந்தது..

அந்த மூதாட்டி தன் மக்களை வளர்க்க என்ன பாடுபட்டார், அவர்களை வளர்க்கும் பாடு அவளுக்கு தான் தெரியும்.. அவள் பெயர் ஞானம், தன் கணவர் இறந்தபோது அவளுக்கு வயது 21, தன் மக்களுக்காக வேறொரு கல்யாணம் கூட பண்ணிக்கொள்ளவில்லை..அப்போது பெரியவனுக்கு வயது 3, சிறிய மகளுக்கு வயது 1, உறவினர்களும், பக்கத்தில் உள்ளவர்களும் சொல்லியும் கூட அவள் ஏற்றுக்கொள்ளவில்லை..ஞானம் ஒரு பிடிவாதக்காரி, தன் முடிவில் மாற்றமில்லாத ஒரு பைத்தியக்காரி, தனக்கென எந்த ஒரு ஆசையும் இல்லாமல் தன் மக்களின் ஆசைக்காகவே வாழ்ந்தாள்.. ஞானம் ஒரு பொறுமையின் சிகரம், அதே பொறுமையை இப்போது வரையும் காத்து வருகிறாள்..

"இந்த பைத்தியக்காரி, அப்போது இருந்தே ஒரு நாள் வரும், அனைத்தும் மாறும் என்று எண்ணி கொண்டிருப்பவள்", அது போல இப்போதும் எண்ணி கொண்டு இருக்கிறாள்.. தன் மகனையும், மகளையும் கஷ்டம் என்னவென்று தெரியாத அளவுக்கு வளர்த்தால்..மகனின் பெயர் மாதவன், தன் தாத்தாவின் பெயர் , அதுவும் தன் கணவர் வைத்த பெயர் என்பதால் மகனின் மீது கொஞ்சம் பாசம் அதிகம், அநேக நேரங்களில் அவனுக்கு பிடித்த கெழுத்தி மீன் குழம்பு, வாரத்தில் எப்படியும் 3 நாட்களாவது இடம் பிடித்துவிடும்..அந்த அளவுக்கு பாசம் அதிகம், இவ்வளவு பாசத்திற்கு மற்றுமொரு காரணம் அவன் தனது கணவனின் சாயலில் இருப்போதோ என்னவோ, என்று ஊர் கிழவிகள் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஒரு பாசம்..

எல்லோரும் ரொம்ப செலவாகும், வேண்டாம் ஞானம்..என்று சொல்லியும் கேக்காமல் தன் மகன் விரும்பிய மேற்படிப்பில் சேர்த்து விட்டாள், அதற்காக அவள் 2, 3 வீடுகளில் வேலை பார்த்தது அவளுக்கு மட்டும் தான் தெரியும்..சரி எப்படியோ படிக்க வைத்துவிட்டாள், அவன் பட்டம் வாங்குவதை நேரில் பார்க்க ஆசை பட்டாள், ஆனால், மகனோ "அம்மா நீயெல்லாம் அங்க வர வேண்டாம்,
உன்கிட்ட உடுத்த நல்ல புடவை கூட இல்ல, இதோடு வந்து என் மானத்தை வாங்கிவிடாதே," என்றான், அன்றும் ஏமாந்து போனால் இந்த பைத்தியக்காரி..

மகள் பெயர் மாதவி, இவளையும் நன்றாக தான் வளர்த்தாள், மேற்படிப்பும் படிக்க செய்தாள்.. மற்ற வீட்டு மகள்கள் ஒய்வு நேரங்களில் செய்யும், வீடு கூட்டுவது, அம்மாவிற்கு சமையலில் உதவியாய் இருப்பது, துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, காப்பி போடுவது என எந்த வேலையும் தன் மாதவிக்கு அவள் கொடுத்தது இல்லை, தங்கத்தில் வைத்து தாங்க முடியாவிட்டாலும் தன் கைகளால் தாங்கினாள் அவள்..மாதவிக்கு தானாய் வரன் பார்த்து ஒரு நல்ல இடத்தில் சீர், செனத்தியோடு கட்டி கொடுக்க வேண்டுமென்ற ஆசை, இந்த பைத்தியக்காரி மனதுக்கு, ஆனால் நடந்ததோ...ஒரு நாள் மாலையும் கழுத்துமாக வீட்டு வாசலில் வந்து நின்றாள் மாதவி.. இந்த ஏமாலி ஞானத்துக்கு தூக்கி வாரி போட்டது..அன்றும் ஏமாந்து போனால் இந்த பைத்தியக்காரி.. இந்த காரியத்தை ஞானம் ஏற்றுக்கொண்டாலும், மாதவனுக்கு பிடிக்கவில்லை அவள் இந்த வீட்டில் இருந்தால் நான் இங்கே இருக்க மாட்டேன் என்று, இருவருக்கும் சண்டை வந்தது, ஞானம் மனமுடைந்து போனால், ஞானம் எவ்வளவு சொல்லியும் மாதவன், கேட்டபாடில்லை....

