காதலர்கள் கவனத்திற்கு பகுதி 5

1 சாரல் பெய்யத் துவங்கிய
ஓர் மாலை வேளையில்தான்
முதல்முதலாக
உன் உடையும் என் உடையும்
உரசிக் கொள்ளும் நெருக்கத்தில்
உன் குடைக்குள்
என்னை அனுமதித்தாய்
சாரல் வலுப்பெற்றபோது
மண்வாசனை சுகமாக இருக்கிறது என்றாய்
உன் வாசனையும்தான் என்றேன்
கொஞ்சம் கோபித்து
பின் அதிகமாகவே வெட்கப்பட்டாய்

2 உனக்குப் பிடித்தவர்கள் யாருக்காவது
என்னைப் பிடிக்காமல் போனால்
உனக்குப் பிடிக்காமல் போகிறது
அவர்களை என்கிறாய்

எனக்குப் பிடிக்காதவர்கள் யாருக்காவது
உன்னைப் பிடித்துப்போய்விட்டால்
எனக்குப் பிடித்துப்போகிறது
அவர்களை என்கிறேன்
எப்படியோ இருவரும்
காதலைச் சொல்லிவிட்டோம்

3 அடிக்கடி என் யூகங்களைப்
பொய்யாக்கி விடுகிறாய்
உன்னைச் சிரிக்கவைக்க முயன்றால்
வெட்கப்பட்டுவிடுகிறாய்
வெட்கப்படவைக்க முயன்றால்
சிரித்துவிடுகிறாய்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (6-Mar-18, 8:51 pm)
பார்வை : 149

சிறந்த கவிதைகள்

மேலே