குப்பத்தொட்டி

அதிகாலை சாலை
ஆட்களும் ஆடம்பரத்தின்
ஆக்கிரமிப்பும் அற்றிருந்தது!!

நாக்கைத் தள்ளும் நாற்றம்
முகத்தை சுளிக்கச் செய்ய
நான் மூக்கை பிடித்தபடி
முன்னேறினேன்.....

அங்கு தன்மமனத்தைக் கமழ்ந்து
கொண்டிருந்தது சாலையின்
மூலைகளை குத்தகைக்கு எடுத்தக் குப்பைத்தொட்டி ஒன்று..

ஒரமாய் நின்று
பரிதாபம் கூறி
பாவம் தெரிவித்தேன்....

உனக்கூ மட் டும் வாழ்வில்
இன்பமே இல்லையே!
நாய்களுடனும் நாற்றத்துடனுமே
நகர்கின்றன உன் நாட்களென!!

எனை எள்ளி நகைத்த அது
எனக்கும் உண்டு
இன்பதருணம் என்று உரைத்தது!!!

ஆச்சரியத்தில்
அடுக்கினேன்
வினாவை!!

எது உன் இன்பதருணம்?!
எது உன் இன்பதருணம்?!

ஊசிப்போன உதவாத
பண்டிகைக்கால பதார்த்தங்கள்
உன் பாத்திரத்தை நிரப்புமே
அதுவா உன் இன்பதருணம்?!

இல்லை அழுகிப்போன காய்கறிகளால் அலைந்து திரியும்
கால்நடைகளுக்கு அழகாய் விருந்தளிப்பாயே அதுவா?!

எச்சில் இலை மெத்தையில்
நாய்களுக்கு சொச்சதூக்கம்
தருவாயே அத்தருணமா?!

இல்லை பதுக்கி வைத்த
பணமூட்டைகள் உன்
பாக்கெட்டுக்குள் வீழுமே...
அத்தருணமா?!

நல்ல காதலாயினும்
கள்ள காதலாயுனும்
நசுங்கி கிழிந்த கடிதங்களின்
இரகசியம் காப்பாயே...
அத்தருணமா?!

துப்பறிவோர்க்கு
துருப்புச்சீட்டாய்
துலங்குவாயே அத்தருணமா?!

ஊதிமுடித்த சிகரெட் துண்டில்
பாதி நீ பங்கு கொள்வாயே!!
அத்தருனமா?!

சொல்!
எது உன் இன்பதருணம்?!
சொல்!

கைகொட்டி சிரித்த அது
கரத்தை இழுத்து
காதில் கூறியது!!

மசக்கையால் மாங்காய் கடிக்காமல்
பிரசவத்தால் வலியால் துடிக்காமல்
பத்துமாதம் கூட சுமக்காமல்
பத்தியம் கூட இருக்காமல்

அன்னையென்ற அந்தஸ்தை
அடைகிறேனே அதுதான்
என் இன்பதருணம் என்று!!

நான் நாணத்துடன் நகர்ந்தேன்
நாற்றம் வீசியது என்மேல்!!!!

எழுதியவர் : விமுகா (4-Mar-18, 9:27 am)
சேர்த்தது : விமுகா
பார்வை : 105

மேலே