சந்திப்பு

சந்திப்பு

அருகில் நின்று ரசித்து கொண்டிருந்தேன்

அவன் காணாத வண்ணம் , அவனழகை...

பிடறியிலும் கண்கள் உண்டு போலும்

படக்கென திரும்பி பார்த்ததை பார்த்து விட்டான்..!

பார்க்காதது போல் பாசாங்கு செய்து

பின்னங்கால் பிடறிதட்ட ஓடிட நினைத்தேன்

அழைத்து விட்டான்...திரும்பியாக வேண்டுமே!

அச்சம் வெட்குமளவு அற்புத குரல்!

இதயக் கூடத்தில் எதிரொலித்த குரல்!

கேட்டுக் கேட்டு சலிக்காத குரல்!

கேட்டிட வேண்டுமென தவித்த குரல்!

கேட்டுக் களிப்புறவென துடித்த குரல்!

இன்று என் பெயர் சொல்லி அழைகின்றது!!!

இதுவரை கேட்டிராத இனிய ராகம் இது!!!

இசை வந்த திசை நோக்கி திரும்பினேன்.

அதற்குள் எதிரே வந்து நின்று விட்டான்.

என்னிடம் தான் ஏதேதோ கேட்கிறான் போலும்!

உதடுகள் ஒன்றோடு ஒன்று உரசி உரசி

ஒலியெழுப்பிக் கொண்டு இருக்கின்றன போலும்!

மூளையோடு செவிகளை இணைக்கும்

முக்கிய நரம்புகள் முடங்கி விட்டன போலும்!

செவ்விதழ்களில் இருந்து சிந்திய வார்த்தைகள்

செவிப்பறையினை எட்ட வில்லை போலும்!

கேட்டுக் கொண்டிருந்த குயிலின் கானம்

காற்றில் தேய்ந்து விட்டது போலும்!

அரவம் அற்ற நிசப்தத்தில் கேட்டதெல்லாம்

கண்களுக்கு எதிரே தெரிந்த , அவனது

கண்கள் எழுப்பிய கவின் இசையே!

கீழிமையைப் பிரிந்த துயரம் தன்னில்

மேலிமை எழுப்பும் சின்ன விசும்பலே!

தடையாய் இருந்த கரு விழியைத் தோற்கடித்து

தழுவிய மேலிமையின் வெற்றி முழக்கமே!

விழித்திரையாகிய வானத்தில் கரு விழியாகிய

கருமேகம் விழி நீரை வெளியிட்ட மெல்லிசையே!

வெளிறிய வெண் வானத்தில் உதித்த

கருப்பு நிலவாம் கருவிழி நகன்ற நாதமே!

வண்ணமற்ற விழிநீரால் வண்ண ஓவியமாய்

என் பிம்பம் வரைந்த இமைத்தூரிகையின் அசைவே!

அவன் கண்ணழகில் என் பெண்ணழகு கண்டு

ரசித்து லயித்து மதியற்று மயங்கிப் போன

மடந்தை, எனது கவனத்தை ஈர்த்திட முயன்ற

கண்ணிமைகள் செய்திட்ட கைத்தட்டல்களே!

அவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம்

அனிச்சையாய் அசைந்து கொண்டிருந்தது தலை!

கேட்டது அவன் என்பதாலோ என்னவோ

கேளாது ஆமோதித்துக் கொண்டிருந்தது மனம்!

கேட்டது இன்னது என்று இனங்கண்டு

செவிப் பறைகள் மூளைக்கு அனுப்புவதற்குள்

விடை பெற்று வெகுதூரம் சென்று விட்டான்!

விழிகள் மட்டும் அவனது காலடி சென்ற

வழியைப் பின் தொடர்ந்து போக....

பசையிட்ட தாள் அசைய மறுப்பது போல்

நகராது நின்று நினைவலைகளில் திளைத்திருந்தேன்..!!!

எழுதியவர் : ரம்யா நம்பி (8-Mar-18, 11:26 pm)
சேர்த்தது : ரம்யா நம்பி
Tanglish : santhippu
பார்வை : 194

மேலே