மாதவி தானாக முன் வந்து தன் ஆசை கணவருடன்,வளர்த்த அம்மாவை விட்டும் வீட்டை விட்டு வெளியேறினாள்.."அம்மா, நீ கவலை படாதே, நா இங்க இருக்குற பாம்பாய் தான் போறேன், தினமும் உனக்கு போன் பண்றேன், கவலைப்படாதே..என்றாள்".. நாட்கள் செல்ல செல்ல தினமும் வந்த போன், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்தது, பிறகு வாரத்திற்கு ஒரு முறை வந்தது, இப்போது போன் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது..போன் வரும், வரும் என்று நம்பிக்கையுடன் போன் பக்கத்திலே ஏமாந்து உட்கார்ந்து இருந்தால் இந்த பைத்தியக்காரி...

நாட்கள் ஆக,ஆக முதுமையும் நோயும் ஞானத்தை வாட்டியது, தனக்கு பார்க்கும் மருத்துவ செலவு ரொம்ப பெரும் சுமையா இருக்குனு ரொம்ப ஆதங்கப்பட்டான், மாதவன்..இப்போது ஞானமும் மாத்திரை முடிந்தவுடன் உடனே கேட்பதில்லை..அவ்வப்போது ஒரிரெண்டு தற்போது முற்றிலுமாக நிறுத்தி விட்டாள் ஞானம்..

2 மாதங்கள் கழித்து தன் அலுவலக மேனஜிரின் தங்கையை திருமணம் செய்ய போவதாக பத்திரிக்கையுடன் வந்து சொன்னான், மாதவன்..இப்போது ஞானத்துக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை பழக்க பட்டது போல் ஆகிவிட்டது... அதுவும் அந்த பெண்ணுக்கு இவனை விட வயது அதிகம், தன் பதவி உயர்வுக்காக கல்யாணம் பண்ணிக்குறான், என்பதையும் உணர்ந்தாள், ஞானம்.."அம்மா அப்புறம், கல்யாணத்துக்கு சொந்த காரங்க யாரையும் கூப்பிடுல, கோயில்ல சிம்பிளா கல்யாணம் வைக்க போறோம், சரியா", சரிடா. உன் தங்கச்சியை கூப்பிடுல..தங்கச்சியா..அப்படி ஒருத்தி இருக்கானு..நான் பொண்ணு வீட்டுல சொல்லவே இல்ல, நீ வேற...ஒன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் நா மேனேஜர் ஆஹ் ப்ரோமோட் ஆனதுனால புது பிளாட், கொடுத்துருக்கங்கா....அப்படியா சந்தோசம் டா மாதவா..இனிமே நாம அங்க போய்டுலமா..


"இல்லம்மா, அது வந்து , அது ஒன் பெட் ரூம் பிளாட் உனக்கு வேற வீடு தான் பாக்கணும், என்று பெரிய இடியை தூக்கி போட்டான்"...இப்போது தான் தன் சொந்த காரர்கள் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது, ஞானதுக்கு , இவர்களுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தேன் ஆனால், இவர்கள் என்று.மனதிற்குள் நினைத்து கொண்டாள் ஞானம்...

கல்யாணமும் முடிஞ்சது, நாட்களும் ஓடியது, மாதவனும் ஞானத்துகாக ஒரு பெரிய வீடு பார்த்தான்....அது தான்...."முதியோர் இல்லம்"....

ஞானத்தின் கண்களின் ஓரம் கண்ணீர் வடிந்தது, எவ்வளவு கஷ்டத்திலும் அழுததில்லை ஞானம்.. இன்று அழுகிறாள்..."அம்மா, இங்க எல்லாம் பேசிட்டேன், பணமும் கட்டிட்டேன்"..இவங்க நல்லா, பாத்துப்பாங்க..
நான் வாரம் ஒரு முறை வந்து உன்ன பார்க்குறேன்.. ஓகே வா...என்று சொல்லிவிட்டு போனவன் தான் மாதவன்...

"இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது, போனவன் வந்து பார்க்கவில்லை, இன்னொருவள் எங்கே இருக்கிறாள் என்பதே தெரியவில்லை.." இருந்தாலும் நாம் மட்டும் இப்படி இல்லை, இங்கே பலரும் இப்படித்தான் என்று அங்கே உள்ளவர்களை பார்த்து கொஞ்சம் மன ஆறுதல் பட்டுக்கொண்டாள்...ஞானம்...

தினமும் நம் மகனோ,மகளோ யாராவது நம்மை பார்க்க வருவார்கள், என்று வாசற்கதவையை நோக்கி காத்து இருந்தால் இந்த பைத்தியக்காரி...இன்னும் பைத்தியகாரியாகவே...

(குறிப்பு:அனைவரும் நினைக்கலாம் தலைப்பு பிச்சைக்காரி என உள்ளது, என்று ஆம், ஞானம் பிச்சைக்காரி பாசத்தை எதிர்பாக்கும் பிச்சைக்காரி)

-முகம்மது முஃபாரிஸ்.மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (2-Mar-18, 10:04 pm)
Tanglish : pichchaikkaari
பார்வை : 347

மேலே